HBD Arun Pandian: ‘அந்தி நேர தென்றல் காற்று.. அன்பிற்கினியாள் அருண் பாண்டியன்’ பிறந்தநாள் இன்று!
இனி நான் என் வயதிற்கு ஏற்ற படங்களில் நடிப்பேன். விக், மேக்கப், லிப்ஸ்டிக் போட்டு நடிக்கவே மாட்டேன். என் தோற்றத்திற்கு ஏற்றது போல் ஷேவ் பண்றது மிசை வைப்பது இப்படி மட்டுமானால் நடிப்பேன் என்று மனம் திறந்தார் அருண்பாண்டியன்
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90 களில் துள்ளல் நடிப்பு இளமைக்கே உரித்தான மிடுக்கு, என தன் பாந்தமான நடிப்பால் ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் அருண்பாண்டியன். இந்நிலையில் இன்று அவர் தன் 65 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்த நாளில் அவர் குறித்த தகவல்களை இங்கு பார்க்கலாம்.
பிறப்பு
நடிகர் அருண்பாண்டியன் அப்போதைய திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் 13 ஜூலை 1958ல் பிறந்தார். இவரது தந்தை முன்னாள் ராணுவ வீரர். மெட்ராஸ் பல்கலையில் எக்கனாமிஸ் படித்தார்.
திரைப்பயணம்
இவர் 1985ல் சிதம்பர ரகசியம் படத்தின் வழியாக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தார். அடுத்த ஆண்டே வெளியான ஊமை விழிகள் படம் அருண் பாண்டியனை ரசிகர்கள் மத்தியில் நெருக்கமாக கொண்டு சேர்த்தது. இதைத்தொடர்ந்து விலங்கு, இணைந்த கரங்கள், அதிகாரி என அடுத்தடுத்து பல வெற்றி படங்களில் தன் துள்ளல் நடிப்பால் அசத்தி வந்தார். இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
குடும்பம்
இவருக்கு விஜயாபாண்டியன் என்ற மனைவியும் கவிதாபாண்டியன், கிராணா பாண்டியன், கீர்த்தி பாண்டியன் என்ற 3 மகள்கள் உள்ளனர். இவரது அண்ணன் மகள் நடிகை ரம்யா பாண்டியன்.
இவர் தனது மகள் கீர்த்தி பாண்டியனுடன் இணைந்து அன்பிற்கினியாள் என்ற படத்தில் நடித்திருந்தார். இடையில் நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தாலும், இயக்கம், தயாரிப்பு விநியோகம் என இந்த சினிமாவிற்குள்தான் இயங்கி கொண்டிருந்தார்.
அரசியல்
நடிகர் அருண் பாண்டியன் கடந்த 2011ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழக வேட்பாளராக நின்று வெற்றி பெற்றார். ஆனால் 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன் தன் பதவியை ராஜினாமா செய்து விட்டு 2016 பிப்ரவரி 25ல் அதிமுகவில் ஜெயலலிதா முன்னிலையில் இணைந்தார்.
மாறா அன்பு
அருண்பாண்டியன் கருத்து வேறுபாடு காரணமாக தேமுதிகவில் இருந்து விலகி இருந்தாலும் எப்போதும் நடிகர் விஜயகாந்த் குறித்து தவறாக எதுவும் பேசியது இல்லை. நேர்காணல் ஒன்றில் அருண் பாண்டியன் விஜயகாந்த் குறித்து பேசுகையில் விஜயகாந்துடன் எனக்கு கருத்து வேறுபாடு வந்தது. ஆனால் அவர் குறித்து ஒரு முறை கூட நான் தவறாக பேசியது கிடையாது. அவருக்கு உடல் நிலை சரியில்லாததை பார்க்கும் போதே கஷ்டமாக உள்ளது. அவர் ஒரு ஜென்டில் மேன். அவர் ஒரு நல்ல மனிதர். அவர் மாதிரி எல்லாம் இன்றைய காலகட்டத்தில் யார் இருப்பான் என்று தெரியவில்லை என்றார்.
அதே போல் தான் நடித்த இணைந்த கரங்கள் குறித்து பேசும்போது அந்த மாதிரி காட்சிகள் எல்லாம் இப்ப பண்ணவே முடியாது. அந்த ஹைட்டில் இருந்து பார்த்தால் எங்க பாறை எங்க தண்ணீனே தெரியாது அது எல்லாம் கஷ்டம். அப்ப ஏதோ கலை தாகத்தால் செய்து விட்டேன். இப்ப நினைத்து பார்த்தால் கஷ்டம் தான் என்றார்.
நோ விக், மேக்கப், லிப்ஸ்டிக்
அன்பிற்கினியாள் படம் குறித்து பேசுகையில் அது தந்தை மகள் குறித்த படம். இனி நான் என் வயதிற்கு ஏற்ற படங்களில் நடிப்பேன். விக், மேக்கப், லிப்ஸ்டிக் போட்டு நடிக்கவே மாட்டேன். என் தோற்றத்திற்கு ஏற்றது போல் ஷேவ் பண்றது மிசை வைப்பது இப்படி மட்டுமானால் நடிப்பேன் என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
நடிப்பில் இருந்து சற்று விலகி இருந்தாலும் இயக்கம்,தயாரிப்பு, விநியோகம், அரசியல், கொரோனா காலத்தில் விவசாயம் என பல தளங்களில் கலக்கும் நடிகர் அருண் பாண்டின் பிறந்த நாள் இன்று. இந்த நாளில் விரும்பம் போல் மேலும் பல படங்களில் நடித்து மகிழ்ந்திருக்க வாழ்த்துக்கள் சார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்