Good night Movie Review:குறட்டையால் கொட்டும் ஹுயூமர்; பழமைவாதத்திற்கு எதிரான பாடம்;‘குட் நைட்’ படம் எப்படி? - விமர்சனம்!
மிடில் கிளாஸ் குடும்ப பையன் மோகனுக்கு தூங்கும் போது, தான் விடும் குறட்டை பெரும் பிரச்சினையாக இருக்கிறது. அந்தக் குறட்டையால் குடும்பம், நண்பர்கள், அலுவலம் உள்ளிட்ட பல இடங்களில் அவமானப்படும் அவனை ஒரு கட்டத்தில் அதனை காரணம் காட்டி காதலியும் கைவிட்டு சென்று விடுகிறாள்.
‘விக்ரம் வேதா’ ‘ ஜெய் பீம்’ உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்த நடிகர் மணிகண்டன் கதாநாயகனாக நடித்து நாளை (12-05-2023) அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘குட் நைட்’. இந்தப்படத்தில் இவருக்கு ஜோடியாக ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தின் மூலம் பிரபலமடைந்த நடிகை மீதா ரகுநாத் நடித்திருக்கிறார்.
இவர்களுடன் ரமேஷ் திலக், பாலாஜி சக்திவேல், ரேச்சல் ரெபேக்கா, பக்ஸ், ஜெகன் கிருஷ்ணன் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ஷான் ரோல்டன் இசையமைத்து இருக்கும் இந்தத்திரைப்படத்தை விநாயக் சந்திரசேகரன் இயக்கி இருக்கிறார். ஜெயநாத் சேது மாதவன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.
கதையின் கரு:
மிடில் கிளாஸ் குடும்ப பையன் மோகனுக்கு தூங்கும் போது, தான் விடும் குறட்டை பெரும் பிரச்சினையாக இருக்கிறது. அந்தக் குறட்டையால் குடும்பம், நண்பர்கள், அலுவலம் உள்ளிட்ட பல இடங்களில் அவமானப்படும் அவனை ஒரு கட்டத்தில் அதனை காரணம் காட்டி காதலியும் கைவிட்டு சென்று விடுகிறாள்.
இப்படி விரக்தியின் உச்சத்தில் வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கும் மோகனின் வாழ்க்கையில் தன்னந்தனியாக வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கும் அனு அறிமுகம் ஆகிறாள். அந்த அறிமுகம் நாளடைவில் பழக்கமாக மாறி இருவரும் காதலில் திளைக்க அது கல்யாணத்தில் முடிகிறது.
அனுவிடம் கடைசி வரை தன்னுடைய குறட்டை பிரச்சினையை மறைத்து வந்த மோகனின் இரவு வாழ்க்கையில் அது பூகம்பமாக வெடிக்கிறது. அதன் பின்னர் என்ன ஆனது? மோகன் தன் குறட்டைப்பிரச்சினையை சரி செய்ய என்ன செய்தான்? குறட்டைப்பிரச்சினையை அனு எப்படி கையாள்கிறாள்? இவர்களுக்குள் சிக்கித் தவிக்கும் காதல் என்ன ஆனது? உள்ளிட்ட கேள்விகளுக்கான பதில்களே ‘குட் நைட்’ படத்தின் கதை.
அம்மா, அக்கா, மாமா, தங்கை இவர்களுக்கு நடுவில் வாழும் அச்சு அசல் மிடில் கிளாஸ் பையனாக மணிகண்டன். காமெடி, கோபம், நெகிழ்வுத்தன்மை, ஆற்றாமை, விரக்தி, நடுத்தர குடும்ப பையனுக்கான இயல்பு என அனைத்து உணர்ச்சிகளிலும் மணி நடிப்பில் பின்னி பெடல் எடுத்து இருக்கிறார். அனுவுடனான காதல் காட்சிகள், குறட்டை பிரச்சினையை தீர்க்க அவர் எடுக்கும் முயற்சிகள், ஆற்றாமையால் அழும் இடங்கள், கம்பெனி பாஸிடம் எகிறும் இடம் என பல இடங்களில் சபாஷ் போட வைக்கிறார். பாராட்டுகள் மணி. கதாநாயகியாக மீதா. கள்ளம் கபடம் இல்லாமல் அவர் வெளிப்படுத்தி இருக்கும் நடிப்பு மிகச்சிறப்பு.
மாமாவாக ரமேஷ் திலக். காமெடியில் ஒரு பக்கம் அவர் கலக்கினாலும், குடும்பத்தை அரவணைத்துக்கொண்டு செல்வதிலும், மனைவி ரேச்சலிடம் அடங்கிப்போகும் இடத்திலும் இப்படி ஒரு மாமா நமக்கில்லையே என்ற உணர்வை கொடுத்து விடுகிறார். ரேச்சலின் நடிப்பு யதார்த்தத்தின் உச்சம்.
தாத்தா பாட்டியாக நடித்திருக்கும் பாலாஜி சக்திவேலும், கெளசல்யா நடராஜனுக்கும் இடையே உள்ள புரிதலும், காதலும் ரசிப்பின் ரகம்.
கறாரான பாஸாக நடித்திருக்கும் பக்ஸ் நடிப்பு வழக்கம் போல் சிறப்பு. இதர கதாபாத்திரங்களும் கொடுத்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்து இருக்கிறது.
இப்படி ஒரு அழகான கதையை எழுதியது மட்டுமல்லாமல் அதனை இதயத்துக்கு நெருக்கமாக வரும் விதத்தில் திரையில் காட்சிப்படுத்தியதற்காக முதலில் இயக்குநர் விநாயக் சந்திரசேகரனுக்கு பாராட்டுகள். தான் எழுதிய ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் கனகச்சிதமான நடிகர்களை அவர் தேர்வு செய்ததிலேயே அவர் பாதி ஜெயித்து விட்டார். மீதி வேலையை படம் பார்த்துக்கொண்டது.
படத்தை பார்த்து விட்டு வெளியே வரும் நமக்கு எல்லா கதாபாத்திரங்களுமே மனதில் அழுத்தமாக பதிந்து விடுகிறது. படத்தில் அந்த அளவுக்கான ஸ்பேசையும் முக்கியத்துவத்தையும் அனைவருக்கும் கொடுத்திருக்கிறார் இயக்குநர்.
படத்தின் காட்சிகள் ஒவ்வொன்றும் நம் வீட்டில் நடப்பது போன்ற உணர்வை கொடுக்கிறது. படத்தின் பல காட்சிகள் எமோஷனின் உச்சத்தில் ட்ராவல் செய்தாலும், அதற்குள் ஒளிந்திருக்கும் நகைச்சுவை நம்மை துளியும் கூட சோர்வடையாமல் பார்த்துக்கொண்டது. குறிப்பாக கர்ப்பிணியாக ரேச்சல் எழுப்பும் கேள்விகள் சமுதாயம் கட்டமைத்திருக்கும் பழமை வாதத்திற்கு தேவையான பாடம். அதே போல மணியின் தங்கைக்காக அவனின் காதலினிடம் மீதா வைக்கும் வாதம் அதகள ரகம். மொத்ததில் ‘குட் நைட்’ .. கட்டுமரக்கப்பலில் செல்லும் அழகான கடல்பயணமாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
டாபிக்ஸ்