தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dr Ramadoss Biopic: ’டாக்டர் ராமதாஸ் ஆக நடிக்கும் சரத்குமார்?’ விரைவில் படமாகிறது வாழ்கை வரலாறு!

Dr Ramadoss Biopic: ’டாக்டர் ராமதாஸ் ஆக நடிக்கும் சரத்குமார்?’ விரைவில் படமாகிறது வாழ்கை வரலாறு!

Kathiravan V HT Tamil
Jan 24, 2024 12:20 PM IST

”ஏற்கெனவே பிரதமர் நரேந்திரமோடி, ஜெயலலிதா, என்.டி.ராமாராவ், ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்ட தலைவர்களின் வாழ்கை வரலாறுகள் திரைப்படமாக்கப்பட்டு உள்ளது”

மருத்துவர் ராமதாஸ்- நடிகர் சரத்குமார்
மருத்துவர் ராமதாஸ்- நடிகர் சரத்குமார்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டு போராட்ட வரலாற்றில் மருத்துவர் ராமதாஸின் பெயர் தவிர்க்க முடியாத பெயராக உள்ளது.  ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து மருத்துவக் கல்வி பயின்று மருத்துவர் ஆன அவர், எளிய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவம் பார்த்ததன் மூலம் சமூகத்தில் நற்பெயர் பெற்றார். 

1980களில் அவரது பார்வை மருத்துவ சேவையையும் தாண்டி சமூகநீதி மற்றும் இட ஒதுக்கீடு சார்ந்து சென்றது. தான் சார்ந்த வன்னியர் சமூகத்தின் நலனுக்காக வன்னியர் சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கிய அவர் 1987ஆம் ஆண்டில் வன்னியர் இட ஒதுக்கீட்டு போராட்டத்தை நடத்தி தமிழ்நாட்டையே ஸ்தமிக்க செய்தார். தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் சாலைகள் முழுவதும் போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இதில் ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 21 பேர் உயிரிழந்தனர். 

1989ஆம் ஆண்டில் நடந்த ஆட்சி மாற்றத்திற்கு பிறகு வன்னியர் உள்ளிட்ட நூற்றுக்குக்கும் மேற்பட்ட சமூகத்தினரின் மேம்பாட்டுக்காக ‘மிகவும் பிற்படுத்தப்பட்டோர்’ என்ற தனிப்பிரிவு உருவாக்கப்பட்டு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதற்கு மருத்துவர் ராமதாஸின் பங்கு மிக முக்கியமானது. 

போராட்டம் செறிந்த மருத்துவர் ராமதாஸின் வாழ்கை வரலாற்றை இயக்குநர் சேரன் இயக்க, லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தகவல் வெளியானது. இதற்காக மருத்துவர் ராமதாஸ் தொடர்பான செய்தி சேகரிப்பில் இயக்குநர் சேரன் ஈடுபட்டு வந்ததாக தகவல்கள் வெளியாகின. 

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படத்தில் மருத்துவர் ராமதாஸ் வேடத்தில் நடிகர் சரத் குமார் நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இயக்குநர் சேரன் இயக்கத்தில் தற்போது வெளியாகி உள்ள JOURNEY வெப்சீரீஸ் பலரது வரவேற்பை பெற்றுள்ளது. இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏற்கெனவே பிரதமர் நரேந்திரமோடி, ஜெயலலிதா, என்.டி.ராமாராவ், ஜெகன்மோகன் ரெட்டி உள்ளிட்ட தலைவர்களின் வாழ்கை வரலாறுகள் திரைப்படமாக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

மருத்துவர் ராமதாஸின் திரைப்படம் உருவாவது குறித்த செய்தி பாமக தொண்டர்கள் இடையே வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்