Alia Bhatt: சண்டை போட நினைத்த ஆலியா.. அட்வைஸ் செய்து மாற்றிய டைரக்டர்.. இதுதான் முக்கிய காரணமாம்!
Alia Bhatt: நடிகை ஆலியா பட் அதிரடி சண்டைக் காட்சிகளில் நடிக்க விரும்பியதாகவும், இயக்குநர் ராஜமௌலி கொடுத்த அறிவுரையால் தற்போது ஒரு கதையை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிககளில் ஒருவர் ஆலியா பட். தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான மகேஷ் பட்டின் மகளான இவர், 2012ம் ஆண்டு வெளியான ஸ்டூடன் ஆப் தி இயர் திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.
மளமளவென வளர்ந்த நடிகை
பின், ஹைவே, உட்தா, டியர் ஜிந்தகி, கல்லி பாய், ராக்கி ராணி, கங்குபாய் கத்தியவாடி, 2 ஸ்டேட்ஸ், பிரம்மாஸ்திரா, ஆர்ஆர்ஆர் போன்ற பல திரைப்படங்களில் நடித்து பாலிவுட்டின் சிறந்த நடிகைக்கான பட்டியலில் இடம் பிடித்து வருகிறார்.
காதல், கல்யாணம், கெரியர்
இவர், நடிகர் ரன்பீர் கபூரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் தான் தன் கணவர் மீது கொண்ட காதலின் வெளிப்பாடாக தனது பெயரை ஆலியா பட் கபூர் என மாற்றியுள்ளார். அத்துடன், கணவர் ரன்பீர் கபூருடன் இணைந்து, லவ் அண்ட் வார் படத்திலும் நடித்துள்ளார். இந்தப்படத்தை பத்மாவதி, பாஜிராவ் மஸ்தானி புகழ் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ளார்.
காதல் , திருமணம், குழந்தை என ஒருபுறம் இருந்தாலும், ஆலியா பட் சினிமாத் துறையையும் விளம்பரத் துறையையும் பொருப்புடனே கவனித்து வருகிறார்.
ஆக்ஷன் திரில்லர் கதையில் ஆலியா
இந்த சமயத்தில் தான் ஆலியா பட், இயக்குநர் வாசன் பாலாவின் ஜிக்ரா எனும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருந்தார். ஆக்ஷ்ன் திரில்லர் கதைக்களமாக அமைந்துள்ள இந்தப் படத்தை தர்மா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து வரும் அக்டோபர் 11ம் தேதி திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆலியா, ஜிக்ரா படத்தில் தான் நடித்ததன் காரணத்தையும், இந்தப் படத்தின் தேர்வு எப்படி நடந்தது என்பதையும் கூறியுள்ளார்.
ஆலியா சொன்ன ரகசியம்
அந்த நிகழ்ச்சியில், நான் அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த திரைப்படத்தில் நடிக்க விரும்பினேன். இதை இயக்குநர் ராஜமௌலியிடம் நான் தெரிவித்தேன். எனது விருப்பத்தை கேட்ட இயக்குநர் ராஜமௌலி அறிவுரை ஒன்றை வழங்கினார். ஒரு படத்தில் சண்டைக் காட்சி என்பது படத்தை தாங்கி நிற்க உதவும் சுவராகவோ அல்லது தூணாகவோ இருக்கலாம். ஆனால், உணர்ச்சிகள் எனும் அடிப்படை வலுவாக இல்லாவிட்டால், படம் என்ற கட்டிடம் முழுமையாக விழுந்து விடும் எனக் கூறினார்.
இதனை மீண்டும் மீண்டும் மனதில் யோசித்து வந்த நிலையில், ஜிக்ரா படத்தில் நடிக்க முடிவு செய்தேன். இந்தப் படம் ஆக்ஷன் திரில்லர் மட்டுமின்றி, இயக்குநர் ராஜமௌலி கூறிய உணர்ச்சிகளையும் கொண்டுள்ளது. அதனால், இந்தப் படத்தை நான் தேர்வு செய்தேன். அதற்கு இயக்குநர் ராஜமௌலியின் அறிவுரை எனக்கு உதவியது என்றார்.
வாழ்த்திய ராஜமௌலி
முன்னதாக, நடிகை ஆலியா பட் நடித்துள்ள ஜிக்ரா படத்தின் ட்ரெயிலர் வெளியானது. அதைக் கண்ட இயக்குநர் ராஜமௌலி, நடிகை ஆலியா, தற்போதுவரை தன்னுடைய சிறந்த நடிப்பால் நம்மை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கிறார். அதை அவர் நிறுத்துவதே இல்லை எனக் கூறி பாராட்டி இருந்தார்.
பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஆலியா பட், இயக்குநர் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தில் சீதா எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தியில் வெளியான இந்தத் திரைப்படம் இந்தியா மட்டுமின்றி, உலகளவில் பல்வேறு ரசிகர்களைப் பெற்றது. இந்தப் படத்தின் இசை வெகுவாக பாராட்டப்பட்டு வந்த நிலையில், அதற்கு ஆஸ்கார் விருதும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.