KGF-2 பெரியப்பா அனுபவத்தை கொடுத்ததற்கு நன்றி - இயக்குநர் ஷங்கர்!
கே.ஜி.எஃப் இரண்டாம் பாகம் பார்த்த பிறகு இயக்குநர் ஷங்கர் பெரியப்பா அனுபவத்தைக் கொடுத்ததற்கு நன்றி என புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரசாந்த் நீல் இயக்கத்தில், கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான "கே.ஜி.எஃப்" திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றியை பெற்றது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் இப்படம் வெளியானது. சிறந்த ஆக்ஷன் படமாக வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல், வசூலிலும் சாதனை படைத்தது. இப்படம் சிறந்த சண்டைக் காட்சி, சிறந்த விஎஃப்எக்ஸ் (Vfx)ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் தேசிய விருது பெற்றது.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, "கே.ஜி.எஃப்" இரண்டாம் பாகம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு ஏப்.14ஆம் தேதி உலகெங்கிலும் தியேட்டர்களில் வெளியானது. எதிர்பார்த்த படியே இப்படம் இந்திய அளவில் வெளியான வசூலில் ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது. அந்த வகையில் ஆயிரம் கோடி வசூலித்த 4ஆவது படம் என்ற சிறப்பை பெற்றுள்ளது.
இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான இப்படம் தொழில்நுட்ப ரீதியாக ரசிகர்களை மட்டுமல்ல திரைத்துறையினரையும் கவர்ந்துள்ளது. இந்தியா முழுக்க வசூலை வாரிக்குவித்துள்ள இப்படம் வசூல் ரீதியாக பல சாதனைகளையும் படைத்துவருகிறது. இதன் மூன்றாம் பாகத்துக்கு தற்போதே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் கேஜிஎஃப் 2 படத்தைப் பார்த்த பிரபல இயக்குநர் ஷங்கர் இப்படத்தை பாராட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது, “படத்தில் கதைசொல்லும் விதம், திரைக்கதை மற்றும் எடிட்டிங் ஆகியவை இருக்கையின் நுனியில் உட்கார வைக்கும் அளவுக்குச் சிறப்பாக உள்ளது.
வசனம்,சண்டைக்காட்சிகளில் இண்டர்கட் ஷாட்டை பயன்படுத்தியிருப்பது துணிச்சலான முடிவு. யஷ்க்காக மாஸ் காட்சிகளுக்கான நடைமுறையை மாற்றியுள்ளீர்கள். பிரஷாந்த் நீலுக்கு நன்றி. பெரியப்பா அனுபவத்தைக் கொடுத்ததற்கு நன்றி”என குறிப்பிட்டுள்ளார்.
டாபிக்ஸ்