55 Years of Poova Thalaiya: தலையாட்டி மருமகன், அதிகாரம் கொண்ட மாமியார்! ஈகோ சண்டை - பாலசந்தரின் சிறந்த கிளாசிக் படம்-director balachander best classic movie poova thalaiya completed 55 years of its release - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  55 Years Of Poova Thalaiya: தலையாட்டி மருமகன், அதிகாரம் கொண்ட மாமியார்! ஈகோ சண்டை - பாலசந்தரின் சிறந்த கிளாசிக் படம்

55 Years of Poova Thalaiya: தலையாட்டி மருமகன், அதிகாரம் கொண்ட மாமியார்! ஈகோ சண்டை - பாலசந்தரின் சிறந்த கிளாசிக் படம்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 10, 2024 02:55 PM IST

மாமியார் - மருமகன் இடையிலான ஈகோ சண்டையில், யார் பக்கம் நியாயம் இறுதியில் ஜெயித்தது யார் என்பதை காமெடியுடன் கலந்து சொன்ன படம் தான் பூவா தலையா. பாலசந்தரின் சிறந்த கிளாசிக் படங்களில் வரிசையில் இந்த படத்துக்கு தனியொரு இடமுண்டு.

பாலசந்தரின் சிறந்த கிளாசிக் படமான பூவா தலையா பட காட்சி
பாலசந்தரின் சிறந்த கிளாசிக் படமான பூவா தலையா பட காட்சி

அந்த வகையில் பாலசந்தரின் வித்தியாசமான படங்களில் ஒன்றாக இருந்து வரும் பூவா தலையா படம் காமெடியை மையமாக கொண்ட சீரியஸ் கதையாக இருப்பதோடு, ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளையும் பெற்றது.

மாமியார் மருமகன் சண்டை

குடும்பம் என்றாலே பிரதானமான விஷயமாக பேசப்படுவது மாமியார் - மருமகள் ஆகியோருக்கு இடையிலான சண்டை தான், இந்த பிரச்னை திருமணம் என்ற பந்தம் தொடங்கியதில் இருந்து இன்று வரையில் தொடர்ந்து வரும் தொடர்கதையாகவே இருந்து வருகிறது.

ஆனால் பூவா தலையா படத்தில் சற்று வித்தியாசமாக மாமியார் - மருமகன் இடையே இருக்கும் மோதலையும், ஈகோ பிரச்னையையும் பாலசந்தர் சொல்லியிருப்பார். மருமகன் என்ற தனது மகளை கட்டிய மாப்பிள்ளை என்று இல்லாமல் அவரது தம்பியும், சின்ன மருமகனுக்கும், தனது இரண்டாவது மகளை கட்டிக்கொண்ட மருமகனுக்கும் இடையே நிகழும் மோதலில் யார் ஜெயித்தார்கள் என்பது தான் படத்தின் கதை.

இதில் மாமியாராக நடிகை வரலட்சுமி, பர்வதம்மா என்ற கதாபாத்திரத்திலும், அவரிடம் நேருக்கு நேர் மோதும் மருமகன்களாக ஜெய்சங்கர், நாகேஷ் ஆகியோரும் நடிப்பில் பட்டைய கிளப்பியிருப்பார்கள். கதையின் நாயகன் என்னவோ ஜெமினி கணேசனாக இருந்தாலும் படத்தின் திரைக்கதையும், பெரும்பாலான காட்சிகளும் ஜெய்சங்கர், நாகேஷ், வரலட்சுமி ஆகியோரை சுற்றியே நகரும். இதில் இவர்கள் மூவரும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி கைதட்டலும் பெற்றிருப்பார்கள்.

குறிப்பாக குதிரை காரனமாக வரும் நாகேஷின் நடிப்பு பாராட்டுகளை பெறும் விதமாக இருந்தது. இந்த பட கதையின் சாயலில் வைத்து தான் மறைந்த இயக்குநர் ராமநாரயணன் கந்தா கடம்பா கதிர்வேலா என்ற படத்தை இயக்கியிருப்பார். இதில் நாகேஷ் கதாபாத்திரத்தை போல் வடிவேலு தோன்றியிருப்பார்.

வெண்ணிற ஆடை நிர்மலா, எம்ஆர்ஆர் வாசு, ஸ்ரீகாந்த், மனோரமா, சச்சு, டிபி முத்துலட்சுமி, ராஜஸ்ரீ உள்பட பலரும் பூவா தலையா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். சச்சு இந்த படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் தோன்றியிருப்பார்.

அதேபோல் படத்தின் பிரதான கதாபாத்திரங்களாக வரும் ஜெமினி கணேசன் பெயர் கணேசன், ஜெய்சங்கர் பெயர் சங்கர், நாகேஷ் பெயர் நாகேஷ், வெண்ணிற ஆடை நிர்மலா பெயர் நிர்மலா என அவர்களது ஒரிஜனல் பெயரே கதாபாத்திரத்துக்கும் வைக்கப்பட்டிருக்கும்.

பாலசந்தர் டச்

பல்வேறு மேடை நாடகங்களை பாடமாக்கிய பாலசந்தர், நாடகம் போன்ற இந்த பூவா தலையா கதையையும் அற்புதமான திரைக்காவியம் ஆக்கியிரு்பபார். குறிப்பாக தனது படங்களில் காட்சி வழியேவும். ஏதேனும் பொருள்களை அல்லது செய்கை வழியேவும் கதாபாத்திர தன்மையையும், சூழலையும் விளக்கும் மேஜிக்கை இந்த படத்திலும் பல இடங்களில் செய்திருப்பார்.

பீரோவில் தொங்கிக் கொண்டிருக்கும் சாவிக்கொத்து, தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை ஆகியவற்றை காட்டி, சாவிக்கொத்துக்கு வரலட்சுமி குரலும், பொம்மைக்கு ஜெமினியின் குரலும் ஒலிக்க வைத்திருப்பார். இதன் மூலம் ஜெமினி மாமியாருக்கு அடங்கி நடக்கிற மருமகன் என்பதை சொல்லாமல் உணர்த்தியிருப்பார். இதுபோன்ற பல்வேறு பாலசந்தர் டச் படத்தில் ஆங்காங்கே நிறைந்திருக்கும்.

படம் முழுவதிலும் ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களது நியாயத்தை வெளிப்படுத்தும் விதமாகவும், காதாப்த்திரங்களுக்கு இடையிலான மோதலுடனும், சவால் விடுவதுமாகவும் இருந்து வரும். இறுதியில் நியாயமே வெல்லும் விதமாக படத்தை சுபமாக முடித்திருப்பார்.

எம்எஸ்வி இசை

படத்துக்கு வாலி பாடல் வரிகள் எழுத எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருப்பார். அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. பூவா தலையா, மதுரையில் பறந்தா பாடல் சிறந்த கிளாசிக் பாடலாக இருந்து வருகிறது.

ரசிகர்கள் வெகுவாக கவர்ந்த பூவா தலையா சூப்பர் ஹிட் படமாக மாறியது. இந்த படத்துக்கு பின்னர் மாமியார் - மருமகன் சண்டையை மையாமாக வைத்து பல படங்கள் வந்தாலும் அதற்கான தொடக்க புள்ளியாக இருந்த பூவா தலையா வெளியாகி இன்றுடன் 55 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.