The Kerala Story: தமிழ்நாட்டில் தி கேரளா ஸ்டோரிக்கு அரசு தடையா? - உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கூறியது என்ன?
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் 11 ஆவது நாளில் 10.30 கோடி வசூல் செய்துள்ள நிலையில் மொத்தமாக 147.04 கோடி வசூல் செய்து இருக்கிறது
கேரளாவில் 32 ஆயிரம் பெண்கள் காணாமல்போனதையொட்டிய கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் கேரள இந்து பெண்கள் இஸ்லாமிய ஆண்களால் மூளைச்சலவை செய்யப்பட்டு, காதல் என்ற பெயரில் திருமணம் செய்துகொள்ளப்பட்டு, மதம் மாறி எப்படி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத மிஷன்களில் பணியமர்த்தப்படுகிறார்கள் என்பதை சித்தரிக்கிறது.
இந்தத்திரைப்படத்தை சுதீப்தோ சென் இயக்கியுள்ளார். இந்தப்படம் கடந்த மே 5 ஆம் தேதி வெளியானது. இந்தத்திரைப்படத்திற்கு கேரளா மாநில முதல்வர் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். திரைப்படத்தை வெளியிட தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என அறிவித்ததை படம் சொன்ன தேதியில் வெளியானது. ’
ஆனால் தொடர்ந்து போராட்டங்கள் வலுத்த மேற்கு வங்கத்தில் இந்தத்திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. தமிழகத்தில் சில திரையரங்குகளில் இந்தப்படம் திரையிடப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்பு நலன் கருதி திரையரங்கங்கள் அந்தப்படத்தை தூக்கிவிட்டு வேறு படத்தை திரையிட்டனர்.இன்னொரு பக்கம் மத்திய பிரதேசம் மற்றும் உத்திரபிரதேசத்தில் இந்தத்திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தடையை எதிர்த்து படக்குழு உச்சநீதிமன்றத்தை அணுகியது. இந்த வழக்கானது உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் கொண்ட அமர்வின் முன்னிலையில் அண்மையில் விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ பாதுகாப்பாக திரையிட எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தான அறிக்கையை சமர்பிக்குமாறு நீதிபதிகள் கூறினர்.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு சமர்பித்துள்ள அறிக்கையில், “ தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தமிழகத்தில் தடை விதிக்கப்படவில்லை. மாநிலம் முழுவதும் மொத்த 19 திரையரங்குகளில் படம் வெளியிடப்பட்டது.
அந்த திரையரங்குகளுக்கு காவல்துறை சார்பில் பாதுகாப்பும் அளிக்கப்பட்டது. ஆனால், தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தை பார்க்க பொதுமக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஆகையால் திரையரங்குகளில் அந்த படத்தை நீக்கி விட்டு வேறு படத்தை திரையிடுகிறார்கள். இந்த விவகாரத்தில் தமிழக அரசின் தலையீடு எந்த இடத்திலும் கிடையாது” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தி கேரளா ஸ்டோரி திரைப்படம் 11 ஆவது நாளில் 10.30 கோடி வசூல் செய்துள்ள நிலையில் மொத்தமாக 147.04 கோடி வசூல் செய்து இருக்கிறது. இன்னும் சில நாட்களில் படத்தின் வசூல் 150 கோடியை எட்டிவிடும் என திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டாபிக்ஸ்