9 Years of Anegan: விஜய்க்காக உருவாக்கப்பட்ட கதையில் நடித்து ஹிட் கொடுத்த தனுஷ்! பிறவிகளை கடந்து நிற்கும் காதல் கதை
கத்தி படத்தில் கமிட்டானதால் அனேகன் படத்தை மிஸ் செய்த விஜய், இந்த படத்துக்கு தனுஷ் சிறந்த சாய்ஸாக இருப்பார் எனவும் இயக்குநர் கேவி ஆனந்திடம் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் காதல் திரைப்படங்கள் பல்வேறு பரிமாணங்களில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. அந்த வகையில் மறுபிறவியை அடிப்படையாக கொண்ட ரெமாண்டிக் த்ரில்லர் படமாக வெளியாகி ஹிட்டடித்த படம் அனேகன். மறைந்த ஒளிப்பதிவாளர், இயக்குநர் கே.வி. ஆனந்த் தனது ஆஸ்தான டீமுடன் விறுவிறுப்பான திரைக்கதை அம்சத்துடன் கூடியதாக அனேகன் படத்தை உருவாக்கியிருப்பார்.
இந்த படத்தில் தனுஷ், அமிராத தஸ்தூர், கார்த்திக், ஆஷிஷ் வித்தியார்த்தி, முகேஷ் திவாரி, ஐஸ்வர்யா தேவன், ஜெகன், தலைவாசல் விஜய் உள்பட பலரும் நடித்திருப்பார்கள். தனுஷ், அமிரா தஸ்தூர் காதலர்களாக நான்கு வெவ்வேறு காலகட்டத்திலும், நான்கு விதமான லுக்குகளிலும் தோன்றியிருப்பார்கள். தனது படங்களுக்கு தூய தமிழில் தலைப்பு வைக்கும் இயக்குநர் கே.வி. ஆனந்த், மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்தில் இருந்து அனேகன் பட டைட்டிலை வைத்தார்.
மன்னர் காலகட்டம், 1960 காலகட்டம், 1980 காலகட்டம் என காதலர்கள் இறந்து மறுபிறவி எடுக்கும் தனுஷ் - அமிரா தஸ்தூர் ஜோடி நிகழ்காலத்தில் இணைவது தான் படத்தின் ஒன்லைன். இந்த கதைக்கு போர் அடிக்காத விதமான திரைக்கதை, காட்சி அமைப்பை உருவாக்கி படத்தை வெகுவாக ரசிக்க வைத்திருப்பார்கள்.
முதலில் இந்த கதையை விஜய்யை மனதில் வைத்து தான் உருவாக்கி அவரிடம் சொல்லப்பட்டது. ஆனால் ஏ.ஆர். முருகதாஸின் கத்தி படத்தில் கமிட்டான விஜய்யால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போயுள்ளது. இருப்பினும் இந்த கதைக்கு தனுஷ் பொருத்தமாக இருப்பார் என விஜய்யை கூறியதாக படம் குறித்தான பேட்டியின் போது இயக்குநர் கே.வி. ஆனந்த் தெரிவித்தார்.
அதன்படி பார்க்கையில் விஜய்க்காக உருவாக்கப்பட்ட கதையில் நடித்திருக்கும் தனுஷ், தனது மாறுபட்ட நடிப்பால் ஹிட் கொடுத்துள்ளார். அனேகன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 50 கோடிக்கு மேல் வசூலித்து தனுஷ் சினிமா கேரியரில் முக்கிய படமாகவும் அமைந்தது.
கார்த்திக் இந்த படத்தில் வில்லத்தனம் மிக்க கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். தனது வழக்கமான சார்மிங் நடிப்பை வெளிப்படுத்தும் கார்த்திக், வில்லனாகவும் மிரட்டியிருப்பார். கே.வி. ஆனந்த் படங்கள் கதையம்சத்தை கடந்து சிறந்த விஷுவல் ட்ரீட்டாக இருக்கும். அந்த வகையில் ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் பாடல் காட்சியமைப்புகளும், அதில் இடம்பெற்றிருக்கும் செட் அமைப்புகளும் கண்களுக்கு விருந்தாக இருக்கும்.
படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருப்பார். வைரமுத்து, கபிலன் வைரமுத்து, இயக்குநர் சி.எஸ். அமுதன், ரோகேஷ் ஆகியோர் பாடல்களை எழுதியிருப்பார்கள். அனைத்து பாடல்களும் ஒவ்வொரு ரகத்தில் இருப்பதோடு சூப்பர் ஹிட்டாகவும் அமைந்தது. டங்கா மாரி ஊதாரி பாடல் ஆண்டின் சூப்பர் ஹிட் பாடலாக மாறியது. தனுஷ் - ஹாரிஸ் ஜெயராஜ் காம்போ இணைந்த ஒரே படமாக அனேகன் உள்ளது.
ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு இருமுறை தள்ளிவைக்கப்பட்ட அனேகன், 2015ஆம் ஆண்டில் உலகக் கோப்பை போட்டி தொடங்குவதற்கு முன்னர் வெளியானது. ரசிகர்களில் அமோக வரவேற்பால் அந்த ஆண்டின் சூப்பர் ஹிட்டாக மாறிய அனேகன் திரைப்படம் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகள் ஆகிறது.
தமிழ் தவிர தெலுங்கு, இந்தி, பெங்காலி, மலையாளம் மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியான இந்த படம், அந்த மொழிகளிலும் வரவேற்பை பெற்றது. தமிழ் சினிமாவில் சிறந்த ரெமாண்டிக் த்ரில்லர் படங்களில் ஒன்றாக அனேகம் உள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்