D imman on Sivakarthikeyan: ‘கள்ள உறவுல கல்யாணம் பண்ணல.. வில்லன் யார்னு எனக்கு தெரியும்’ - டி. இமான் பளார்!
சிவகார்த்திகேயன் தனக்கு மிகப்பெரிய துரோகம் இழைத்து விட்டதாக டி.இமான் பேசிய நிலையில், தற்போது தன்னுடைய விவாகரத்து பற்றியும், முன்னாள் மனைவி பற்றியும் பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “வாழ்க்கையில் சில முடிவுகளை மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் தான் நாம் எடுக்கிறோம். நான் கடவுளை அதிகமாக நம்புபவன் . சில பேர் கடவுளை இவ்வளவு நம்புகிறாயே உன்னுடைய வாழ்க்கையிலேயே இது போன்ற சோதனைகள் நடக்கிறதே என்று கேட்பார்கள்.
ஆனால் உண்மையான நிலைமை என்பது அப்படி கிடையாது நீங்கள் இறைத்தன்மையோடு மிகவும் ஒட்டி இருந்தீர்கள் என்றால் அது உங்களுக்கு பிடிபடும். நல்லதுக்கும் கெட்டதுக்குமான போராட்டம் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். நீங்கள் உங்களின் வில்லன் யார் என்பதை நன்றாக தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அந்த வில்லன் யார் என்று எனக்குத் தெரியும். அதனால் எனக்கு ஏன் இது போன்ற சோதனைகளெல்லாம் நடக்கிறது என்ற கேள்விகள் கடவுளின் மீது எனக்கு இருந்ததில்லை. ஏனென்றால் எனக்குத் தெரியும், எதிர் தரப்பிலும் ஒரு சக்தி இருக்கிறது என்று. நிஜத்தன்மை இப்படி இருக்கும் பொழுது உங்களுக்கு உதவி செய்யும் கடவுளிடமே நீங்கள் முறைத்துக் கொண்டால் உங்களுக்கு எப்படி உதவிகள் கிடைக்கும்.
இன்றும் நான் என்னுடைய குழந்தைகளை சென்று பார்த்து வந்து கொண்டு தான் இருக்கிறேன். விவாகரத்து பத்திரத்தில் அந்த மாதிரியான விதிமுறையை சேர்த்து தான் விவாகரத்து வாங்கி இருக்கிறேன். ஆனால் என் மகள்கள் என் மீது பாசமாக இல்லை. அவர்கள் அப்படியான ஒரு சூழ்நிலைக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரிகிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாக அப்பா என்று அவர்கள் ஓடி வந்து கட்டி கொள்ளும் பாசமானது அவர்களிடத்தில் இல்லை. அவர்களுக்கு உள்ளம் பிஞ்சு உள்ளம். அவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது தெரியாது. ஒரு நாள் என்னிடம் அவர்கள் அப்பா என்ன நடந்தது? என்று கேட்கும் பொழுது, நான் அன்றைய தினம் உண்மையைச் சொல்வேன்.
அமலியும் நேத்ராவும் என்னுடைய வாழ்க்கையில் வந்த பிறகு என்னுடைய வாழ்க்கையானது முற்றிலுமாக மாறி இருக்கிறது நான் இசையமைப்பாளராக இருக்கிறேன். அதனால் கள்ள உறவில் பழக்கம் ஏற்பட்டு, கல்யாணம் செய்து கொண்டேன் என்று நினைக்க வேண்டாம்.
இந்த கல்யாணத்தை என்னுடைய அப்பா தான் பார்த்து எடுத்து நடத்தி வைத்தார். நான் உண்மையை அதிகமாக நம்புகிறேன். உண்மை என்பது உண்மைதான். அதில் யாருமே நடிக்க முடியாது. நம் சமுதாயத்தில் ஒரு பிம்பம் இருக்கிறது. அதாவது விவாகரத்து என்றாலே, அதில் ஆணிடம்தான் பிரச்சனை இருக்கும் என்பது போலவும், அதுவும் சினிமாக்காரன் என்றால் கண்டிப்பாக இவன் மீது தான் தவறு இருக்கும் என்பது போலவும் பார்க்கப்படுகிறது. அந்த பார்வை மாற வேண்டும். என்னுடைய மடியில் கனமில்லை என்னுடைய மகள்கள் நிச்சயம் என்னை நோக்கி திரும்பி வருவார்கள்” என்று பேசினார்.
நன்றி: வாவ் தமிழா!
டாபிக்ஸ்