Actor Aswin Next: தேஜாவு இயக்குநருடன் இணையும் அஸ்வின்; வெளியானது அப்டேட்!
தேஜாவு இயக்குனர் அரவிந்த் ஶ்ரீனிவாசன் இயக்கத்தில் அஷ்வின் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது
'
விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘ரெட்டை வால் குருவி’ ‘நினைக்க தெரிந்த மனமே’ உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் அஸ்வின்.
அதன் பின்னர் ‘ஓகே கண்மணி’ ‘ஆதித்ய வர்மா’ உள்ளிட்ட படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்த அஸ்வினுக்கு விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி பெரிய பிரேக்கை கொடுத்தது. அதனைத்தொடர்ந்து ‘என்ன சொல்ல போகிறாய்’ என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் சொன்ன 40 கதைகளை கேட்டு தூங்கி விட்டதாக பேசினார். இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் அதற்கு மன்னிப்பும் கேட்டார்.
அதனைத்தொடர்ந்து சோனி லைவில் ஒளிப்பரப்பான ‘மீட் க்யூட்’ என்ற சீரிஸிலும், அண்மையில் கோவை சரளா நடிப்பில் வெளியான ‘செம்பி’ படத்திலும் நடித்திருந்தார். இந்த நிலையில் அவர் தற்போது மீண்டும் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார்; அருள்நிதி நடிப்பில் உருவான 'தேஜாவு' திரைப்படத்தை இயக்கியவர் அரவிந்த் ஸ்ரீனிவாசன். தெலுங்கில் நவீன் சந்திரா நடிப்பில் உருவான 'ரிபீட்' என்ற படத்தினை இயக்கியிருந்தார். இவரது இயக்கத்தில் தற்போது அஸ்வின் நடிக்க இருக்கிறார்.
ரொமாண்ட்டிக் த்ரில்லராக உருவாகும் இப்படத்தினை ழென் ஸ்டுடியோஸ் (ZHEN Studios) சார்பில் புகழ் தயாரிக்கிறார். இந்நிறுவனத்துடன் ஆர்கா என்டர்டைன்மெண்ட்ஸ் (ARKA ENTERTAINMENTS) நிறுவனம் இப்படத்தினை இணைந்து தயாரிக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கான மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாபிக்ஸ்