Vidamuyarchi: ஆடியோ லான்ஞ்சிற்கு வரும் அஜித்? “ரஜினி மட்டும் அன்னைக்கு இல்லன்னா” - அஜித் அசுரன் ஆன சம்பவம்!
விடாமுயற்சி நிலைமை என்னவாக இருக்கிறது.. சம்பவம் ஒன்றில் அஜித்தை ரஜினி காப்பாற்றியதும் குறித்தும் பார்க்கலாம்!
இது குறித்து பிரபல பத்திரிகையாளர் வலைப்பேச்சு அந்தணன் பேசும் போது, “ இப்போது பார்ப்பது நாம் பார்க்கும் பழைய அஜித் கிடையாது. இதுவே பழைய அஜித்தாக இருந்தால் எல்லோருக்கும் மேலே தன்னை நிரூபித்து, நானும் கோதாவில் இருக்கிறேன் என்று சொல்லியிருப்பார்.
கிட்டத்தட்ட அவர் ஒரு துறவி போல மாறி இந்த விஷயங்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார். இப்போதும் ஒரு படத்திற்கு வந்தால், அதை வெறும் ஒரு படமாக மட்டுமே பார்ப்பாரே தவிர, அதனை அவர் மிகப்பெரிய விஷயமாக பார்ப்பதில்லை.
ஆனால் ரசிகர்கள் மிகவும் ஏக்கத்தோடு இந்த விஷயத்தை பார்க்கிறார்கள். அவர் சுத்தமாக எல்லாவற்றையும் விட்டு ஒதுங்கி இருப்பது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. இது குறித்து நிறைய நபர்கள் அஜித்திடம் இந்த விஷயம் தொடர்பாக பேசி இருக்கிறார்கள். ஆடியோ லான்ஞ்சிற்காவாது நீங்கள் வரவேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள் அதை அஜித்தும் கேட்டிருக்கிறார். அதனால் வரும் காலத்தில் அவர் வெளியே வருவதற்கான வாய்ப்பு என்பது இருக்கிறது.
விஜய்க்கும் அஜித்குமாருக்கும் இடையேயான போட்டி என்பது ஆரம்ப காலத்தில் இருந்தே இருந்து கொண்டிருக்கிறது. அவரை மிகவும் மாற்றியது எது என்னவென்றால், கலைஞருக்கு பாராட்டு விழா நடந்த நிகழ்வில் கலைஞருக்கு முன்னதாகவே தன்னை மிரட்டி இந்த விழாவிற்கு வர வைக்கிறார்கள் என்று அவர் பேசியதுதான்.
அவர் பேசியதும் அதனை பாராட்டும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் எழுந்து நின்று கைதட்டினார். அந்த இடத்தில் அஜித் ஒரு மிகப்பெரிய வீரனாக மாறிவிட்டார் என்று சொல்லலாம். அதன் பின்னர் அஜித்திற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் சேர்ந்தது.அதற்காக அஜித் சந்தித்த விளைவுகள் என்பது மிகவும் அதிகமானது. பலர் அவரை தொடர்பு கொண்டு மிரட்ட ஆரம்பித்தார்கள். வீட்டை தாக்குவதற்கு கூட வேலைகள் நடந்தன. அந்த சமயத்தில் ஒட்டுமொத்த சினிமாவே அவரை கைவிட்டு விட்டது. அது அவரை மிகவும் பாதித்துவிட்டது; அன்று அவர் ஒரு முடிவு எடுத்தார். இவர்களின் சகவாசமே இனி நமக்கு வேண்டாம் என்று சொல்லி உறுதி பூண்டார். அந்த சமயத்தில் அவருக்கு உறுதுணையாக ரஜினி இருந்து, அவரை கலைஞர் வீட்டுக்கு அழைத்துச் சென்று மன்னிப்பு கேட்க வைத்து அந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தார்.” என்று பேசினார்.
டாபிக்ஸ்