Vengal Rao: ‘எல்லாம் எலும்பும் பலவீனமா இருக்கு..’ வெங்கால் ராவ் உருக்கம்!
Vadivelu: சில நாட்களுக்கு முன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றேன். மனிதன் என்றால் நோய் வராமல் இருக்குமா? சாதாரணமாக தான் போய் மருத்துவமனையில் சேர்ந்தேன்.
வடிவேலு அணியில் மறக்க முடியாத காமெடி நடிகர் வெங்கால் ராவ். சமீபத்தில் அவர் இறந்துவிட்டதாக தகவல் பரவிய நிலையில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த சுவாரஸ்யமான பேட்டி இதோ:
‘‘ஸ்டண்ட் கலைஞராக இருந்த நான், காமெடி நடிகராக மாறியிருக்கிறேன். அதற்கு காரணம், என் இயலாமை. என் உடல்நிலை ஸ்டண்ட் பணிக்கு ஒத்துழைக்கவில்லை. கை, கால்கள் எல்லாம் வலிக்கிறது. எலும்பெல்லாம் வலிக்கிறது. எல்லாம் பலவீனமாகிடுச்சு. என்னால் இனி சண்டை போட முடியாது. அதனால் தான் காமெடிக்கு வந்தேன்.
இப்போதெல்லாம் ரோப் போடுவது, அது, இதுனு நிறைய டெக்னிக் வந்திருச்சு. நான் ஸ்டண்ட் பண்ணும் போதெல்லாம் எல்லாமே நிஜம். விழுவதும் நிஜமாக தான் விழணும், எழுவதும் நிஜமாக தான் எழணும். அது அவ்வளவு எளிதல்ல. படிகட்டுகளில் உருளும் போதெல்லாம் தடதடவென கீழே விழுவேன்.
எனக்கு விழுந்த காயங்களை எல்லாம் கணக்கில் போட முடியாது. அந்த அளவிற்கு காயங்களை சந்தித்திருக்கிறேன். 40 இட்லி சாப்பிட்டேன் என்றால் என்ன அடி வாங்கியிருப்பேன் யோசித்து பாருங்க. அதெல்லாம் பண்ணிட்டு தான் கடைசி காலத்துல, இனிமே சண்டை போட முடியாதுனு ஒரு முடிவுக்கு வந்தேன்.
சில நாட்களுக்கு முன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குச் சென்றேன். மனிதன் என்றால் நோய் வராமல் இருக்குமா? சாதாரணமாக தான் போய் மருத்துவமனையில் சேர்ந்தேன். அதற்குள் பார்த்தால், அவர் வரமாட்டார், அவருக்கு ரொம்ப சீரியஸ் என்றெல்லாம் செய்திகள் வந்துவிட்டது.
செய்திகளைப் பார்த்து நிறைய பேர் போன் செய்தார்கள். ‘யோவ்.. போனை வை…’ என கத்திவிட்டேன். இதனாலேயே 2 மாசமா யாரும் ஷூட்டிங் கூப்பிடல. எதுக்கு இப்படி செய்தி வருது? யார் செய்த வேலை? ஏன் இந்த பொறாமை?
வடிவேலு சார் என் மீது அதீத பாசம் கொண்டவர். பாசம் என்பதை விட நட்பு என்று கூட கூறலாம். வடிவேலு உடன் இருந்தவர்கள் இன்று திட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் சொல்லும் குற்றச்சாட்டுகள் உண்மை கிடையாது. 6 ஆண்டுகளாக அவருக்கு ஷூட்டிங் இல்லை. அதற்காக நான் அவரை திட்டமுடியுமா? இருக்கும் போது, வாய்ப்பு கொடுத்தார், சோறு போட்டார், பணம் கொடுத்தார், இப்போ இல்லாத போது அவர் என்ன செய்வார்? அதற்காக திட்டுவதா?
இவர்கள் எல்லாம் திட்டுவது வடிவேலுக்கு தெரியும். ஆனால் அவர் இதையெல்லாம் கண்டுகொள்ளமாட்டார். யார் எந்த மாதிரி, எவ்வளவு மோசமானவர்கள் என்பதை பார்த்தாலே கண்டுபிடித்துவிடுவார் வடிவேலு. எம்.ஜி.ஆர்., சிவாஜி காலத்தில் பொறாமை கிடையாது. இன்று வீடு கட்டினால் கூட பொறாமைபடுகிறார்கள்.
வடிவேலு இல்லாத நேரத்தில் வெளியே வாய்ப்பு தேடிச் சென்றால், நான் வடிவேலு ஆளு என்பதை தெரிந்து, நாசுக்காக எனக்கு வாய்ப்பு தராமல் அனுப்பி விடுவார்கள். அதற்காக யாரும் அவமானப்படுத்தவில்லை.
சினிமாவில் ஒரு விசயம் இருக்கிறது, ‘அவர் இல்லைனா நான் இல்லை’ என்று கூறுவது. எதுக்கு இந்த பொய் சொல்லனும்? நீ நல்லா வேலை செய்தால், நல்லா இருக்கப் போற. அதைவிட்டு விட்டு அவரால் நான் நல்லா இருக்கேன், இவரால் நல்லா இருக்கேன் என சொல்வதெல்லாம் சினிமாவில் சகஜமாகிவிட்டது.
வடிவேலுக்கும் விஜயகாந்துக்கும் சின்ன பிரச்னை தான் வந்தது. அதை வெளியில் இருப்பவர்கள் பெரிதாகிவிட்டார்கள். இப்போ நான் இருக்கிற நிலை எனக்கு போதும். இதை விட நான் பறக்க நினைக்கவில்லை. அது வரவில்லை, இது வரவில்லை என உயிர் போக வேண்டாம், இது போதும்,’’
என்று அந்த பேட்டியில் வெங்கால் ராவ் கூறியுள்ளார்.
டாபிக்ஸ்