Captain Vijayakanth: எரிமலை எப்படி பொறுக்கும் ?..அதிரடியாகத் தோன்றிய விஜயகாந்த்..அதிர்ந்து போன ரசிகர்கள்!
1981ஆம் ஆண்டு 'சிவப்பு மல்லி' ரிலீஸாகி திண்டுக்கல் என்.வி.ஜி.பி தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தது. படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. அதை நேரில் பார்க்க விஜயகாந்த் தியேட்டருக்கு வந்தார்
தமிழ் சினிமாவில் 1980-களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகிய இருவரும் கோலோச்சிக் கொண்டிருந்தனர். அப்போது இவர்கள் இருவருக்கும் டஃப் கொடுத்து தனக்கென தனி பாணியை அமைத்தவர் கேப்டன் விஜயகாந்த்.
கருப்பு தேகம், சிவந்த கண்களுடன் தனக்கான அங்கீகாரத்தை தேடிக்கொண்டிருந்த விஜயகாந்தின் கேரியரில் மிக முக்கியமான முதல் படமாக அமைந்தது என்றால்'சட்டம் ஒரு இருட்டறை' தான். அதன்பின் வெளிவந்த 'சிவப்பு மல்லி' திரைப்படத்தின் மூலம் அனைவராலும் கவனிக்கப்பட்டார்.
1981-ல் வெளியான சிவப்பு மல்லி பலவகைகளில் முக்கியமான திரைப்படம் ஆகும். கம்யூனிச சிந்தாந்தத்தை கருப்பொருளாக கொண்டது. ஒரு கிராமத்தில் அங்குள்ள மக்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. மக்களை அடிமைகளாக நடத்துகிறார்கள். அதை எதிர்த்து துணிச்சலுடன் கேள்வி கேட்கிறார்கள் இரண்டு நண்பர்கள். ஒருவர் விஜயகாந்த் மற்றொருவர் வாகை சந்திரசேகர். அந்த கிராம மக்களை அடிமைப்பிடியில் இருந்து எப்படி மீட்கப் போராடுகிறார்கள் என்பது தான் கதை.
'ஏா்ரா மல்லேலு' என்ற தெலுங்கு திரைப்படத்தின் தழுவல் தான் 'சிவப்பு மல்லி'. இரு கம்யூனிஸ சித்தாந்த தோழர்களைப் பற்றிய இப்படம் ஆந்திராவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதைத்தான் ஏவிஎம் நிறுவனம் தமிழில் தயாரித்திருந்தது. படத்தை இராம.நாராயணன் இயக்கியிருந்தார்.
'சிவப்பு மல்லி' திரைப்படத்தை விஜயகாந்த் ஒப்புக் கொண்டபோது 'சாட்சி' படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். 'சாட்சி' படப்பிடிப்பை சேலத்தில் முடித்துவிட்டு, அன்று மாலை மதுராந்தகத்தில் நடக்கும் 'சிவப்பு மல்லி' படப்பிடிப்பில் கலந்து கொள்வார் விஜயகாந்த். இரவு முழுக்க படப்பிடிப்பு நடக்கும். பிறகு அதிகாலையில் கிளம்பி சேலம் சென்று, காலையில் 'சாட்சி' படப்பிடிப்பில் கலந்து கொள்வார். அது முடிந்ததும் மீண்டும் மாலையில் மதுராந்தகத்தில் நடக்கும் 'சிவப்பு மல்லி' படப்பிடிப்பு நடைபெறும்.
1981ஆம் ஆண்டு 'சிவப்பு மல்லி' ரிலீஸாகி திண்டுக்கல் என்.வி.ஜி.பி தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்தது. படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. அதை நேரில் பார்க்க விஜயகாந்த் தியேட்டருக்கு வந்தார். அங்கு அரங்கம் நிறைந்த காட்சியாக சிவப்பு மல்லி திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. ரசிகர்களை விஜயகாந்த் சந்திக்க ஏற்பாடுகள் நடந்தன. ஆனால், சாதாரணமாக ரசிகர்களை சந்திப்பதை விட அதிரடியாக ரசிகர்களை சந்திக்க வைக்க தியேட்டர் நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.
அதன்படி, 'சிவப்பு மல்லி' படத்தில் 'எரிமலை எப்படி பொறுக்கும்?..' என்ற பாடல் தொடங்கும் போது திடீரென திரைப்படத்தை நிறுத்திவிட்டார்கள். பாடல் நிறுத்தப்பட்டதும் என்னாச்சு? என ரசிகர்கள் சீட்டை விட்டு எழுந்து பார்த்த போது, தியேட்டரில் விளக்குகள் எரிய விஜயகாந்த் கைகளை உயர்த்தியபடி திரையின் முன்பு தோன்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதன் மூலம் விஜயகாந்திற்கும் ரசிகர்களுக்கும் இடையே பெரிய பிணைப்பு ஏற்பட்டது. இப்படி பம்பரமாக சூழன்று வந்த விஜயகாந்த் சமீபகாலமாக மருத்துவ சிகிச்சையில் இருக்கிறார். இருப்பினும் கேப்டன் மீண்டு வருவார் என்ற நம்பிக்கையில் அவரது ரசிகர்கள் பலரும் காத்திருக்கின்றனர். .!
டாபிக்ஸ்