AR Rahman: கனடா நகர வீதிக்கு ஏ.ஆர். ரஹ்மான் பெயர் - இசைப்புயல் உருக்கம்
கனடாவில் உள்ள வீதி ஒன்று இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அவர் நன்றி தெரிவித்திருப்பதோடு அந்த பெயர் தனது பெயர் இல்லை எனவும், அதுதொடர்பான விளக்கத்தையும் தனது ஸ்டைலில் கொடுத்துள்ளார்.
ஆஸ்கர் நாயகன், இசைப்புயல் என்று அழைக்கப்படும் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தியாவின் ஐகானாக திகழ்கிறார். இந்தியரின் பெருமை உலகறிய செய்த அவரை பெருமைப்படுத்தும் விதமாக கனடா நாட்டிலுள்ள மார்க்கம் என்ற நகரில் உள்ள வீதி ஒன்றுக்கு ஏ.ஆர். ரஹ்மானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த தகவலை தனது சமூக வலைத்தளபக்கத்தில் பகிர்ந்துள்ள ஏ.ஆர். ரஹ்மான், மார்கெம் நகரின் மேயர் ஃபிராங்க் ஸ்கார்பிட்டி என்பவருக்கு நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன் கனடா மக்களுக்கு நன்றியை தெரிவிக்கும் விதமாக பெரிய அறிக்கை ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.
அதில், "எனது வாழ்க்கையில் இதுபோன்ற தருணங்கள் நிகழும் என ஒருபோதும் நினைத்தது இல்லை. கனடாவிலுள்ள மார்க்கம் நகர மேயர் ஃபிராங்க் ஸ்கார்பிட்டி, கவுன்சிலர்கள், இந்திய தூதரக ஜெனரல் அபூர்வா ஸ்ரீவத்சவா மற்றும் கனடா நாட்டு மக்கள் என அனைவருக்கும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
இங்கு ஏ.ஆர். ரஹ்மான் என்பது நான் அல்ல. இதற்கு கருணையுள்ளவர் என்று பொருள். நாம் வணக்கும் பொதுவான கடவுள் அனைவருக்கும் கருணை என்பது அடிப்படையான குணமாக உள்ளது. அந்த கருணையின் பணியாளராக மட்டுமே எவர் ஒருவராலும் இருக்க முடியும். எனவே, அந்த பெயர் கனடாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை கொண்டு வரட்டும். உங்கள் அனைவரையும் கடவுள் ஆசீர்வதிப்பார்.
இங்குள்ள இந்திய சகோதரர்கள், சகோதரிகளின் அன்புக்கு நன்றியை தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். என்னுடன் பணியாற்றிய படைபாற்றல் மிக்க அனைவரும், நான் மேன்மேலும் உயர்வதற்கான உத்வேகத்தை அளித்தவர்களும் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாட விரும்புகிறேன். சினிமாவில் பங்களிப்பு ஆற்றிய பல்வேறு சாதனையாளர்களின் கடலில் நான் ஒரு சிறு துளி.
தற்போது நான் கூடுதல் பொறுப்புகளை பெற்றவனாகவும், மேலும் பல புதிய விஷ.யங்களை செய்வதற்கு ஊக்கம் கிடைத்திருப்பதாக உணர்கிறேன். சோர்வு அடையாமல், ஓய்வை பெறாமல் தொடர்ந்து உழைக்க விரும்புகிறேன். ஒரு வேளை சோர்வு ஏற்பட்டாலும் கடக்க வேண்டிய தூரம் அதிகமாகவே உள்ளது. மக்களை இணைப்பதற்கான பல்வேறு விஷயங்களில் தொடர்ந்து ஈடுபடுவேன் என் நம்புகிறேன்" என உருக்கமாக குறிப்பட்டுள்ளார்.