Blue Sattai: ’இவங்கதான் ஆம்பளங்க!’ வெற்றி மாறன் முதல் விஜய் சேதுபதி வரை! விளாசும் ப்ளூ சட்டை!
”Blue Sattai Maran: ஆகவே.. சூப்பர் ஹீரோக்கள் எல்லாம் இனி பாமர, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களுக்காக திரையில் மட்டும் குரல் தந்து கல்லா கட்டுவார்கள். நிஜத்தில் ஆன்மீக அரசியல் பக்கம் மட்டுமே நிற்பார்கள்”
திரையுலகில் எஞ்சியிருக்கும் ஆண் மகன்கள் என்ற தலைப்பில் பட்டியல் ஒன்றை சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.
நடிகர்களில் அரசியல் கருத்துகள் குறித்து தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை ப்ளூசட்டை மாறன் வைத்து வருகிறார். நேற்று முன் தினம் நடைபெற்ற லால்சலாம் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் ‘எனது அப்பா சங்கி இல்லை’ என்று நடிகர் ரஜினி காந்த் குறித்து ஐஸ்வர்யா ரஜினி காந்த் கருத்து தெரிவித்து இருந்தார்.
இதற்கு பதில் அளிக்கும் விதமாக நடிகர் ரஜினி காந்த் முன்பு பேசிய கருத்துகளையும், தற்போது பேசிய கருத்துகளையும் ஒப்பீடு செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
இந்த நிலையில் திரையுலகில் எஞ்சியிருக்கும் ஆண்மகன்கள் என்ற தலைப்பில் ப்ளூ சட்டை மாறன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், பாமர மக்கள், ஒடுக்கப்பட்ட சாதியினர், சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு குரல் தரும் இந்திய திரைக்கலைஞர்கள் எண்ணிக்கை வெகு வேகமாக குறைந்துவிட்டது. இவர்களில் பலர் ஆன்மீக அரசியல் ஆதாயம் தேடி ஒரே கூடாரத்தில் இடம் பெயர்ந்துவிட்டனர். மற்றவர்கள் மாநில அரசுக்கு காவடி தூக்குகிறார்கள்.
முன்பெல்லாம் தேசிய அளவிலும், தமிழகத்திலும் மக்களுக்கு எதிரான திட்டங்கள் வந்தாலோ அல்லது வெறுப்பரசியல் இருந்தாலோ... கமல், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலர் பொங்கி எழுவார்கள்.
ஆனால் இப்போது அப்படி செய்தால் தங்களது பான் இந்தியா பட வியாபாரம் நட்டுக்கொள்ளும் என்பதால்... அவர்களும் ஆஃப் ஆகி விட்டார்கள்.
சூர்யா, கார்த்தி, சத்யராஜ், சமுத்திரக்கனி, விஜயசேதுபதி போன்றோர் மக்களுக்காக பேசிய காலமெல்லாம் மலையேறி விட்டது. அப்படியே பேசினாலும் ஒப்புக்கு சப்பாக பேசிவிட்டு நழுவி விடுவார்கள்.
பான் இந்தியா படங்களில் நடிக்கும் வாய்ப்புகளுக்கு தானே மண்ணை அள்ளி போட்டுக்கொள்ள அவர்கள் தயாராக இல்லை. மக்களாவது... மாங்காயாவது.
'உன் வேலை ஓட்டு போடுவது மட்டுமே?' என அரசியல்வாதிகள் நினைப்பது போல...
'உன் வேலை என் படத்துக்கு டிக்கட் எடுப்பது மட்டுமே? மற்றபடி நீ யாரோ... நான் யாரோ' என்பதுதான் உறுதியான நிலைப்பாடு.
ஆக.. கோடம்பாக்கத்தில் மிஞ்சியிருப்பது பி.சி.ஸ்ரீராம், வெற்றிமாறன் மட்டுமே. இவர்கள் கூட பெரும்பாலும் மத்திய அரசுக்கு எதிராக பேசுகிறார்களே தவிர... மாநில அரசுக்கு எதிராக பேசுவதில்லை.
கர்நாடகத்தில் பிரகாஷ் ராஜ், கிஷோர், கிரிக்கெட்டில் தோனி என மிச்சம் இருக்கிறார்கள்.
'இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு' எனும் அரசியல் சாசன முகப்பு பக்கத்தை தங்கள் சோஷியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு ஒற்றுமையை வெளிப்படுத்தியது மலையாள திரைத்துறை. அவர்களில் கூட பெரிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.
ஆகவே.. சூப்பர் ஹீரோக்கள் எல்லாம் இனி பாமர, ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மக்களுக்காக திரையில் மட்டும் குரல் தந்து கல்லா கட்டுவார்கள். நிஜத்தில் ஆன்மீக அரசியல் பக்கம் மட்டுமே நிற்பார்கள்.
சினிமா நடிகர்கள் எதற்காக மக்கள் பிரச்னைக்கு குரல் தர வேண்டுமென சிலர் கேட்பதுண்டு. அவர்களிடம் இரண்டு கேள்விகள்:
1. அப்படியெனில் இதற்கு முன்புவரை ஏன் குரல் கொடுத்தார்கள்?
2. ஒரு சில வருடங்களில் இவர்களை பெருங்கோடீஸ்வரரர்களாக ஆக்கும் மக்களுக்காக பேசுவதுதான் நியாயம்? பேச முடியாது என்றால் படத்திலும் தம் கட்டி வசனம் பேச வேண்டாம். காதல், காமடி, பேய் படங்களை மட்டும் எடுக்க வேண்டியதுதானே? என கேள்வி எழுப்பி உள்ளார்.
டாபிக்ஸ்