தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  43 Years Of Vidiyum Varai Kaathiru: ஆண்டி ஹீரோவாக பாக்ராஜ்! பின்னணி இசையில் மிரட்டிய இளையராஜா - தமிழில் சிறந்த த்ரில்லர்

43 Years of Vidiyum Varai Kaathiru: ஆண்டி ஹீரோவாக பாக்ராஜ்! பின்னணி இசையில் மிரட்டிய இளையராஜா - தமிழில் சிறந்த த்ரில்லர்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
May 08, 2024 05:00 AM IST

படத்தின் ப்ரீ க்ளைமாக்ஸாக வரும் ஹீரோயின் கொலை முயற்சியில் இளையாராஜாவின் பின்னணி இசை, மொழி முக்கியமா அல்லது இசை முக்கியமா என்ற சமீபத்தில் உலா வந்துகொண்டிருக்கும் விவாதத்துக்கு சரியான பதிலாக இருக்கும். கதையின் நாயகன் ஆண்டி ஹீரோவாக நடித்த முன்னோடி படமாக விடியும் வரை காத்திரு உள்ளது.

விடியும் வரை காத்திரு படத்தில் பாக்யராஜ்
விடியும் வரை காத்திரு படத்தில் பாக்யராஜ்

ட்ரெண்டிங் செய்திகள்

பாக்யராஜ் எடுத்த ரிஸ்க்

பேமிலி டிராமா, காமெடி கதைகளின் மூலம் பெயரெடுத்து தனக்கென ரசிகர்கள் கூட்டத்தையும் உருவாக்கினார் பாக்யராஜ். தனது பாணியில் இருந்து மாறுபட்டு க்ரைம் த்ரில்லர் கதையாக விடியும் வரை காத்திரு படத்தை உருவாக்கியதோடு, ஆண்டி ஹீரோவாக தோன்றி ரிஸ்கும் எடுத்தார்.

இதற்கு முக்கிய காரணம் இந்த படத்துக்கு முன்னர் இவர் நடித்த இன்று போய் நாளை வா படத்தில் அப்பாவியாகவும், ஹீரோயினை காப்பாற்றும் ஹீரோவாகவும் தோன்றியிருப்பார். அதேபோல் இன்று போய் நாளை வா படத்துக்கு முன் மெளன கீதங்கள் படத்தில் மனைவி மீது அன்பும், பாசமும் கொண்ட கணவராகவும் தோன்றி பெண் ரசிகர்களின் விருப்பமான நடிகாராகவும் மாறினார்.

இந்த சூழ்நிலையில் விடியும் வரை காத்திரு படத்தில் சொத்துக்காக மனைவியை கொலை செய்யும் கதாபாத்திரத்தில் பாக்யராஜ் தோன்றியிருப்பார். சொல்லப்போனால் இந்த படத்தின் ரிலீஸ் சமயத்தில் பாக்யராஜ் இப்படியொரு மோசமான கேரக்டரில் நடித்தாரா என்கிற ஆச்சர்யமும், ஏமாற்றமுமே ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டது.

ஹீரோயின் அப்பாவை கரெக்ட் செய்த கதை

மனஅழுத்தத்தில் இருக்கும் படத்தின் கதாநாயகியான சத்யகலாவை திருமணம் செய்து அவரது பெயரில் இருக்கும் சொத்துக்களை அபேஸ் செய்ய பாக்யராஜ், சங்கிலி முருகன் உள்பட குமபல் திட்டமிடுவது தான் படத்தின் ஒன்லைன்.

வழக்கமாக இதுபோன்ற கதைகளில் ஹீரோயினை சுற்றி சுற்றி ஹீரோ காதலிப்பதை தான் திரைக்கதையாக அமைத்திருப்பார்கள். ஆனால் இதில் சற்று வித்தியாசமாக ஹீரோயின் அப்பாவின் நம்பிக்கைக்கு உரியவராக மாறவும், கோடீஸ்வரரான அவரிடம் வேலை வாங்கவும் பாக்யராஜ் செய்யும் சுவாரஸ்ய தில்லுமுல்லுகளுடன் முதல் பாதி காட்சி இடம்பிடித்திருக்கும்.

பின்னர் முதலாளி மாமனார் ஆன பிறகு அவரையும், மனைவியையும் ஏமாற்ற முயற்சிப்பது, தனது அப்பாவிதனத்தை வெளிப்படுத்துவது என பாக்யராஜ் நடிப்பு எதார்த்தம் கலந்த ஹீரோயிசமாக இருக்கும்.

ஹீரோவாகவே இருந்தாலும் வில்லத்தனம் செய்தால் தப்பிக்க முடியாது என அந்த காலகட்டத்தில் இருந்த க்ளிசேவான க்ளைமாக்ஸில் படம் முடிந்திருந்தாலும், திருப்பங்கள், டுவிஸ்டுகள் நிறைந்த காட்சிகளால் நல்ல த்ரில்லர் அனுபவத்தை கொடுத்திருப்பார் பாக்யராஜ்.

இளையராஜா பின்னணி இசை

வாலி பாடல்வரிகளில் படத்தில் மூன்று பாடல்கள் இடம்பிடித்திருக்கும். படத்தின் பாடல்களை விட இளையராஜாவின் பின்னிணி இசை ரசிகர்களுக்கு புது விதமான அனுபவத்தை கொடுத்தது என்றே கூறலாம். ப்ரீ க்ளைமாக்ஸில் தனது மனைவியும் ஹீரோயினுமான சூர்யகாலவும் கொலை செய்ய ஸ்கெட்ச் போட்டு, பாக்யராஜ் அதை செயல்படுத்தும் ஒட்டு மொத்த 10 நிமிட காட்சியை தனது அற்புதமான, த்ரில்லர் மிகுந்த பின்னணி இசையால் ராஜாங்கம் நடத்தியிருப்பார் இளையராஜா.

மொழி பெரிதா, இசை பெரிதா என்று சமீபத்தில் உலா வந்த விவாதத்துக்கான சிறந்த பதிலாக இந்த காட்சியின் பிஜிஎம்-ஐ சொல்லலாம். இளையராஜாவின் கிளாசிக் பின்னணி இசையில் தனித்துவமான இடம் இந்த படத்தின் பிஜிஎம்முக்கு உண்டு.

பாக்ஸ் ஆபிஸ் வசூல்

தமிழ் சினிமாவில் சிறந்த த்ரில்லர் படங்களில் ஒன்றாக இருந்து வரும் விடியும் வரை காத்திரு படம் ரிலீசான சமயத்தில் புதுமையான வித்தியாசமான கதைக்களமாக இருந்ததோடு, தமிழ் சினிமாவுக்கு ஆண்டி ஹீரோ கான்செப்ட் கதைகளுக்கான கதவை திறந்து விட்ட முன்னோடி படமாக இருந்தது. ரசிகர்களை கவர்ந்து, விமர்சக ரீதியாகவும் பாராட்டை பெற்ற இந்த படம் வெளியாகி இன்றுடன் 43 ஆண்டுகள் ஆகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்