தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bucks: ‘வாய்ப்பு தேடி வந்த என்னை வாசலில் நிறுத்திய வெற்றி மாறன்’ -பகவதி பெருமாள் ப்ளாஷ்பேக்!

Bucks: ‘வாய்ப்பு தேடி வந்த என்னை வாசலில் நிறுத்திய வெற்றி மாறன்’ -பகவதி பெருமாள் ப்ளாஷ்பேக்!

Stalin Navaneethakrishnan HT Tamil
May 13, 2023 06:00 AM IST

Bagavathi Perumal: பாரதிராஜா, மணிரத்தினம், பாலுமகேந்திரா, பாலா, சங்கர் சார் ஆகியோரின் பெயர்களை கூறினேன். ‘பெட்ரோ மாஸ் லைட்டே தான் வேண்டுமா?’ என்று ப்ரேம் கேட்டார்.

நடிகர் பகவதி பெருமாள் மற்றும் இயக்குனர் பாலுமகேந்திரா உடன் வெற்றி மாறன்
நடிகர் பகவதி பெருமாள் மற்றும் இயக்குனர் பாலுமகேந்திரா உடன் வெற்றி மாறன்

ட்ரெண்டிங் செய்திகள்

‘‘சின்ன வயதில் நன்றாக படிக்கும் மாணவனாக இருந்தேன். 10 ரேங்க் உள்ளே தான் எடுப்பேன். இருந்தாலும் என் நண்பர்களுக்காக கடைசி பெஞ்சில் தான் அமர்ந்திருப்பேன். நண்பர்களிடம் ஆலோசிக்காத விசயம் இல்லை. என் நண்பன் பாபு பொன்முடியிடம் ஆலோசித்து தான் நான் சினிமாவுக்கே வந்தேன். 

என் அப்பாவிடம் சினிமாவிற்கு போக வேண்டும் என்று கூறினேன். அவர் சரி என்றும் சொல்லவில்லை, வேண்டாம் என்றும் கூறவில்லை. ஒரு நாள் என் அம்மாவிடம் அப்பா பேசும் போது, ‘பஸ்ல போகும் போது டிரைவர் ஆக வேண்டும் என்று நினைப்பதில்லையா, அந்த மாதிரி படம் பார்த்துவிட்டு சினிமாவுக்கு போறேன்னு சொல்றான்; போக போக சரியாகிடும்’ என்று கூறினார். 

எங்கப்பா சொன்னது தான் ஒருவேளை உண்மையா இருக்குமோ என்று நானே யோசித்து பார்த்தேன். கும்பகோணத்தில் நான் ப்ளஸ் 2 படித்துக் கொண்டிருந்த போது, சேது படத்தின் ஷூட் எடுத்துக் கொண்டிருந்தார்கள். நான் இருந்த ரயில்வே குடியிருப்பு அருகில் தான் ஷூட் நடந்து கொண்டிருந்தார்கள். அதை பார்த்து ஒரு ஈர்ப்பு.

ப்லிம் இன்ஸ்ட்டியூட் போறதுக்கு ஒரு டிகிரி வேண்டும். அதை இங்கே இருந்தே படிக்கிறேன் என்று என் அப்பாவிடம் கூறினேன். எங்கப்பா சொன்னார், ‘நீ நல்லா படிக்கிறவன், அங்கே சேர வேண்டும் என்பதற்காக போதுமானதை படித்து முடித்துவிடாதே. உன் தகுதிக்கேற்ப நீ படித்துக் கொள். நாளை அதை படிக்காமல் விட்டுவிட்டோமே என்று கவலைப்பட வேண்டிய அவசியம் இருக்காது. நீ முழுமையாக படித்து விட்டு, அதன் பிறகும் இன்ஸ்ட்டியூட் தான் போக வேண்டும் என்றால், நானே அங்கே சேர்த்து விடுகிறேன்’ என்றார். 

எங்கப்பா சொன்னது எனக்கு சரியாக தோன்றியது. சென்னை மற்றும் கோவையில் இன்ஜினியர் சேர்க்கை கிடைத்தது. நான் கோவை போகிறேன் என்றேன். என் அண்ணன் என்னை தனியாக அழைத்து, ‘நீ தான் சினிமா போறேன்னு சொல்றீயே? கோவையில் இருந்து என்ன பண்ணப் போற? சென்னை போனால், விடுமுறையில் ஷூட்டிங் போய் பார்க்கலாம், சினிமா ஆட்களை சந்திக்கலாம்’ என்று ஐடியா கொடுத்தார். 

இது சரியான ஐடியாவா இருக்கே என்று  சென்னை குரோம்பேட் எம்.ஐ.டி.,யில் பொறியியல் சேர்ந்தேன். அங்கும் போன முதல் நாளே நண்பர்களிடம் ‘நான் இயக்குனராக தான் போகப் போகிறேன்’ என்று எல்லாரிடமும் கூறிவிட்டேன். ‘டைரடக்கர்’ என்று கவுண்டமணி கூறுவாரே, அந்த ஸ்லாங்கில் எனக்கு பட்டப்பெயர் வைத்துவிட்டார்கள். 

எங்கள் கல்லூரியில் கதிரவன் என்கிற நண்பன் ஏரோநாடிக்கல் பண்ணிட்டு இருந்தார். அவர் தான், கல்லூரி முடிய ஒரு மாதம் இருக்கும் போது, ‘என்னோட நண்பன் ப்ரேம், இன்ஸ்ட்டியூட்ல படிச்சிட்டு இருக்கான்; அவனை போய் பாரு’ என்று சொன்னார். நான் போய் ப்ரேமை சந்தித்தேன். சினிமாவில் டெக்னிக்கலா தெரிஞ்சுக்கனும்னா இங்கே படிக்கலாம். இயக்குனராக வேண்டும் என்றால், ஏதாவது ஒரு இயக்குனரிடம் உதவி இயக்குனர் ஆனாலே போதும், எந்த இயக்குனரிடம் போகலாம் என்று நினைக்கிறே?’ என்று என்னிடம்  ப்ரேம் கேட்டார். 

பாரதிராஜா, மணிரத்தினம், பாலுமகேந்திரா, பாலா, சங்கர் சார் ஆகியோரின் பெயர்களை கூறினேன். ‘பெட்ரோ மாஸ் லைட்டே தான் வேண்டுமா?’ என்று ப்ரேம் கேட்டார். ஐந்து பேரையும் விடாமல் ஃபாலோ பண்ண வேண்டும். எல்லாரிடம் உன் ரெசிம் போய் கொடு. அழைப்பார்களா என்று தெரியாது. ஆனால் வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறினார். 

சினிமாவுக்கு ரெசிமா? என்று தோன்றியது. அப்போ அதெல்லாம் உண்மையில் நடைமுறையில் இல்லை. மணி சார் ஆபிஸில் ரெசிம் கொடுத்தேன். அதன் பின் பாலுமகேந்திரா சார் அலுவலகத்திற்கு போனேன். அங்கே வெற்றிமாறன் இருந்தார். அப்போ அவர் உதவி இயக்குனர். வழியிலேயே என்னை தடுத்து, ‘நடிக்க வந்தீங்களா?’ என்று கேட்டார். ‘இல்லை சார் உதவி இயக்குனர் ஆக’ வந்திருக்கேன் என்றேன். 

‘சாரிடம் நிறைய பேர் இருக்காங்க, நீங்க அப்புறம் ட்ரை பண்ணுங்க’ என்று என்னிடம் கூறினார். இந்த பேச்சை எல்லாம் பாலுமகேந்திரா தூரத்தில் இருந்து சார் பார்த்துக் கொண்டிருந்தார். உடனே என்னை உள்ளே அழைத்தார், வெற்றிமாறன் என்னை உள்ளே விட்டார். சினிமாவிற்கு புதுசா? என்று கேட்டார். ஆமாம் சார் என்றேன். 

புத்தகம் படிப்பீங்களா? என்று கேட்டார். நான் இருவர் பெயர் சொல்லி அவர்கள் புக் படிப்பேன் என்றேன். அவர் ஒரு 20 பேர் பெயரை சொல்லி, அவர்களின் புத்தகத்தை படிக்க சொன்னார். உடனே ரெசிம் இருக்கா என்று கேட்டார். எனக்கு ஒரே ஷாக். ஏற்கனவே ரெடி பண்ணி வைத்திருந்ததால், அவரிடம் கொடுத்தேன். ‘வெரி குட்’ என்று பாலுமகேந்திரா சார் சொன்னார். ‘அடுத்த வருடம் ஒரு படம் பண்ணுவேன், அப்போ நான் கூப்பிடுறேன்’ என்று பாலு சார் சொன்னார்,’’
என்று அந்த பேட்டியில் பக்ஸ் கூறியுள்ளார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்