Atlee latest interview: 8 வருட புழுக்கம்.. ஒத்துப்போன ஜாதகம்.. ஓகே சொன்ன அம்மா.. ஷாக்கான பிரியா - அட்லீ காதல் கதை!
இயக்குநர் அட்லீ, தன்னுடைய காதல் கதையை பிரபல தொகுப்பாளர் கோபிநாத் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார்.
இது குறித்து அவர் பேசும் போது, “ நான் சிவாவை பார்க்க வரும் போதுதான் ப்ரியாவை முதன்முறையாக பார்த்தேன். எனக்கு பார்த்த உடனேயே பிடித்து விட்டது. இந்த விஷயம் நடந்தது எனக்கு திருமணமாவதற்கு 8 வருடங்கள் முன்னர். அப்போதுதான் கனாகாணும் காலங்கள் சீரியல் சென்று கொண்டிருந்தது.
அப்படி ஒரு முக அறிமுகம்தான் எனக்கும் அவருக்கும். அதனைத்தொடர்ந்து எந்திரனுக்காக ஒரு டெஸ்ட் ஷூட்டிற்காக நான் அவரை சந்தித்தேன். அவர்களுடைய அம்மா எனக்கு மிகவும் நெருக்கம். ஆனால் அதனை அவரிடம் நான் சொல்லக்கூடிய இடத்தில் அப்போது இல்லை.
அப்போது முதலில் நாம் யார் என்பதை முடிவு செய்வோம். அதன் பின்னர்தான் அதனை பற்றி யோசிக்க வேண்டும் என்று நினைத்தேன். அதனால் நான் 8 வருடங்களாக அதனை பற்றி யோசிக்காமல் உழைப்பில் மட்டுமே கவனம் செலுத்திக்கொண்டிருந்தேன்.
எனக்குள் காதல் இருப்பது ப்ரியாவிற்கு தெரியாது. அவள் என்னை ஒரு நல்ல நண்பராக மட்டும்தான் நினைத்துக்கொண்டிருந்தார். அவர் என்னைக்கூப்பிடுவது டைரக்டரே... என்றுதான் கூப்பிடுவார். என்னுடைய அம்மாவிற்கு பிறகு என்னை டைரக்டர் என்று கூப்பிட்டது அவர்தான்.
அதன்பின்னர் ராஜா ராணி திரைப்படம் வெளியானது. அந்த சமயத்தில் எல்லாம் சரியாக நடப்பது போன்று தெரிந்தது. ஒரு நாள் நண்பர்கள் முன்னால் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் போது அவர் வீட்டில் தனக்கு மாப்பிள்ளை பார்க்கிறார்கள் என்று கூறினார். அப்போது நான், அப்படியானல் நான் வேண்டுமென்றால் ஜாதகம் கொடுக்கவா? என்று கேட்டேன். அதற்கு அவர் காமெடி செய்யாதீர்கள் டைரக்டரே என்று சொன்னார். அவர் அதனை சீரியஸாக எடுத்துக்கொள்ள வில்லை என்று தெரிந்ததும், அவரது அம்மாவை சென்று சந்தித்து விஷயத்தை சொன்னேன். அவர் அம்மா ஜாதகம் கொடுங்கள் என்றார். ஜாதகம் பார்த்த ஜோசியர் நன்றாக சொல்லி விட, நானும் ப்ரியாவும் பேசினோம். அடுத்த 1 ½ மாதத்தில் திருமணம் நடந்தது” என்று பேசினார்.
டாபிக்ஸ்