AR Rahman: மெட்ரோ ரயிலில் கேசுவலாகப் பயணித்த ஏ.ஆர்.ரஹ்மான் - என்னவாம்?
இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கேசுவலாக மெட்ரோ ரயிலில் பயணித்தபோது எடுத்தபடங்கள் வைரல் ஆகியுள்ளன.
ஆடுஜீவிதம் படத்திற்கான புரோமோசன் வீடியோவுக்காக, கொச்சி மெட்ரோவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பயணம் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வைரல் ஆகி வருகிறது.
வரும் மார்ச் 28ஆம் தேதி தமிழ், மலையாளம் எனப் பல்வேறு மொழிகளில் வெளியாகும் திரைப்படம், ஆடுஜீவிதம். இந்த திரைப்படம் மலையாளத்தில் ‘பென்யாமின்’ எழுதிய ‘ஆடுஜீவிதம்’ நாவலை அடிப்படையாகக் கொண்டது.
ஆடு ஜீவிதம் நாவலின் கதை என்ன?: சவூதி அரேபியாவுக்குச் சென்று நன்கு சம்பாதித்து, தனது குடும்பத்தைக் காப்பாற்ற நினைக்கும் இளைஞர், நஜீப் முகமது. அங்கு பணிக்குச் சென்றபோது ஆடு மேய்க்கும் அடிமைத்தனமான பணிக்கு அமர்த்தப்படுகிறார். அங்கு இருந்து தப்பி பல்வேறு கட்டப்போராட்டங்களுக்குப் பின், அவர் தாயகமான இந்தியாவுக்கு எப்படி திரும்பி வருகிறார் என்பது தான், ஆடுஜீவிதம் நாவலின் கதை.
இந்த நாவலை 2008ஆம் ஆண்டில் இயக்க அனுமதி பெற்ற, இயக்குநர் பிளெஸ்ஸி, 10 ஆண்டுகள் ஆய்வு செய்து 2018ஆம் ஆண்டில் படப்பிடிப்பைத் தொடங்கினார்.
இந்தப் படத்தின் கதையின் நாயகனாக நடிகர் பிருதிவிராஜ் நடித்துள்ளார்.மேலும் அமலா பால், வினீத் சீனிவாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இடையில் வந்த கோவிட் 19 கெடுபிடிகளுக்குப் பின், இப்படம் இறுதியாக ஜூலை 14, 2023ஆம் தேதி முழுவதுமாக படமெடுத்து முடிக்கப்பட்டது. அதற்குப் பின், போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நடைபெற்றன. இப்படத்துக்குண்டான இசையை ஏ.ஆர்.ரஹ்மான் செய்கிறார். முழுக்க முழுக்க உலகத்தரத்தில் தயாராகி வரும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, கேரள மாநிலம், அங்கமாலியில் உள்ள அட்லக்ஸ் கன்வென்ஷன் சென்டரில் வரும் மார்ச் 10ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இப்படத்திற்கான புரோமோஷனுக்காக உருவான வீடியோவில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான், கொச்சி மெட்ரோ ரயிலில் தோன்றி நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்போது அருகில் இருந்த இசைக்கலைஞர்களுடன் வெறும் கைகளைக் கட்டிக்கொண்டு, ஏ.ஆர்.ரஹ்மான் எளிமையாக கொடுத்த போஸ் வைரல் ஆகி வருகிறது.
இப்படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் ஜோர்டனில் படமாக்கப்பட்டதாகத் தெரிகிறது. இப்படம் பிருதிவிராஜின் திரைவாழ்க்கையில் நிறைய அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும் படமாகப் பார்க்கப்படுகிறது. இப்படம் தமிழ் மட்டுமின்றி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய இந்தியமொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் ஒளிப்பதிவை சுனில் கே.எஸ். மேற்கொள்ள, படத்தொகுப்பினை ஸ்ரீகர் பிரசாத் புரிந்துள்ளார். இப்படத்துக்குண்டான சவுண்ட் மிக்ஸிங் பணியை, ஆஸ்கர் வென்ற ரசூல் பூக்குட்டி செய்கிறார்.
அதனால் இப்படமும் பல்வேறு விருதுகளைக் குவிக்கும் எனப் பலர் கருதுகின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9