'இந்தி சினிமா பின்தங்கியுள்ளது' - மஞ்ஞுமெல் பாய்ஸ், பிரம்மயுகம் பார்த்து பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் சொன்னது!
மலையாளத்தில் வெளியான மஞ்ஞுமெல் பாய்ஸ், பிரம்மயுகம் ஆகியப் படங்களைப் பார்த்துவிட்டு பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் புகழ்ந்துள்ளார்.
மலையாளத்தில் வெளியான மஞ்ஞுமெல் பாய்ஸ், பிரம்மயுகம் ஆகியப் படங்களைப் பார்த்துவிட்டு, லெட்டர் பாக்ஸ் சமூக வலைதளத்தில் இயக்குநர் அனுராக் காஷ்யப் மனதாரப் பாராட்டினார்.
மேலும் அவர் மஞ்ஞுமெல் பாய்ஸ், பிரம்மயுகம் படம் பார்த்துவிட்டு இந்தி சினிமா பின்தங்கியுள்ளது எனத் தெரிவித்தார்.
'இந்தியில் இதுபோன்ற ஐடியாக்களை ரீமேக் செய்ய மட்டுமே அவர்களால் முடியும்' :
லெட்டர்பாக்ஸ் சமூக வலைதளத்தில் மஞ்ஞுமெல் பாய்ஸுக்கு ஒரு விமர்சனத்தைப் பதிவிட்ட பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், பாலிவுட்டின் தற்போதைய நிலைகுறித்து மிகவும் வருத்தப்பட்டார்.
பிரம்மயுகம், மஞ்ஞுமெல் பாய்ஸ் படங்கள் குறித்து அவர் எழுதியுள்ளதாவது, "நம்பிக்கையான திரைப்பட இயக்கத்தின் அசாதாரண துண்டு இதுவாகும். இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய பட்ஜெட் படத் தயாரிப்புகளையும் விட இது மிகவும் சிறந்தது. அத்தனை தன்னம்பிக்கை, அசாத்திய கதை சொல்லல். இந்த ஐடியாவை எப்படி ஒரு தயாரிப்பாளருக்கு சொல்லமுடியும் என்று யோசித்தேன். இந்தியில் இதுபோன்ற ஐடியாக்களை ரீமேக் செய்தால் மட்டுமே நடிக்க முடியும். இந்தி சினிமா உண்மையில் இதுவரை வந்த இந்த இரண்டு மலையாளப் படங்களுடன் ஒப்பிடுகையில் பின்தங்கியுள்ளது’’ என்றார்.
மேலும் அனுராக் காஷ்யப், மலையாள திரைப்படத் தயாரிப்பாளர்களின் துணிச்சலைக் கண்டு பொறாமைப்படுவதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர், ‘’மலையாள சினிமாக்காரர்களை பார்த்து எனக்கு ரொம்ப பொறாமை வருகிறது. கேரளாவின் தைரியம், துணிச்சல் மற்றும் அற்புதமான விவேகமான பார்வையாளர்கள் திரைப்படத் தயாரிப்பை மேம்படுத்துகிறார்கள். எனக்கு ரொம்ப பொறாமையாக இருக்கிறது. அடுத்து காதல்: தி கோர் படத்தை பார்க்கப் போகிறேன்’’ என்றார்.
மேலும் அவர், கிரண் ராவின் லாபதா லேடீஸைப் பார்த்த பிறகு கொஞ்சம் ஆறுதல் அடைந்தார். இப்படம் குறித்து அவர் எழுதியுள்ளதாவது, "கிரணின் இதுபோன்ற ஆத்மார்த்தமான நேர்மையான படத்தைப் பார்த்த பிறகு என் இதயம் மிகவும் நிறைந்துள்ளது. குழந்தை போல அழுதேன். ஒரு நிரம்பிய வீட்டைப் பார்ப்பது இந்தி சினிமா மற்றும் அதன் பார்வையாளர்கள் மீதான நம்பிக்கையை மீண்டும் தருகிறது. அழகான எழுத்து, நேர்மையான நடிப்பு. பேரின்பம்" என்று அவர் இணையதளத்தில் எழுதினார்.
பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப், இன்ஸ்டாகிராமில் ஒரு நீண்டக் குறிப்பை எழுதியுள்ளார். அதன் ஒரு பகுதியில், "ஆ.. அடுத்தடுத்து இரண்டு மலையாளப் படங்களை (மஞ்ஞுமெல் பாய்ஸ், பிரம்மயுகம்) பார்த்துவிட்டு, இந்தி சினிமாவில் ஏன் இவ்வாறு எடுக்கவில்லை என்று யோசித்தேன். பிறகு, இயக்குநர் கிரண் ராவின் லாபதா லேடீஸை நிஜமாகவே பார்த்தேன். இது எனக்கு இந்தியாவில் சினிமாவுக்கு 2024ஆம் ஆண்டின் சிறந்த தொடக்கமாகும்" என்று விவரித்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9