சென்னை திரைப்பட விழாவில் விருதுகளை அமரன், மகாராஜா! தங்கலானுக்கு சிறப்பு விருது! வெற்றியாளர்கள் முழு லிஸ்ட்
22வது சென்னை திரைப்பட விழாவில் 5 விருதுகளை அமரன் படம் வென்றுள்ள நிலையில், அடுத்ததாக விஜய் சேதுபதியின் மகாராஜா 3 விருதுகளையும், தங்கலான், வேட்டையன் ஆகிய படங்கள் 2 விருதுகளையும் வென்றுள்ளது.
22வது சென்னை திரைப்பட விழா கடந்த 12ஆம் தேதி தொடங்கிய நிலையில், 19ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து இந்த ஆண்டுக்கான திரைப்படவிழாவின் நிறைவு நிகழ்ச்சி சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் விருது வென்று படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
விருதுகளை அள்ளிய அமரன்
சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி ரிலீசாக வெளியாக ரசிகர்களை கவர்ந்து, பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்திய அமரன் திரைப்படம், சென்னை திரைப்பட விழாவில் 5 விருதுகளை அள்ளியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக விஜய்சேதுபதியின் 50வது படமான மகாராஜா மூன்று விருதுகளை வென்றுள்ளது.
விருது வென்ற படங்களும், கலைஞர்களும் பின்வருமாறு
- சிறந்த படம் - அமரன்
- சிறந்த நடிகர் - விஜய் சேதுபதி (மகாராஜா)
- சிறந்த நடிகை - சாய் பல்லவி (அமரன்)
- சிறந்த இயக்குநர் - ராஜ்குமார் பெரியசாமி (அமரன்)
- சிறந்த இசையமைப்பாளர் - ஜி.வி. பிரகாஷ் குமார் (அமரன்)
- சிறந்த ஒளிப்பதிவு - சாய் (அமரன்)
- சிறந்த துணை நடிகர் - தினேஷ் (லப்பர் பந்து)
- சிறந்த துணை நடிகை - துஷாரா (வேட்டையன்)
- சிறந்த குழந்தை நட்சத்திரம் - பொன்வேல் (வாழை)
- சிறந்த படத்தொகுப்பாளர் - பிலோமின் (மகாராஜா)
- சிறந்த கலை இயக்குநர் - மூர்த்தி (தங்கலான்)
- சிறந்த ஒலிப்பதிவு - சுரேன் அழகிய கூத்தன் (கொட்டுக்காளி)
- சிறந்த பொழுதுபோக்கு படம் - வேட்டையன்
- சிறந்த படம் ஸ்பெஷல் ஜூரி விருது - தங்கலான்
- சிறந்த கதை - நித்திலன் சுவாமிநாதன் (மகாராஜா)
- மக்களின் பேவரிட் நடிகர் - அரவிந்த் சாமி (மெய்யழகன்)
- மக்களின் பேவரிட் நடிகை - அன்னா பென் (கொட்டுக்காளி)
- சிறந்த சமூக பிரச்னை படம் - நந்தன் (இயக்குநர் இரா. சரவணன்)
- சிறந்த குறும்படம் - கயமை
22வது சென்னை திரைப்பட விழா
தமிழ்நாடு அரசு ஆதரவுடன், சென்னை இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் சார்ப்பில் 22வது சென்னை திரைப்பட விழாவை, கடந்த 12ஆம் தேதி சென்னை, ராயப்பேட்டையில் உள்ள சத்யம் திரையரங்கில் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். இதையடுத்து பி.வி.ஆர் ராயப்பேட்டை, பி.வி.ஆர். மைலாப்பூர் மற்றும் ரஷ்யன் ஹவுஸ் ஆழ்வார்பேட்டை ஆகிய இடங்களில் திரைப்பட விழாவில் திரையிட தேர்வான படங்கள் திரையிடப்பட்டன.
விழாவில் பல்வேறு நாட்டு மொழிகளை சேர்ந்த 180 படங்கள் திரையிடப்பட்டன. இதில் கேன்ஸ் விழாவில் விருதுபெற்ற மற்றும் பரிந்துரைக்கப்பட்ட 11 திரைப்படங்கள், வெனிஸ் விழாவில் விருது வாங்கிய 3 படங்கள், பெர்லின் விழாவில் வெற்றிபெற்ற மற்றும் பங்கேற்ற 8 திரைப்படங்களும் அடங்கும்.
இந்த ஆண்டில் தமிழில் வெளியான சிறந்த 25 படங்கள் திரையிடப்பட்டன. இதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.
உணர்ச்சி வசப்பட வைத்துள்ளது
விருது வென்றது குறித்து நடிகை சாய்பல்லவி கூறியதாவது, "சென்னை சர்வதேச விழாவில் சிறந்த நடிகை விருது கொடுக்கப்பட்டதற்கு பெருமையும், சந்தோஷமும் படுகிறார். ரசிகர்கள் கொடுக்கும் அன்பு என்னை உணர்ச்சிவசப்பட வைக்கிறது. இந்த ஆண்டு நிறைய நல்ல படங்கள் வந்துள்ளது. எனக்கு விருது கிடைத்திருப்பதை பெரிய பாக்கியமாக கருதுகிறேன்.
இது எல்லாத்துக்கும் காரணம் முகுந்த் குடும்பத்தினர் அவரது மனைவியும் தான். அவரது வாழ்க்கையை எடுத்த காட்ட அனுமதி அளித்ததால் தான் இது எல்லாமே நடந்துள்ளது" என்றார்
டாபிக்ஸ்