10 நாள் ஆகியும் தமிழ்நாட்டில் அமரனுக்கு குறையாத மவுசு.. நேற்று ஒரே நாளில் 11 கோடிக்கும் மேல் வசூல்..
ராணுவ வீரரின் பயோபிக்காக சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படம், பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியான 10 நாட்களில் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளது.

ராணுவத்தில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் திரைப்படம் தான் அமரன். முகுந்த்தாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் நிலையில், அவரது மனைவி இந்துவாக நடிகை சாய் பல்லவி நடித்து இருக்கிறார். ராஜ் குமார் பெரிய சாமி இயக்கத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் இந்தப் படத்தை கமல்ஹாசன் தயாரித்து இருக்கிறார்.
படம் விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது படம் வெளியிடப்படும் தியேட்டர்களுக்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், படத்திற்கு பல இடங்களில் இருந்தும் எதிரப்பு கிளம்பி வரும் நிலையில் மக்கள் தற்போது கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு படையெடுத்து வசூலை அதிகரித்துள்ளனர்.
படத்திற்கு தொடர்ந்து வரும் மிரட்டல்
அமரன் திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்து வெளியிடப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னை ராயப்பேட்டை, விருகம்பாக்கம் போன்ற பகுதிகளில் இஸ்லாமிய அமைப்பினர் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்தனர்.