சில நிமிடங்களில் மாறிய தீர்ப்பு.. அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் விதித்த உயர் நீதிமன்றம்
14 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டில் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சந்தியா திரையரங்கில் புஷ்பா 2 ப்ரீமீயர் ஷோ பார்க்க வந்த பெண் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தெலுங்கு சினிமா ஐகான் ஸ்டாருக்கு 14 நாள்கள் நீதிமன்ற காவல் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அல்லு அர்ஜுன் தரப்பில் மேலுமுறையீடு செய்யப்பட்டது. இதில் அல்லு அர்ஜுனுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே அவர் சிறை செல்வது தடுக்கப்பட்டுள்ளது. சினிமா பாணியில் சில நிமிடங்களில் அல்லு அர்ஜுனுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை மாற்றி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இடைக்கால ஜாமீன்
அல்லு அர்ஜுன் தரப்பில் தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் வழக்கை விசாரித்த ஜுவ்வாடி ஸ்ரீதேவி, "நடிகர் தனது திரைப்படத்தின் பிரீமியர் காட்சிக்காக திரையரங்குக்கு சாதரணமாக சென்றிருந்தாலும் சம்பவத்துக்கு, அவர்தான் முதன்மையான பொறுப்பு என்பதை ஏற்க முடியாது.
நடிகர் என்று சொல்லி அவரின் உரிமையை பறிக்க முடியாது. இந்த நாட்டின் குடிமகனாக, அவருக்கும் வாழ்வதற்கும், அவரது சுதந்திரத்துக்கும் உரிமை உண்டு. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதிமன்றம் சார்பில் அனுதாபங்கள்" என தெரிவித்தார். அத்துடன் அல்லு அர்ஜுனுக்கு நான்கு வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
தொடர்ந்து அரசு தரப்பில் முன் வைத்த வாதத்தில், "ப்ரீமியர் காட்சியை பார்க்க சென்றால் இதுபோன்ற எதுவும் அசம்பாவிதங்கள் நடக்கலாம் என்பது அல்லு அர்ஜுனுக்கு தெரிந்திருந்தும் அவர் அதை பொருப்படுத்தாமல் வந்ததாக" தெரிவிக்கப்பட்டது.
இதை கேட்ட நீதிபதி, "நடந்த சம்பவகத்துக்கு அவர் மட்டும் தான் காரணமா? அவருக்கு இதைப்பற்றி முன் கூட்டியே தெரியுமா? என சரமாரி கேள்வி எழுப்பியதுடன், படம் பார்க்க வருவது பற்றி ஏற்கனவே தெரிவித்துள்ளார் எனவும் கூறினார்.
ஷாருக்கான் வழக்கை முன் வைத்து வாதம்
இதையடுத்து அல்லு அர்ஜுன் தரப்பில் வழக்கறிஞர், "அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்துவதற்காக தான். நீதிமன்றத்தின் விசாரணைக்கு தங்கள தரப்பில் முழு ஆதரவும் அளிக்க தயார்.
இதுபோன்றதொரு சம்பவம் பாலிவுட் சினிமாவிலும் நடந்துள்ளது. 2017இல் ஷாருக்கான் நடித்த ராயிஸ் படம் ரிலீஸ் சமயத்தில் நடந்த புரொமோஷனில் ரசிகர்களை அவர் சந்தித்தபோது ஏற்பட்ட கூட்ட நெரசலில் பலருக்கு காயம் ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக ஷாருக்கான் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கை குஜராத் நீதிமன்றம் ரத்து செய்தது. இதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது" என்று வாதிட்டார்.
ராஷ்மிகா வருத்தம்
அல்லு அர்ஜுன் கைது தொடர்பாக தெலுங்கு சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் அவருக்கு ஆதரவு அளித்து கருத்துகளை பகிர்ந்து வருகிறார்கள். இதையடுத்து புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுன் ஜோடியாக நடித்த ராஷ்மிகா இந்த கைது நடவடிக்கை பற்றி தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
"நடந்திருக்கும் விஷயத்தை என்னால் நம்ப முடியவில்லை. நடந்த சம்பவம் துரதிஷ்டவசமானதும், மிகுந்த வருத்தமளிப்பதாக இருக்கிறது. இருப்பினும், எல்லாவற்றுக்கும் ஒரு தனி நபர் குற்றம் சாட்டப்படுவதைப் பார்ப்பது வருத்தமளிக்கிறது. இது இதயத்தை நொறுக்குகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
டாபிக்ஸ்