Surya:சூர்யாவிற்காக மக்களை வெயிலில் காக்க வைத்த நிர்வாகம்; நடந்தது என்ன?
கீழடி அருங்காட்சியகத்தில் சூர்யா ஜோதிகா வருகையின் காரணமாக பொதுமக்கள் வெயிலில் காக்க வைக்கப்பட்டிருந்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 18 கோடியே 41 லட்சம் ரூபாய் செலவில் 2 ஏக்கர் பரப்பளவில் உலக தரம் வாய்ந்த அருங்காட்சியகம் 10 கட்டிடங்களுடன் கட்டப்பட்டுள்ளது.
இதில் 6 கட்டிடங்களில், இரண்டு தளங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழங்கால பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நெசவு , விவசாயம், அலங்கார பொருட்கள். வணிகம் உள்ளிட்ட பல்வேறு தரப்பிலான பொருட்களுக்கு தனிதனி தொகுதிகள் ஒதுக்கப்பட்டு அவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கட்டிட தொகுதிகளிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களுக்கு ஏற்ப வீடியோ காட்சிகள், அனிமேஷன் காட்சிகள் அருகில் அமைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப படுகின்றன. முன்னதாக இந்த அருங்காட்சியகம் மக்களின் பார்வைக்கு இலவசமாக விடப்பட்டு இருந்தது.
இந்தநிலையில் நேற்று முதல் (ஏப்ரல் 1 -2023) முதல் அருங்காட்சியகத்தை கட்டணம் செலுத்தி பார்வையிடும் விதிமுறையானது அமலுக்கு வந்தது. இதனை முன்னிட்டு காலை 9 மணி அளவில் நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, சிவகுமார் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ஆகியோர் அருங்காட்சியகத்திற்கு வருகை தந்து, அங்கு அமைக்கப்பட்டிருந்த தமிழர்களின் அடையாளங்களை பார்த்து ரசித்தனர்.
9 மணிக்கு உள்ளே சென்ற அவர்கள் கிட்டத்தட்ட 1 மணி நேரத்திற்கும் மேலாக அருங்காட்சியகத்தை பார்த்ததாக தெரிகிறது. வழக்கமாக அருங்காட்சியகம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை மக்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டு இருக்கும் நிலையில், 10 மணிக்கும் மேலாக அவர்கள் அருங்காட்சியகத்தை பார்வையிட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் அருங்காட்சியகத்தை பார்க்க வந்திருந்த பள்ளிக்குழந்தைகளும், பொதுமக்களும் வெளியே வெயிலில் காக்கவைக்கப்பட்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. காலதாமதம் குறித்து அவர்கள் போலீசாரிடம் கேட்டுள்ளனர்.
அப்போது போலீசார் உள்ளே நடிகர்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் அதுவரை காத்திருக்க வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது. இதைக்கேட்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனைத்தொடர்ந்து 10 .25 மணிக்கு சூர்யா ஜோதிகா கிளம்பியவுடன் பொதுமக்களை போலீசார் உள்ளே அனுமதித்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது பேசு பொருளாக மாறியிருக்கிறது.
டாபிக்ஸ்