22 Years of Citizen: மாறுபட்ட கிளைமாக்ஸ் - இது கதையல்ல கருப்பு சரித்திரம்! அஜித் கேரியரில் கோடிகளை அள்ளி கொடுத்த படம்
கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக கெட்டப் மாற்றம், மாறுபட்ட மேக்கப் என்ற முயற்சியில் ஈடுபட்ட விக்ரமுக்கு அடுத்தபடியாக அஜித்குமாரும் தன்னை இணைத்து கொண்ட படம் சிட்டிசன். இந்த படத்தில் 9 விதமான கெட்டப்புகளில் தோன்றி ரசிகர்களுக்கு விருந்து படைத்திருப்பார்.
அஜித் சினிமா கேரியரில் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாகவும், அவரை ஆக்ஷன் ஹீரோவாகவும் நிலை நிறுத்திய படம் சிட்டிசன். கமலுக்காக தயார் செய்யப்பட்ட என கூறப்பட்டாலும் அவர் நடிக்க முடியாமல் போக அஜித்திடம் சென்றுள்ளது இந்தப் படம்.
அதுவரை பீல் குட் படங்கள், குடும்ப பாங்கான கதாபாத்திரங்கள், மாறுபட்ட கதையம்சம் கொண்ட படங்களிலும் நடித்து வந்த அஜித்தை தீனா படம் மூலம் முழுமையான ஆக்ஷன் ஹீரோவாக்கினார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். 2001 பொங்கல் வெளியீடாக வந்த தீனா சூப்பர் ஹிட்டாகி அஜித்தின் இமேஜ்ஜை உயர்த்தியதோடு, தல என்ற பட்டத்தையும் அவருக்கு பெற்று தந்தது.
தல அஜித்தாக மாறிய பிறகு அவரது நடிப்பில் வெளியான சிட்டிசன் பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட்டானது. படத்தில் அஜித்தின் 9 விதமான கெட்டப்புகள், வலுவான திரைக்கதை, ஷார்ப்பான வசனங்கள் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தன. அத்துடன் படத்தில் இடம்பிடித்த அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின.
துணிவு படத்துக்கு முன்பாக சமூக சிந்தனை கொண்ட கதையம்சத்தில் அஜித் நடித்த படமாக இது அமைந்திருந்தது. அரசு அதிகாரிகளின் சுயநலத்தால் 690 பேர் வசிக்கும் கடற்கரை தீவு கிராமத்தினர் அனைவரும் கொல்லப்பட்டு, இந்திய வரைபடத்தில் இருந்து காணாமல் போகும் கிராமம், அதிலிருந்து தப்பிக்கும் சிறுவன் அதற்கு காரணமான அரசு அதிகாரிகளை பழிவாங்குவது என சிம்பிளான கதையாக இருந்தாலும், படத்தின் திரைக்கதையும், படத்தின் இயக்குநர் ஷரவண சுப்பையா மற்றும் வசனகர்த்தா பாலகுமாரனின் வசனங்களும் படத்துக்கு வலு சேர்க்கும் விதமாக அமைந்தன.
பிளாஷ்பேக் காட்சி தொடங்குவதற்கு முன்னர் நீதிமன்றத்தில் வைத்து அஜித் சொல்லும் இது கதையல்ல கருப்பு சரித்திரம் என்ற சொல்லும் வசனம் மிகவும் பிரபலமானது. டிஜிட்டல் தலைமுறையினர் இல்லாத அந்த காலகட்டத்தில் மிமிக்ரி கலைஞர்களின் பிரதான வசனமாகவே இவை இருந்தது.
கிளைமாக்ஸ் காட்சியில் நிகழும் டுவிஸ்ட் இதுவரை தமிழ் சினிமாவில் கண்டிராத காட்சி அமைப்பும், திருப்புங்களும் அமைந்திருப்பது ரசிகர்களுக்கு புதுமையான விஷயமாக சர்ப்ரைஸ் அளித்தது என்றே உறுதியாக கூறலாம்.
இந்த படம் வெளியான ஆண்டில் ரிலீஸான ஹேராம் படத்தில் பிரபலமான பாடகியும், ஹீரோயினுமான வசுந்த்ரா தாஸ் படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பார். மீனா பிளாஷ் பேக் காட்சியில் வரும் கதாநாயகியாக நடித்திருப்பார். முக்கிய கதாபாத்திரத்தில் ஜெமினி கணேசன் நடிப்பதாக இருக்க, பின்னர் அவர் தொடர்பான காட்சிகள் மாற்றி அமைக்கப்பட்டு அதில் பாண்டியன் நடித்தார்.
தீனா படம் வெளியாவதற்கு முன்னரே இந்த படத்தின் ஷுட்டிங் நடைபெற்ற நிலையில், தீனாவின் வெற்றிக்கு பிறகு படம் தொடர்பாக அப்டேட்கள் வெளியிட்டு ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தினர். குறிப்பாக 9 கெட்டப்பில் அஜித் தோன்ற இருப்பதாக என வெளியான செய்தி ரசிகர்களை மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
பின்னர் படத்தின் வெளியீட்டின்போது அஜித்தின் கெட்டப் போஸ்டர்கள் வெளியிடப்பட அதை வைத்து அ்ஜித் ரசிகர்கள் அப்போதே மிகப் பெரிய கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். எம்ஜிஆருக்கு உலகம் சுற்றும் வாலிபன், சிவாஜிக்கு திரிசுலம், ரஜினிக்கு பாட்ஷா, கமலுக்கு சகலகலா வல்லவன் அஜித்துக்கு சிட்டிசன் என அஜித்தின் ஒவ்வொரு லுக்கிலும் போஸ்டரை ஒட்டி படத்தின் எதிர்பார்ப்பை எகிற வைத்தனர்.
பழிக்கு பழி என்ற கிளிஸே கதையில் புதுமையான திரைக்கதை, அஜித் தனது திறமையை வெளிக்காட்டுவதற்கான ஸ்கோப் உருவாக்கி தனது அறிமுக படத்திலேயே அசத்தியிருப்பார் இயக்குநர் ஷரவண சுப்பையா. இந்த படத்துக்கு முன்னர் பல்வேறு ஹிட்களை அஜித்துக்கு கொடுத்த தேவா, சிட்டிசன் படத்துக்கு இசையமைத்திருப்பார்.
படத்தின் பாடல்கள், பின்னணி இசை என இரண்டிலும் ரசிகர்களை கவரும் விதமாக இசையமைத்திருப்பார். கோடிகளுக்கு மேலான பட்ஜெட்டில் உருவான அஜித் படம் என்ற வெளியாவதற்கு முன் அனைவரையும் ஆச்சர்யப்படுத்திய சிட்டிசன் வசூலிலும் கோடிகளை அள்ளி அவர்களின் புருவத்தையும் உயர செய்தது. அஜித் கேரியரில் அவருக்கு கமர்ஷியல் பாதையை அமைத்து கொடுத்த சிட்டிசன் வெளியாகி இன்றுடன் 22 ஆண்டுகள் ஆகிறது.
டாபிக்ஸ்