26 Years of Aval Varuvala: முதல் முறையாக அஜித் - சிம்ரன் ஜோடியாக இணைந்த படம்! காதல் கலந்த பேமிலி எண்டர்டெய்னர்
முதல் முறையாக அஜித் - சிம்ரன் ஜோடியாக இணைந்த அவள் வருவாளா படம் காதல் கலந்த பேமிலி எண்டர்டெய்னராக ரசிகர்களை கவர்ந்தது. ரீமேக் படமாக இருந்தாலும் அஜித்தின் சினிமா கேரியரை உயர்த்தியதில் முக்கியமான படமாக அவள் வருவாளா இருந்தது.
தமிழ் சினிமாவில் அஜித்குமார் வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்த காலகட்டத்தில் அவருக்கு சூப்பர் ஹிட்டாக அமைந்த படம் அவள் வருவாளா. அஜித் - சிம்ரன் முதல் முறையாக இணைந்த இந்த படத்தில் கவுண்டமணி, செந்தில், பப்லு ப்ருத்விராஜ், சுஜாதா, வெண்ணிற ஆடை மூர்த்தி, கோவை சரளா, தாமு உள்பட பலரும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.
தெலுங்கு ரீமேக்
அமெரிக்க சைக்கோ திரில்லர் படமான ‘ஸ்லீப்பிங் வித் தி எனிமி’, மலையாள படமான 'மஞ்சு விரிச்ச பூக்கள்' ஆகிய இரண்டு திரைப்படங்களையும் அடிப்படையாக கொண்டு உருவானது 'பெள்ளி' என்ற தெலுங்கு படம். இதை தமிழில் 'அவள் வருவாளா' என ரீமேக் செய்திருந்தார் இயக்குநர் ராஜ் கபூர்.
காதல், காமெடி கலந்த குடும்ப திரைப்படமாக அவள் வருவாளா படத்தை உருவாக்கியிருப்பார்கள். ஒரே காலனியில் வசித்து வரும் சிம்ரனை காதலித்து வருகிறார். பின்னர் சிம்ரன் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், அவரது பிளாஷ்பேக் குறித்து அஜித்துக்கு தெரிய வருகிறது.
சில திருப்பங்களுக்கு பிறகு அஜித் - சிம்ரனுக்கு திருமண ஏற்பாடு நடக்க, சிம்ரனின் முன்னாள் கணவர் பப்லு ப்ருத்விராஜ் வருகிறார். அதன் பின்னர் என்ன நடந்தது என்பதை எதிர்பாராத திருப்புமுனையுடன் சொல்லியிருப்பார்கள்.
அஜித்தை விட ஹீரோயினான சிம்ரனை சுற்றித்தான் படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. சிம்ரனும் தனது கதாபாத்திரத்துக்கு ஏற்பட தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். சிம்ரனை விரட்டி காதலிப்பதும், உண்மை தெரிந்த பின்னர் அவருக்கு வேண்டிய ஆதரவை தருவதும் என தேர்ந்த நடிப்பை அஜித் வெளிப்படுத்தியிருப்பார்.
இந்த படத்தின் வெற்றியால் அஜித் - சிம்ரன் ஜோடி இணைந்து அடுத்த ஆண்டிலேயே வாலி படத்தில் நடித்தார்கள்.
பிளாஷ் பேக் காட்சியில் சைக்கோ கணவனாக வில்லத்தனத்தில் பிருத்வி பிரமாதப்படுத்தியிருப்பார். இதேபோல் கவுண்டமணி, செந்தில், வெண்ணிற ஆடை மூர்த்தி காமெடிகள் ரசிக்கும் விதமாக அமைந்திருக்கும்.
ரசிகர்களை கவர்ந்த பாடல்கள்
பழநிபாரதி பாடல் வரிகளுக்கு எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்திருப்பார். அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டாகின. 'ஓ வந்தது பெண்ணா', 'சிக்கி முக்கி உய்யாலா', 'இது காதலின் சங்கீதம்', 'காதல் என்ன கண்ணாமூச்சி ஆட்டமா', 'சேலையில வீடு கட்டவா' என அனைத்து பாடல்களும் அந்த காலகட்டத்தில் ரிப்பீட் மோடில் கேட்கப்பட்ட பாடல்களாக இருந்தன.
பாடல்கள் படமாக்கப்பட்ட விதமும், அஜித், சிம்ரனின் டான்ஸும் அப்போதைய ட்ரெண்டிங்காக இருந்து வந்தன. படத்தின் க்ளைமாக்ஸில் தனது மருமகளை மகளாக நினைக்கும் மாமியார்களுக்கு இந்த படம் சமர்ப்பணம் என்று முடித்திருப்பார்கள். அந்த வகையில் மாமியர் - மருமகள் ரிலேஷன்ஷிப்பை சொன்ன விதத்திலும் பேமிலி ஆடியன்சை இந்த படம் கவர்ந்தது.
பாக்ஸ் ஆபிஸ் ஹிட்
இந்த படம் வெளியாவதற்கு சில வாரங்களுக்கு முன்னர் தான் காதல் மன்னன் ஹிட்டால் குஷியில் இருந்த அஜித்துக்கு, மற்றொரு ஹிட்டாக அமைந்த இந்த படம், டபுள் ட்ரீட்டாக மாறியது. ரசிகர்களை, குறிப்பாக பெண் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது இந்த படம். அஜித்துக்கு பெண், குடும்ப ரசிகர்கள் உருவாக காரணமாகவும் அவள் வருவாளா படம் இருந்தது.
90ஸ்களில் அஜித் நடிப்பில் வெளியான சிறந்த படங்களில் ஒன்றாக இருந்து வரும் அவள் வருவாளா வெளியாகி இன்றுடன் 26 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:
Twitter: https://twitter.com/httamilnews
Facebook" https://www.facebook.com/HTTamilNews
You Tube: https://www.youtube.com/@httamil
Google News: https://tamil.hindustantimes.com/
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்