Aishwarya Rajinikanth: ‘தப்புக்கணக்கு போட்டுட்டேன்.. கொஞ்சம் நேரம் கொடுத்திருந்தா..’ - விமர்சனங்களுக்கு ஐஸ்வர்யா பதிலடி!
இரண்டாம் பாதியில், முதல் பாதியில் காண்பிக்கப்பட்ட காட்சிகளுக்கான காரணங்கள் உடைபடும். அவை ஒவ்வொன்றாக உடையும் போது, முதல் பாதியில் இதை சொல்வதற்காகத்தான் அந்த காட்சி வைக்கப்பட்டதா? என்ற கேள்வி எழும் என்று நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை.
லால் சலாம் திரைப்படம் தொடர்பாக எழுந்த விமர்சனங்களுக்கு அந்தப்படத்தின் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிலளித்து இருக்கிறார்.
இது குறித்து அண்மையில் சினிமா விகடன் சேனலுக்கு பேசிய அவர், “ லால் சலாம் படத்தைப் பொறுத்தவரை அந்த கதையில் திருப்புமுனைகளோ அல்லது புதிய விஷயங்களோ கிடையாது.
இதனால் நாங்கள் திரைக்கதையை லீனியராக (நேர்கோட்டில் கதை சொல்வது) கொண்டு செல்ல வேண்டுமா அல்லது நான் லீனியராக ( காட்சியை ஆரம்பித்து, அந்தக்காட்சியை பின்னால் முடிப்பது) கொண்டு செல்ல வேண்டுமா என்பது குறித்து விவாதம் செய்தோம். அப்போது படத்தை நான் லீனியராக கொண்டு செல்லலாம் என்ற முடிவை எடுத்தோம். படத்திலும் அதை நடைமுறைப்படுத்தினோம்.
என்னை பொறுத்தவரை நான் படத்தை முதல் பாதி வேறாகவும் இரண்டாம் பாதி வேறாகவும் பார்க்கவில்லை. ஒரே படமாக பார்த்தேன்.
இரண்டாம் பாதியில், முதல் பாதியில் காண்பிக்கப்பட்ட காட்சிகளுக்கான காரணங்கள் உடைபடும். அவை ஒவ்வொன்றாக உடையும் போது, முதல் பாதியில் இதை சொல்வதற்காகத்தான் அந்த காட்சி வைக்கப்பட்டதா? என்ற கேள்வி எழும் என்று நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை.
ஆனால் படம் பார்த்தவர்கள் முதல் பாதி புரியவே இல்லை என்றும் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை ஒழுங்காக சொல்லவில்லை என்றும் சொன்னார்கள். மேலும் நாங்கள் எந்த கதாபாத்திரத்தை ஃபாலோ செய்து கதையை புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டார்கள்.
ஆனால் நான் அதனை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நினைத்தேன். ஆனால் அங்கு அப்படி நடக்கவில்லை. படம் குறித்து எனக்கு நிறைய விமர்சனங்கள் வந்தன. அதேபோல பாசிட்டிவான கருத்துக்களும் வந்தன. எப்படி நான் பாசிட்டிவான கருத்துக்களை சந்தோஷமாக எடுத்துக் கொள்கிறேனோ? அதேபோல நெகட்டிவான விமர்சனங்களையும் எடுத்துக்கொள்கிறேன்.
படத்தில் இன்னொரு முக்கியமான அம்சம் நேரம். இன்றைய ரசிகர்களுக்கு படத்தை இரண்டு மணி நேரம் 21 நிமிடங்களுக்குள் கொடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால் எனக்கு இன்னும் கொஞ்சம் நேரம் கொடுத்திருந்தால், படத்தை 2 மணி நேரம் 40 நிமிடங்களாக வைத்திருப்பேன். ஒரு இயக்குநராக அது எனக்கு ஏமாற்றம்தான். ” என்று பேசினார்.
டாபிக்ஸ்