Aishwarya rajesh: பெண் சுதந்திரம் பற்றி பேசும் ஐஸ்வர்யா ராஜேஷின் ஃபர்ஹானா டீஸர் வெளியீடு
டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தர படங்களுக்கு அடுத்தபடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் கதையின் நாயகியாக நடித்திருக்கும் படமாக ஃபர்சானா உள்ளது. இதன் ட்ரெய்லர் வெளியாக சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்து வருகிறது.
கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகியாக இருந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த ஆண்டில் மட்டும் கைவசம் அரை டஜன் படங்களுக்கு மேல் வைத்துள்ளார். இவர் கமிட்டாகியுள்ள படங்கள் அனைத்தும் ஒவ்வொரு ஸ்டேஜ்ஜில் இருந்து வருகின்றன.
இதையடுத்து ஒரு நாள் கூத்து பட இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கியிருக்கும் ஃபர்ஹானா என்ற படத்தில் கதையின் நாயகியாக நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இந்தப் படத்தில் இயக்குநர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், ஐஸ்வர்யா தத்தா, அனுமோல் உள்பட பலரும் நடித்திருக்கிறார்கள்.
படத்துக்கு இசை - ஜஸ்டின் பிரபாகரன். ஒளிப்பதிவு - கோகுல் பினோய். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. சமீபத்தில் சென்சார் செய்யப்பட்ட இந்தப் படத்துக்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
இதையடுத்து இந்தப் படத்தின் ட்ரெயலர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. திருமணத்துக்கு பிறகு வேலைக்கும் செல்லும் இஸ்லாமிய பெண் வேடத்தில் ஐஸ்ர்யா ராஜேஷ் நடித்துள்ளார்.
பெண் சுதந்திரம் குறித்து அழுத்தமாக பேசும் விதமாக வசனங்களோடு இடம்பிடித்திருக்கும் படத்தின் ட்ரெய்லருக்கு லைக்குகள் குவிந்து வருவதோடு, அதிகமாக பகிரப்பட்டும் வருகிறது.
தனியாக உணர்கிறீர்களா இந்த எண்ணில் பேசுங்கள் என்று குறிப்பிட்டு பலருக்கும் மெசேஜ்களை வருவதை பார்த்துள்ளோம். அப்படி வரும் எண்களுக்கு போனில் அழைத்தால் அழகான பெண் குரல் உங்களிடம் அக்கறையுடனும், அரவணைப்பாகவும் பேசி உரையாடல் நிகழ்த்துவார்கள். இதுபோன்ற ஒரு சாட்டிங் நிறுவனத்தில் தனது குடும்பத்தின் கஷ்டத்தை கருத்தில் கொண்டு வேலை செய்யும் ஐஸ்வர்யா ராஜேஷ் தனது எதார்த்த வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களை பின்னணியாக கொண்ட கதையம்சத்தில் இந்த படம் உருவாகியிருக்கும் என தெரிகிறது.
ட்ரெய்லர் மூலம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ஃபர்ஹானா திரைப்படம் மே மாதம் 12ஆம் தேதி திரைக்கு வருகிறது.
ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் ஜஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தி கிரேட் இந்தியன் கிச்சன், ரன் பேபி ரன் என இரண்டு படங்கள் ஒரே நாளில் வெளியாகின. இதில் ரன் பேபி ரன் த்ரில்லர் படமாகவும், தி கிரேட் இந்தியன் கிச்சன், தங்களது கனவுகள், எதிர்காலத்தை மறந்து சமையலறையிலேயே நாள் முழுவதையும் கழிக்கும் இந்திய பெண்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமான கதையம்சத்திலும் அமைந்திருந்தன.
இதைத்தொடர்ந்து தற்போது வெளியாக இருக்கும் ஃபர்ஹானா திரைப்படம் குடும்ப பெண் சுதந்திரம் பற்றி பேசும் விதமாக அமைந்துள்ளது.
டாபிக்ஸ்