Adutha Veettu Penn: பம்பர் ஹிட்.. நகைச்சுவை சரவெடி..64 ஆண்டுகளை நிறைவு செய்த 'அடுத்த வீட்டுப் பெண்'!
64 years of Adutha Veettu Penn: பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி நடிப்பில் வெளியான அடுத்த வீட்டுப் பெண் திரைப்படம் வெளியாகி இன்றோடு 64 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
தமிழ் சினிமா இன்றைக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் பல்வேறு வளர்ச்சிகளை கண்டிருந்தாலும், பழைய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மவுசு குறையவில்லை என்றே சொல்லலாம். அதனால்தான் இன்றைக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் பழைய படங்கள் மறுஉருவாக்கம் செய்யப்பட்டு மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு வருகிறது.
சில படங்கள், மறக்கவே முடியாத படங்களாகவும் எத்தனை முறை பார்த்தாலும் அலுக்கவே அலுக்காத படங்களாகவும் அமைந்துவிடுவது உண்டு. மறக்க முடியாத பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், திகைப்பூட்டும் க்ரைம் காட்சிகள், வாழ்க்கை தத்துவங்கள் என ஏதோ ஒன்றின் மூலம் பழைய திரைப்படங்கள் நம்மை பின்னோக்கி இழுத்துச் செல்கின்றன.
அந்த வகையில், பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி நடிப்பில் வெளியான அடுத்த வீட்டுப் பெண் திரைப்படம் நம்மை இன்றைக்கு பின்னோக்கி இழுத்துச் செல்கிறது. ஆம், இந்தப் படம் வெளியாகி இன்றோடு 64 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
'அடுத்த வீட்டுப் பெண்' 1960 ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 11 ஆம் தேதி வெளிவந்த நகைச்சுவைத் தமிழ்த் திரைப்படமாகும். வேதாந்தா ராகவைய்யா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி.ஆர். ராமச்சந்திரன், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். நடிகை அஞ்சலி தேவியின் கணவர் ஆதி நாராயண ராவ் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.
'அடுத்த வீட்டுப் பெண்' திரைப்படம் 1959-ல் தெலுங்கில் வெளியாகி பம்பர் ஹிட்டான பக்கா இன்டி அம்மாயி என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். இந்தத் தெலுங்குப் படமும்கூட வங்க மொழிப் படமான பாஷர் ரீமேக்தான்.
தமிழில் இத்திரைப்படத்தின் வசனத்தை எழுதும் பொறுப்பு வசனகர்த்தா ஸ்ரீதரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், அவர் எதிர்பார்த்ததைவிட அதிக நாள்கள் எடுத்துக் கொண்டார். இதனால், நடிகை அஞ்சலி தேவி, ‘ரொம்ப யோசிச்சு எழுத வேண்டாம், தெலுங்கு வசனத்தை அப்படியே தமிழில் மொழிபெயர்ப்பு செய்தால் போதும்’ என்று தனது உதவியாளரிடம் சொல்லி அனுப்பினார். இதைக்கேட்ட ஸ்ரீதர் கோபத்தோடு அதுவரை எழுதிய ஸ்கிரிப்டையும், வாங்கிய முன்பணம் ஆயிரத்தையும் திருப்பி அனுப்பினார்.
ஏற்கனவே இரு மொழிகளில் வெற்றி பெற்ற படம் என்பதால் அஞ்சலி தேவி தைரியமாக, வசனம் எழுதும் பொறுப்பை தஞ்சை ராமையாதாஸிடம் ஒப்படைத்தார். குறிப்பிட்ட காலத்தில் படப்பிடிப்பு தொடங்கி முடிந்தது. இப்படம் 1960 பிப்ரவரி 11ஆம் தேதி வெளியானது. இத்திரைப்படம் வெளியாகி இன்றுடன் 64 வருடங்களை நிறைவு செய்து 65-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்