Modern Love Chennai: ‘மாடர்ன் லவ் சென்னை’; ‘ஷோபா’ கதாபாத்திரத்தில் கவனம் ஈர்த்த கெளரி - யார் இவர்?
நடிகை ஸ்ரீ கௌரி பிரியா அமேசான் பிரைம் வீடியோவின் ‘மாடர்ன் லவ் சென்னை’யில் ‘ஷோபா’ கதாபாத்திரத்தில் நடித்திருப்பதன் மூலம் கவனம் ஈர்த்து இருக்கிறார். யார் இவர் என்பதை இங்கு பார்க்கலாம்
கடந்த மே 18 ஆம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் ‘மாடர்ன் லவ் சென்னை’ என்ற சீரிஸ் வெளியிடப்பட்டது. ஆந்தாலஜி பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சீரிஸ் 6 பாகங்களைக் கொண்டது.
இயக்குநர்கள் தியாகராஜன் குமாரராஜா, பாரதிராஜா, பாலாஜி சக்திவேல், ராஜூமுருகன், கிருஷ்ணகுமார் ராமகுமார், அக்ஷய் சுந்தர் ஆகிய இயக்குநர்கள் நியூயார்க் டைம்ஸில் வெளியான ‘மாடர்ன் லவ்’ கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆறு பகுதிகளையும் இயக்கியிருக்கிறார்கள்.
இதில் மூன்று பாகங்களுக்கு இளையராஜா இசையமைத்து இருக்கும் நிலையில் ஜி.வி. பிரகாஷ்குமார், ஷான் ரோல்டன், யுவன்ஷங்கர் ராஜா ஆகியோர் தலா ஒரு பாகத்திற்கு இசையமைத்துள்ளார்கள்.
இதில் இயக்குநர் ராஜு முருகனால் தழுவி, எழுதி, இயக்கப்பட்ட முதல் அத்தியாயம் ‘லால்குண்டா பொம்மைகள்’. காதல், கருக்கலைப்பு ஆகியவற்றை சந்தித்திருக்கும் பெண்ணின் உடல் மற்றும் மனவலிகளை இந்த பாகம் பேசியது.
இப்படி ஒரு கரடுமுரடான அனுபவத்தை சந்திக்கும் அந்தப்பெண் பானிப்பூரி விற்கும் ஒருவனை மீண்டும் காதலிக்கிறாள். அந்தக்காதல் அவளை என்ன செய்தது என்பதே இந்தப்பாகத்தின் கதை.
இதில் மென்மையான இதயம் கொண்ட என்ற ஷோபா என்ற பெண் கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ரீ கௌரி பிரியா நடித்திருந்தார். அதில் இவரது நடிப்பு கவனம் பெற்று இருக்கிறது. இந்த நிலையில் இவர் யார் என்ற குட்டி பயோவை இங்கு பார்க்கலாம்.
இவர் 2018 ஆம் ஆண்டு ‘தி மிஸ் ஹைதராபாத்’ பட்டத்தை வென்றவர். ‘ரைட்டர் பத்மபூஷன்’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் இவர் வெளிப்படுத்தி இருந்த நடிப்பு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பின்னரே இவருக்கான வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. தற்போது இவரை பல தமிழ் திரைப்படங்களில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.
டாபிக்ஸ்