HT Exclusive: “வாய்ப்புக்காக கிளாமர் காட்டுறோமா? அதுக்கு தைரியம் வேணும்..பார்வையை மாத்துங்க” - சாக்ஷி அகர்வால் பேட்டி!
“பார்க்கிறவர்களின் மனநிலை தவறாக இருக்கிறது என்றால் அதை நாம் ஒன்றுமே செய்ய முடியாது. கிளாமராக ஆடைகள் அணிவது ஒன்றும் அவ்வளவு ஈஸியானது கிடையாது” - சாக்ஷி பளார் பேட்டி!
வாழ்வின் சின்ன சின்ன நிகழ்வுகளை கூட கொண்டாட்டமாக மாற்றுபவர் நடிகை சாக்ஷி அகர்வால். சினிமாவில் தனக்கென தனி இடம் பிடிக்க வேண்டும் என்று நெடுநாட்களாக போராடிக்கொண்டிருந்தவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி வெளிச்சம் வீச, ரஜினியுடன் ‘காலா’ அஜித்தின் ‘விசுவாசம்’ என முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்புக்கிடைத்தது.
இவர் அண்மையில் தன்னுடைய பிறந்தநாளை கோவாவில் கொண்டாடினார். அது தொடர்பான புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டார். இது அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது.
அவரை தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது, பொதுவாக நடிகைகள் பட வாய்ப்புகள் குறையும் போதுதான் கவர்ச்சியான போட்டோக்களை தங்களது சோசியல் மீடியாவில் வெளியிடுகிறார்கள் என்ற விமர்சனம் வைக்கப்படுவது குறித்து கேட்டேன்.
அதற்கு அவர் அளித்த பிரத்யேகப்பேட்டி!
“ ஒருவர் கிளாமராக இருந்தால் அவர் நல்ல நடிகை இல்லை என்பது அர்த்தம் இல்லை. அதே போல ஒரு நல்ல நடிகை கிளாமராக போட்டோ போடவில்லை என்றால் அதற்காக அவரும் நல்ல நடிகை இல்லை என்று ஒதுக்கி விட முடியாது.
இந்த மனநிலை நிச்சயம் இங்கு மாற வேண்டும். தற்போது பெண்களுக்கு ஒரு வித சுதந்திரம் கிடைத்திருக்கிறது. அதை அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது.
கிளாமருக்கும் வல்காரிட்டிக்கும் இடையே இங்கு ஒரு மெல்லிய கோடுதான் இருக்கிறது. ஒரு நடிகையாக அதில் நமக்கான சமூகப் பொறுப்புணர்வு இருக்கிறது. நமக்கு பிடித்தது மாதிரியான, நம் தொழிலுக்கு ஏற்றது மாதிரியான உடையை தேர்வு செய்து அணிந்து கொள்கிறோம்.
அது தொடர்பான புகைப்படங்களை நம்முடைய சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொள்கிறோம். பார்க்கிறவர்களின் மனநிலை தவறாக இருக்கிறது என்றால், அதை நாம் ஒன்றுமே செய்ய முடியாது. கிளாமராக ஆடைகள் அணிவது ஒன்றும் அவ்வளவு ஈஸியானது கிடையாது.
அதற்கு ஒரு தைரியம் வேண்டும். அதை அணிவதற்கு அதற்கு ஏற்ற மாதிரியாக நம் உடலை ரெடி செய்வது, ஸ்டைலை கொண்டு வருவது என அதில் பல வேலைகள் இருக்கின்றன. அதனை எல்லோராலும் கைகொள்ள முடியாது.” என்று பேசினார்.
டாபிக்ஸ்