Renuka: ‘டி.ஆர்., அழவெச்சார்.. ராமராஜன் நிராகரிச்சார்’ உடைத்து பேசிய ரேணுகா!
Actress Renuka Interview: மலையாளத்தில் நிறைய வாய்ப்புகள் வந்ததால், அங்கு பயணம் செய்ய ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட 70 மலையாள படங்களில் நடித்தேன். தமிழில் நடிக்கவே இல்லை.
நாடகம், சீரியல், சினிமா என அடிப்படை கலைகளில் இருந்து வந்து, அசத்திக் கொண்டிருக்கும் நடிகை ரேணுகா. சமீபத்தில் இணையதளத்திற்கு அவர் அளித்த சுவாரஸ்ய பேட்டி இதோ:
‘‘நான் திருச்சி ஸ்ரீரங்கம். திடீர்னு அப்பா இறந்து போயிட்டார். குடும்ப சூழ்நிலை காரணமாக நான் நடிக்க வந்தேன். அடுத்தவங்க கூட பேசுவதே பெரிய விசயமாக பார்க்கப்பட்ட குடும்பத்திலிருந்து, நான் எப்படி சினிமாவை பார்த்தேன் என்பது எனக்கே வியப்பா இருந்தது.
நான் முத்தவள் என்பதால், குடும்பத்தை பார்க்க வேண்டிய கட்டாயம். அதன் பின் சென்னை வந்தோம். குடும்பத்தை நடத்தவே ரொம்ப சிரமப்பட்டோம். அதனால் தான் சினிமாவில் ட்ரை பண்ணலாம் என்று முயற்சித்தேன். கோமல் சுவாமிநாதன் தன்னோட ஸ்டேஜ்க்கு புது ஹீரோயின் தேடிட்டு இருந்தார்.
அவரை போய் பார்த்தேன். ‘எனக்கு எதுவுமே தெரியாது சார்’ என்று கூறினேன். ‘அதெல்லாம் ஒன்னும் வேண்டாம், டயலாக்கை மனப்பாடம் செய்து ஒப்பித்தால் போதும்’ என்று அந்த வாய்ப்பு கிடைத்தது. திருச்சியில் தான் என் முதல் நாடகம் அரங்கேறியது.
அதன் பின் ‘பட்டர்ப்ளே’ விளம்பரத்தில் முதன் முதலில் நான் தான் நடித்தேன். டி.ஆர்., சாரோட சம்சார சங்கீதம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிட்டத்தட்ட ஒன்றரை வருசம் வரை அந்த படம் ஓடியது.
அதுக்கு அப்புறம், தமிழ் பெண்களுக்கு தமிழில் வரவேற்பு இல்லாமல் போனது. டி.ராஜேந்தர் சார், டயலாக் வரவில்லை என்றால் கசமுசானு திட்டுவார். நான் தினமும் அழுவேன். திட்டிட்டே இருப்பார், அழுதிட்டே இருப்பேன். ஆனால் அவர் நல்ல குரு.
கோமல் சுவாமிநாதன் சாரின் ட்ராமாவில் நடித்ததற்கும் ஒரு காரணம் இருந்தது. கே.பாலசந்தர் சார் , அவரின் நாடகங்களை விரும்பி பார்ப்பார் என்று தெரியும். அப்படி அவரிடம் வாய்ப்பு கிடைக்காதா என்பதால் தான் அங்கு நடித்தேன்.
தமிழ் சினிமாவில் நிறைய படங்களில் டெஸ்ட் எடுத்து, வாய்ப்பு வராமல் போய்விட்டது. குறிப்பாக ராமராஜன் சாரிடம் 7 படங்களுக்கு மேல் நடிக்கும் வாய்ப்பை இழந்தேன். அதில் நடித்திருந்தால், இன்று பெரிய இடத்தில் இருந்திருப்பேன். எல்லாமே ஓகே ஆகும், கடைசியில் பார்த்தால் வேறு ஒரு அம்மா நடிச்சிட்டு இருப்பாங்க. என்ன காரணம் என்றே எனக்கு தெரியவில்லை.
அதுக்கு அப்புறம் மலையாளத்தில் நிறைய வாய்ப்புகள் வந்ததால், அங்கு பயணம் செய்ய ஆரம்பித்தேன். கிட்டத்தட்ட 70 மலையாள படங்களில் நடித்தேன். தமிழில் நடிக்கவே இல்லை. மலையாளத்தில் தான் எனக்கு வாய்ப்புகளும் ,விருதுகளும் குவிந்தன. மலையாள படங்களில் கேரக்டருக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுப்பாங்க. சர்க்கம் எனக்கு பயங்கர பேர் வாங்கிக் கொடுத்தது. எனக்கு வாழ்க்கை கொடுத்தது மலையாள சினிமா தான். ஆனால், நான் பச்சை தமிழச்சி.
மலையாளத்தில் நடிப்பை பார்த்து தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்தன. ஆனால், என் வாய்ப்புகளை மறுத்த தமிழ் சினிமா மீது எனக்கு பயங்கர வருத்தம் இருந்தது’’
என்று அந்த பேட்டியில் ரேணுகா கூறியுள்ளார்.