Kizhakke Pogum Rail: பாரதிராஜாவின் 'கிழக்கே போகும் ரயில்'..பாஞ்சாலி - பரஞ்சோதியின் கிராமத்து காதலுக்கு வயது 46..!
45 Years of Kizhakke Pogum Rail: பிற்படுத்தப்பட்ட நாவிதர் ஒருவரின் மகனான ஒரு ஏழைக் கிராமக் கவிஞன் மற்றும் அந்தக் கிராமத்திலேயே அடைக்கலம் புகும் கள்ளமற்ற பெண் ஒருத்தி ஆகிய இருவருக்கும் இடையிலான காதலை சுவைபடவும் இயற்கையாகவும் கிராமத்து பின்னணியில் சித்தரித்தது 'கிழக்கே போகும் ரயில்'.
45 Years of Kizhakke Pogum Rail: தமிழ் சினிமா இன்றைக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தால் பல்வேறு வளர்ச்சி அடைந்திருந்தாலும், பழைய திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் மவுசு இன்னும் குறையவில்லை என்றே சொல்லலாம். அந்த வகையில் கோலிவுட் சினிமாவை வேறு தளத்துக்கு கொண்டு சென்ற பெருமை, இயக்குனர் பாரதிராஜாவையே சாரும். ஆம், தமிழ் சினிமாவின் வரலாற்றை திருப்பிப் பார்த்தால், அதுவரை ஸ்டூடியோவுக்குள் மட்டுமே திரைப்படங்கள் படமாக்கப்பட்டன.
ராதிகா அறிமுகம்
இயக்குனர் பாரதிராஜா '16 வயதினிலே' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா வரலாற்றிலேயே முதன்முதலாக படப்பிடிப்பினை வெளிப்புறப் படப்பிடிப்புத் தளத்திற்கு கொண்டு சென்று புரட்சியை ஏற்படுத்தினார். இந்த திரைப்படம் வெளியான அடுத்த ஆண்டே வந்ததுதான் 'கிழக்கே போகும் ரயில்'. அம்மன் கிரியேஷன்ஸ் எஸ்.ஏ.ராஜ்கண்ணு தயாரிப்பில் உருவான இப்படத்தில் பாஞ்சாலியாக அறிமுகமானார் ராதிகா. அவருக்கு ஜோடியாக பரஞ்சோதியாக சுதாகரும் அறிமுகமானார். இருவரும் வெள்ளந்தியான காதல் ஜோடிகள். இவர்களின் காதலை எப்படி 'கிழக்கே போகும் ரயில்' ஒன்று சேர்த்தது தான் கதையின் கரு.
இளையராஜாவின் இசை
ஆர்.செல்வராஜ் கதை வசனம் எழுதியிருந்த இந்தப் படத்தில் கவுண்டமணி, விஜயன், காந்திமதி, ஜனகராஜ் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். இந்தப் படத்தின் பிண்ணனி இசையையும் பாடல்களையும் இளையராஜா அற்புதமாக இயற்றியிருந்தார். இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே மிகப்பெரிய ஹிட்டடித்தன. குறிப்பாக, கருநாடக இசை அடிப்படையில் அமைந்த 'மாஞ்சோலைக் கிளிதானோ' என்னும் பாடல் பின்னணிப் பாடகர் ஜெயசந்திரனுக்குப் பெரும் புகழை பெற்றுத் தந்தது. இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற 'பூவரசம்பூ பூத்தாச்சு.. பொண்ணுக்கு செய்தி வந்தாச்சு' என்ற பாடல் அந்த காலத்தில் எவர் கிரீன் பாடலாக இருந்தது. 'கோவில் மணி ஓசை', 'மலர்களே' போன்ற பாடல்கள் இப்போதும் பலருடைய மனம் கவர்ந்த பாடல்களாக ஒலித்துக்கொண்டே தான் இருக்கிறது.
ஜாதிய வன்மத்தை சித்தரித்த திரைப்படம்
கிராமத்தில் இருக்கிற ஜாதி வன்மத்தையும் ஆதிக்க சாதியின் மனோபாவங்களையும் அச்சு அசலாக வெளிக்கொண்டு வந்திருப்பார் இயக்குனர் பாரதிராஜா. முதல் திரைப்படத்திலேயே ராதிகாவின் திறமையை இந்த உலகத்திற்கே பாரதிராஜா காட்டியிருந்தார். பிற்படுத்தப்பட்ட நாவிதர் ஒருவரின் மகனான ஒரு ஏழைக் கிராமக் கவிஞன் மற்றும் அந்தக் கிராமத்திலேயே அடைக்கலம் புகும் கள்ளமற்ற பெண் ஒருத்தி ஆகிய இருவருக்கும் இடையிலான காதலை சுவைபடவும் இயற்கையாகவும் கிராமத்து பின்னணியில் சித்தரித்தது.
46 ஆம் ஆண்டில் 'கிழக்கே போகும் ரயில்'
1978 ஆம் ஆண்டு இதே ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான 'கிழக்கே போகும் ரயில்' திரைப்படம் பல தியேட்டர்களில் 100 நாட்களை கடந்து ஓடியது. மிகப்பெரிய வசூலை வாரி சுருட்டியது இந்தப் படம். மதுரை உள்ளிட்ட பல ஊர்களில், ஒருவருடத்தைக் கடந்தும் ஓடி சாதனை படத்தது. வெள்ளந்தியான ராதிகா, சுதாகர் காதல் ஜோடி பெரிதும் பேசப்பட்டது. இப்படம் வெளியாகி இன்றோடு 46 ஆண்டுகள் நிறைவடைகிறது. படம் வெளியாகி பல ஆண்டுகளை கடந்தாலும் இன்னும் கிழக்கே போகும் ரயிலை தமிழ் ரசிகர்களால் எப்படி மறக்க முடியும்?..!
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்