Kutty Padmini: ‘முதல் கணவரை அழைத்து வந்தது இரண்டாவது கணவருக்கு பிடிக்கவில்லை’ குட்டிபத்மினி ஓப்பன் டாக்!
Actress Kutty Padmini: ‘இரண்டாவது கணவரை பிரிந்த பின், முதல் கணவருக்கு உதவியதில் சில காரணம் இருக்கிறது’
குழந்தை நட்சத்திரத்தில் தொடங்கி இன்று வரை சினிமா, டிவி என இரண்டிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருபவர் நடிகை குட்டி பத்மினி. யூடியூன் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த சுவாரஸ்யமான பேட்டி இதோ:
‘‘3 மாத குழந்தையாக இருக்கும் போதே நடிக்க வந்த நடிகை நான். குழந்தையும் தெய்வமும் பண்ணும் போது நான் கிட்டத்தட்ட 8 வயதில் தான் சிறுமியாக வந்தேன். அப்போதெல்லாம் கேரவேன் கிடையாது. மர நிழலில் தான் எல்லாரும் இருப்பார்கள். எம்.ஜி.ஆர்., சிவாஜி என எல்லா சீனியர்களும் மரத்தடியில் இருப்பார்கள். ஷூட்டிங் என்றாலே ஜாலியாக இருக்கும்.
சினிமாவில் நிறைய துரோகங்களை சந்தித்திருக்கிறேன். நான் சன்டிவியில் நிறைய புராஜெக்ட் பண்ணிட்டு இருந்தேன். சினிமாக்காரங்களுக்கு வெளியில் கடன் தரமாட்டாங்க. எல்லாமே மார்வாடி கடனில் தான் பண்ணிட்டு இருந்தேன். இதற்கிடையில் என் கணவர், ‘நான் குட்டி பத்மினி கணவர்னு தெரியக்கூடாது, என்னோட மனைவி தான் குட்டி பத்மினினு தெரியனும்’ என அவர் வேற பிரச்னை.
இத்தனைக்கும் அவர் காதல் கணவர் வேறு. நானும் பல விசயங்களில் அவர் சொன்னதற்காக பலவற்றை விட்டுக் கொடுத்தேன். இதனால் சின்ன இடைவெளிவிட்டேன். அதன் பின் என்னை நம்பி நிறைய பேர் இருந்தார்கள். அவர்களுக்காகவும் சுயமா சம்பாதிக்கும் வாய்ப்பை விடக்கூடாது என்பதற்காகவும் மீண்டும் சேனல் புராஜக்ட் செய்தேன்.
ஒரு பெரிய ஆர்டிஸ்ட்டின் தங்கையும் என் மகளும் தோழிகள். என் மகள் பரிந்துரையில் அந்த பெண்ணை அதில் நடிகையாக்கினேன். அதில் இன்னொரு கதாபாத்திரத்தில் ஊர்வசி நடிக்க வேண்டும். அந்த சமயத்தில் ஊர்வசியால் நடிக்க முடியாமல் போனது. அதனால் அந்த கதாபாத்திரத்தில் நான் நடிக்க நேர்ந்தது.
இதில் என்ன நடந்ததோ தெரியவில்லை, அந்த நடிகை, ‘நான் இருந்தால் நடிக்கமாட்டேன்’ என்று கூறிவிட்டார். புராஜக்டே என்னுடையது. ஆனால், அந்த சீரியலின் முகமாக அந்த நடிகை இருந்ததால் டிவி நிர்வாகம் என்னை நீக்கியது. ஆனாலும் அதன் பிறகும் எனக்கு நிறைய பிரச்னைகளை கொடுத்தார்கள். ‘போன ஜென்மத்தில் இந்த கேரக்டருக்கு ஏதோ ஒரு பாவம் பண்ணிருக்கேன், அதை இப்போ தீர்த்துக்குது’ என்று நினைத்து ஒதுங்கிவிட்டேன்.
இரண்டாவது கணவரை பிரிந்த பின், முதல் கணவருக்கு உதவியதில் சில காரணம் இருக்கிறது. 21 வயதில் ஓரு டிவி சீரியலில் நடித்தேன். அப்போது தான் முதன்முதலாக ஒரு முதியோர் இல்லத்தை பார்த்தேன். அதை பார்த்த பிறகு தான், சினிமா துறையில் இருப்பவர்களுக்காக ஒரு முதியோர் இல்லம் அமைக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். யாருக்கோ உதவும் எண்ணம் இருந்த எனக்கு, என்னுடைய முதல் கணவர் நோய் பாதிப்பில் இருக்கும் போது, அவரை எப்படி கவனிக்காமல் இருக்க முடியும்?
என்ன தான் இருந்தாலும் அவர் என் முதல் கணவர். அவரோடு வாழ்ந்திருக்கிறேன். என் குழந்தைக்கு அவர் அப்பா. பிரிவு ஒருவரால் வருவதில்லை, இருவரால் வருவது என்கிற பக்குவம் எனக்கு வந்தது. என் மகள் அமெரிக்காவில் இருந்து போன் செய்தாள். ‘அப்பாவிற்கு அடிபட்டு இருக்கார் ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும்’ என்று கூறினாள்.
உடனே போய் பார்த்து, மருத்துவமனையில் அவரை சேர்த்தேன். அவர் கொஞ்சம் குடிக்கு அடிமையாக இருந்தார். அதனால் எங்க அலுவலகத்தில் கீழே ஒரு அறை இருந்தது. அங்கு தங்க வைத்தேன். என்னால் அவருக்கு என் படுக்கையை பகிர முடியாது. அந்த பிரிவு பிரிவு தான். மனசு மாறிப் போச்சு. அந்த நேரத்தில் தான் என்னுடைய இரண்டாவது கணவரை வேறு பிரிந்திருந்தேன்.
‘ஊர் என்ன சொல்லும், இப்போ தான் பிரபுவை வேற பிரிஞ்சிருக்கீங்க… கொஞ்ச யோசிங்க’ என, என் ஊழியர்கள் எல்லாரும் என்னிடம் கூறினார்கள். ‘என்னை விட்டுட்டு போனவர்… என்னை தப்பா நினைத்தால் என்ன? நினைக்காவிட்டால் என்ன?’ என்று அதை நான் பொருட்படுத்தவில்லை.
என் முதல் கணவருக்கு ஒரு ரூம் கொடுத்தேன், செலவுக்கு வேண்டுமே என்பதற்காக மாதம் ரூ.30 ஆயிரம் சம்பளம் கொடுத்தேன். அட்மின் வேலை பார்க்கச் சொன்னேன். தினமும் வருவார், தனி கேபின் கொடுத்திருக்கேன் அவருக்கு. ஒரு நாய் குட்டிக்கு ரூ.10 ஆயிரம் மாசம் செலவு பண்றோம். ஒரு மனுசனுக்கு செலவு பண்ணக் கூடாதா?
என்னுடைய இரண்டாவது கணவர் ஒரு நாள் போன் செய்தார். ‘உன் முதல் கணவர் வந்துட்டார் போல, சந்தோசமா’ என்று கேட்டார். ‘ஆமாம், உங்களுக்கு அதில் என்ன வயிற்று எரிச்சல்?’ என்று பதிலடி தந்தேன். உடனே அருகில் இருந்த என் மகள், ‘எப்படி என் அம்மாவிடம் இப்படி கேட்கலாம்’ என, அவருடன் சண்டை போட்டாள்,’’
என்று அந்த பேட்டியில் குட்டி பத்மினி கூறியுள்ளார்.
டாபிக்ஸ்