Kousalya Senthamarai: அரக்கத்தோற்றம்..ஆனாலும் காதல்.. - செந்தாமரை மனைவி பேட்டி!
செந்தாரமைக்கும் தனக்கும் கல்யாணம் எப்படி ஆனது என்பது குறித்து அவரது மனைவியும் நடிகையுமான கெளசல்யா பகிர்ந்து இருக்கிறார்
எம்.ஜி.ஆர் சிவாஜியுடன் மேடை நாடகங்கள், படங்கள் என பரபரப்பாக இருந்தவர் நடிகை கெளசல்யா. இவர் பிரபல வில்லன் நடிகர் செந்தாமரையின் மனைவி. அண்மையில் இவர் கொடுத்த பேட்டி ஒன்றில் தனக்கும் செந்தாமரைக்கும் எப்படி கல்யாணம் ஆனது என்பது குறித்து மனம் திறந்து பேசியிருக்கிறார்.
அவர் பேசியதாவது, “ ஆர் ஆர் லலிதா என்ற பைனான்சியர் ஒருவர் இருந்தார். அப்போது எங்கள் வீட்டில் நான்கு கார்கள் இருந்தன; நான் அப்போதே கார் ஓட்டுவேன். ஆகையால் லலிதா அக்கா காரில் என்னை அவ்வப்போது நடிகர் சங்கத்தில் கொண்டு விட்டு விடு என்பார்.
நானும் செல்கிற வழிதானே என்று கொண்டு விட்டு விடுவேன். தெய்வ மகன் படத்தில் நான் நடிக்கச் சென்றிருந்தேன். செந்தாமரைக்கு அதில் வில்லன் ரோல். எனக்கு புத்தகம் படிக்கக்கூடிய பழக்கம் அதிகம். செந்தாமரைக்கும் புத்தகம் படிக்கக்கூடிய பழக்கம் உண்டு. அப்படி நான் படப்பிடிப்பில் நாவல் ஒன்றை படித்துக் கொண்டிருந்தேன். அதை பார்த்த செந்தாமரை கொஞ்சம் கொடுங்கள் நான் படித்துவிட்டு தருகிறேன் என்று சொல்லி வாங்கி சென்று விட்டார்.
அந்த புத்தகத்தைப் படித்துவிட்டு அவர் என்னுடைய வீட்டில் கொண்டு வந்து அந்த கொடுத்திருக்கிறார். ஆனால் எங்கள் வீட்டில் உள்ளவர்கள் அவரை..நீ யார் என்று கேட்டு துரத்தி இருக்கிறார்கள். இந்த நிலையில்தான் நானும், லலிதா அக்காவும் நாடகம் ஒன்றிற்கு சென்றிருந்தோம்.
அங்கு செந்தாமரைக்கு தாத்தா ரோல் கொடுத்திருந்தார்கள். அதனால் எனக்கு அவரை அடையாளம் தெரியவில்லை. அவர் என்னை கூப்பிட்டு புத்தகம் கொடுக்க வந்தால், இப்படித்தான் அவமானப்படுத்துவீர்களா என்று கேட்டார். லலிதா அக்காத்தான் எல்லாவற்றையும் சமாளித்தார்.
எங்கள் திருமணத்திற்கு காரணமானவரும் அவர்தான்.அவர் என்னிடம் செந்தாமரை மிகவும் நல்லவர் என்று கூறி அவரை தயவு செய்து கல்யாணம் செய்து கொள் என்றும் சொன்னார். நான் அப்போது, அவர் ரவுடி போல, போலீஸ் அதிகாரி போல இருக்கிறார் எனக்கு அவர் வேண்டாம் என்று சொன்னேன். ஆனால் லலிதா அக்கா என்னையும் சமாதானப்படுத்தி, செந்தாமரையிடமும் இந்த விஷயத்தை சொல்லி சம்மதம் வாங்கினார்.
இதை வீட்டில் சொன்னவுடன் வீட்டில் ஒரே ரகளை. கடுமையான போராட்டங்களுக்கு பின்னர் திருவேற்காடு மாரியம்மன் கோயிலில் வைத்து திருமணம் செய்து கொண்டோம்.” என்றார்.
டாபிக்ஸ்