Andrea: ‘ என் டி-சர்டில் கை விட்டு…’ -பாலியல் சீண்டல் குறித்து ஆண்ட்ரியா ஓப்பன்!
Andrea jeremiah Interview: பிரபல நடிகையான ஆண்ட்ரியா தனக்கு பேருந்தில் நடந்த பாலியல் சீண்டல்கள் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்களை பாடி பிரபலமானவர் நடிகை ஆண்ட்ரியா ஜெரெமையா. இவர் ‘கண்ட நாள் முதல்’ படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ ‘ஆயிரத்தில் ஒருவன்’ ‘மங்காத்தா’ ‘பூஜை’ ‘அரண்மனை’ ’ துப்பறிவாளன்’ ‘மாஸ்டர்’ ‘அனல் மேல் பனித்துளி’ உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
மற்ற கதாநாயகிகள் போல் இல்லாமல், தனக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க கூடிய இவர் தனக்கு தோன்றும் கருத்துக்களை பொதுவெளியில் மிகவும் வெளிப்படையாக பேசுவார்; அண்மையில் இவர் நடிப்பில் வெளியான அனல் மேல் பனித்துளி படத்தில் தன்னை கற்பழித்த காவல் அதிகாரிகளுக்கு தண்டனை வாங்கி கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு அனைவரது மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் அவர் தற்போது தனக்கு பேருந்தில் நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி மனம் திறந்துள்ளார்.
நடிகை ஆண்ட்ரியா இது குறித்து பேசும் போது, “ நான் வாழ்கையில் 2 முறைதான் பஸ்ல போயிருக்கேன்; ஒரு முறை நான் பஸ்ல போய்க்கிட்டு இருந்தேன். என்னுடைய அருகில் எனது அப்பா உட்கார்ந்திருந்தார். நான் ஜீன்ஸூம் டிசர்ட்டும் போட்டு இருந்தேன். எனக்கு அப்போது ஒரு 11 வயது இருக்கும்.
அப்போது என்னுடைய பின்னால் யாரோ கை விடுவது போல தெரிந்தது. முதலில் நான் அதனை கண்டுகொள்ள வில்லை. சரி அப்பா கையாகத்தான் இருக்கும் என்று விட்டு விட்டேன். கொஞ்ச நேரத்தில் அந்த கை டி சர்ட்டுக்குள் சென்றது. உடனே நான் என்னுடைய அப்பா கைகளை பார்த்தேன். அவருடைய இரண்டு கைகளும் முன்னே இருந்தது. உடனே சுதாரித்துக்கொண்ட நான் கொஞ்சம் முன்னால் வந்து உட்கார்ந்தேன். இதைப்பற்றி அப்பா, அம்மாவிடம் நான் எதுவும் சொல்ல வில்லை; அது அப்படியே கடந்து சென்று விட்டது.
அதைப்பற்றி என்னுடைய பெற்றோரிடம் நான் ஏன் சொல்ல வில்லை என்று எனக்கு இப்போது வரை தெரியவில்லை. நமது சமூகம் பெண்களை அப்படித்தான் வைத்து இருந்தது; இன்னொரு முறை நான் பேருந்தில் சென்ற போதும் ஒரு சம்பவம்; பள்ளியில் நிகழ்ச்சி ஒன்றிற்காக எங்களை பேருந்தில் கூட்டிச் சென்றார்கள்; அப்போது ஒரு பையன் ஐ லவ் யூ, ஐ லவ் யூ என்று கத்த ஆரம்பித்து விட்டான். ஆசியரே பயந்து விட்டார். அந்த இரண்டு சம்பவங்களுக்கு பிறகு பேருந்தில் சென்றதில்லை” என்று அவர் பேசினார்.
டாபிக்ஸ்