Actress Ambika: ‘எங்களுக்குள் போட்டியா? பொறாமையே இருந்தது’ அம்பிகா ஓப்பன்!
Actress Ambika Interview: ‘தங்கை ராதா நடித்த படங்களைப் பார்த்து நான் பொறாமைப்பட்டேன்; என் படங்களைப் பார்த்து அவர் பொறாமைப்பட்டார்’ -அம்பிகா ஓப்பன் பேட்டி!
தமிழ் சினிமாவில் கனவுக்கன்னி என்கிற கதவை திறந்து வைத்தவர் அம்பிகா. இவர் நடிக்காத ஹீரோ இல்லை, மொழிகள் இல்லை, படங்கள் இல்லை. அந்த அளவிற்கு 80களில் கொடி கட்டி பறந்த நடிகை. அன்றைக்கு இவருக்கும் இவரது தங்கை ராதாவுக்கும் தான் போட்டி. எப்படி இருந்தது அப்போதைய களம்? பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு முன்பு ராதா அளித்த பேட்டி இதோ:
‘‘44 ஆண்டுகளாக நான் சினிமாவில் இருந்தாலும், இடையில் திருமணம், குழந்தைகள் என வரும் போது சின்ன இடைவெளி இருந்தது. சினிமாவில் உள்ளே வருவது ரொம்ப கஷ்டம். அதற்கு அதிஷ்டம் வேண்டும். அதோடு திறமையும் ஒரே மாதிரி இருக்கவேண்டும். கடினமான உழைப்பு கட்டாயம் வேண்டும்.
மனதிற்குள் ஆசையில்லை என்றால் எந்த துறையிலும் நாம் வர முடியாது. சினிமாவில் உள்ள எந்த துறைக்குள் வந்தாலும் ரொம்ப சிரமப்பட வேண்டியிருக்கும். சிரமத்திற்குப் பிறகு தான், நிலையான இடத்தை பிடிக்க முடியும்.
தூங்காமல் இருந்திருக்கேன், பட்டினியாக இருந்திருக்கேன், இவையெல்லாம் இல்லாமல் மயங்கி விழுந்திருக்கேன். இந்த கஷ்டத்தை கடந்து தான் 40 ஆண்டுகளை கடக்க முடிந்தது, 200 படங்களுக்கு மேல் செய்ய முடிந்தது.
சினிமாவுக்கு போக முடிவு செய்த போது, அம்மாவும், அப்பாவும் ஊக்கம் தான் கொடுத்தார்கள். முதல் படத்தில் ரொம்ப சின்ன ரோல் தான். கூட்டத்தில் ஒருவராக நின்றேன். அதற்கு 100 ரூபாய் கொடுத்தார்கள். அந்த காட்சியை அப்போது பார்க்கும் போது, அவ்வளவு பெருமையாக இருந்தது.
என் அப்பா, அம்மா குடும்பத்தில் யாருமே கலைக்குடும்பம் கிடையாது. அம்மா பாடுவாங்க. அதனால் அவருக்கு ஆர்வம் இருந்தது. அம்மா, அப்பா இருவருக்கும் அரசியல் மீது ஆர்வம். நானும் ராதாவும் தான் கலையில் அடியெடுத்து வைத்தோம். எங்கள் தம்பி அர்ஜூன் பின்னர் நடிக்க வந்தார். புதுநெல்லு புது நாத்து படத்தில் நடித்தார். கடைசி தம்பி சுரேஷ், பர்தேசி என்கிற தெலுங்கு படத்தில் அறிமுகமானான். என் சகோதரி மல்லிகா மட்டும் நடிக்க வரவில்லை. ஆனால், டிவி சீரியல் எல்லாம் தயாரித்தார்.
80ஸ் கதாநாயகிகளில் எனக்கும் தங்கைக்கும் போட்டி இருந்ததாக என்று கேட்டால், எனக்கு பொறாமையே இருந்திருக்கிறது. என் தங்கையின் படங்களை கண்டு நான் பொறாமை பட்டுள்ளேன். முதல்மரியாதை படத்தில் ராதாவின் ரோல் பார்த்து , நான் பண்ண முடியலையே என பொறாமை பட்டேன். அதே மாதிரி காதல் ஓவியம் படத்தை பார்த்தும் பொறாமை பட்டிருக்கிறேன். அது இரண்டுமே எனக்குப் பிடித்த படங்கள்.
அதே மாதிரி , அந்த 7 நாட்கள் படம் பார்த்துவிட்டு, ‘அய்யோ…இந்த படம் நான் பண்ணவில்லையே’ என ராதா வருத்தப்பட்டார். சின்னவயதில் இருந்தே நான் கதை எழுதுவேன். பாடல்கள், கவிதை எல்லாம் எழுதுவேன். பள்ளி அளவில் எந்த போட்டியாக இருந்தாலும் நான் அதில் இருப்பேன். விளையாட்டில் ராதா தான் கெத்து. எனக்கும் விளையாட்டுக்கும் சம்மந்தம் இல்லை.
எல்லோருடைய முகத்திலும் மைனஸ் , ப்ளஸ் இருக்கும். என் முகத்திற்கு எது நன்றாக இருக்கிறது என்று நான் அடிக்கடி வீட்டில் சீவி பார்ப்பேன். அப்படி தான், என் ஹேர் ஸ்டைலை நான் உருவாக்கினேன். என் ஹேர் ஸ்டைல், என் முகத்தில் இருந்த குறைகளை நீக்கியது.
ஒரே நேரத்தில் பல மொழி படங்களில் நடிப்பேன். அப்போ அனைத்தையும் ஒரே சமயத்தில் சமாளிப்பேன். அதற்கு காரணம், சினிமா மீது இருந்த காதல்,’’
என்று அந்த பேட்டியில் அம்பிகா கூறியிருந்தார்.
டாபிக்ஸ்