விஷாலால் தள்ளிப்போன லத்தி ரிலீஸ் தேதி
நடிகர் விஷால் நடித்து வரும் லத்தி படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.
வீரமே வாகை சூடும் படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடித்து வரும் திரைப்படம், லத்தி. ராணா மற்றும் நந்தா படத்தை தயாரிக்கின்றனர். அறிமுக இயக்குநர் விசோத் இயக்கும் இப்படத்தில் விஷால் போலீஸ் அலுவலராக நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் உருவாகும் இதில் நாயகியாக சுனைனா நடிக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள பல்லாவரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அங்கு கிளைமாக்ஸ் காட்சியின் சண்டை காட்சி படமாக்கப்பட்டு வந்தது.
சண்டை கலைஞர்கள் விஷாலை சுற்றிக் கொண்டு அடித்த போது எதிர்பாராத விதமாக அவரின் கை, காலில் காயம் ஏற்பட்டது. இதில் விஷால் துடிதுடித்து கீழே விழுந்தார். உடனே அவருக்கு முதலுதவி கொடுக்கப்பட்டு, படப்பிடிப்பு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
இதன் விளைவாகப் படம் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாகவிருந்த நிலையில் ரிலீஸ் தேதி தள்ளிப் போயுள்ளது. அதன் படி லத்தி படம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது.
கடந்த ஜனவரி மாதம் ஹைதராபாத்தில் நடைபெற்ற ஷூட்டிங் போது, விஷாலின் கையில் காயம் ஏற்பட்டது. அப்போது அவர் கேரளாவுக்கு சென்று சிகிச்சை பெற்று திரும்பினார்.
மேலும் லத்தி படம் வெளியாகும் அதே நாளில் தான் சிம்பு நடித்து இருக்கும் வெந்து தணிந்தது காடு படமும் ரிலீஸாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டாபிக்ஸ்