Uzhavan Foundation Awards 2024: கார்த்தி உழவன் பவுண்டேஷனின் உழவன் விருதுகள் 2024 விழா - ஆளுமைகளுக்கு கெளரவம்
நடிகர் கார்த்தியின் உழவன் ஃபவுண்டேஷனின் உழவர் விருதுகள் 2024 விழாவில், விவசாய துறையில் சாதனை படைத்த 5 ஆளுமைகளுக்கு கெளரவம் அளிக்கப்பட்டது.
விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கெளரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுன்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2024’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகரும் ஓவியருமான சிவகுமார், நடிகை ரோகிணி, நடிகர் மற்றும் இயக்குநர் தம்பி ராமையா, நடிகர் பசுபத, நடிகை கீர்த்தி பாண்டியன் கலந்துக் கொண்டார்கள்.
இவர்களோடு மருத்துவர் கு.சிவராமன், பேராசிரியர் சுல்தான் அஹ்மது இஸ்மாயில், வேளாண் செயற்பாட்டாளர் பாமயன் மற்றும் OFM அனந்து ஆகியோரும் கலந்துக் கொண்டார்கள். இந்த நிகழ்வில் வேளாண் துறைசார் வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்டனர்.
இந்த விழாவில், உழவர்களின் விளை பொருட்களுக்கு நல்ல விலை பெற்று தரும் மதுரை, திருமங்கலம் ஒழுங்கு முறை விற்பனை கூட கண்காணிப்பாளர் வெங்கடேஷுக்கு உழவர்கள் மேம்பாட்டில் சிறந்த பங்களிப்புக்கான விருது வழங்கப்பட்டது.
விவசாயிகளை பற்றியும் அவர்கள் விளை பொருள்கள் பற்றியும், முக்கியமாக பெண் விவசாயிகள் பற்றியும் தொடர்ச்சியாக எழுதி வரும் அபர்ணா கார்த்திகேயனுக்கு சிறந்த வேளாண் ஊடகவியலாளருக்கான விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
நிலமற்ற பெண்கள் ஒன்றிணைந்து தரிசு நிலத்தை ஒரு கூட்டு பண்ணையாக மாற்றிய, பள்ளூர் நிலமற்ற விவசாய பெண்கள் சங்கத்துக்கு சிறந்த உழவர் கூட்டமைப்புக்கான விருதும், பழங்குடி மக்களுக்காக அறவழியில் போராடி தனி குடியிருப்பும், அவர்களின் வேளாண் பொருள்களுக்கு நல்ல விலையும் கிடைக்க தொடர்ந்து பங்காற்றி வரும் பழங்குடி சமூகப் பெண் ராஜலட்சுமிக்கு வனம் சார்ந்த மக்களின் வேளான் மேம்பாட்டில் சிறந்த பங்களிப்புக்கான விருதும் வழங்கப்பட்டது.
பல்வேறு நீர் நிலைகளை சீரமைக்க பெரும் பங்காற்றிய சித்ரவேல் என்பவருக்கு நீர் நிலைகள் மீட்டெடுத்தலுக்கான ஆகச் சிறந்த பங்களிப்புக்கான விருது வழங்கி கெளரவிக்கப்பட்து.
கடந்த ஆண்டுகளை போல் இந்த ஆண்டும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதோடு ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது.
இந்த விழாவில் நடிகரும் உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி பேசியதாவது, “ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் பொங்கல் வைத்து இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி சொல்கிறார்கள். அந்த நாளைத்தான் நாம் பொங்கல் திருநாளாக கொண்டாடுகிறோம். ஆனால், நாம் தினம் உண்ணும் உணவை வழங்கும் விவசாயிகளுக்கு நன்றி கூற மறந்துவிடுகிறோம். அவர்களுக்கு என்றென்றுமே நன்றி கூற வேண்டும். பொங்கல் அன்று மட்டுமே விவசாயிகளை நினைக்கக் கூடாது.
சினிமா, விளையாட்டு உள்ளிட்ட அனைத்திலுமே வெற்றி பெறும் போது விழா வைத்துக் கொண்டாடுகிறோம். எவ்வளவு பெரிய இயற்கை பேரிடர் நிலையிலும் நமக்கான உணவை உற்பத்தி செய்து தரும் விவசாயிகளை கொண்டாட வேண்டும் என்று தான் உழவர் விருதுகள் விழாவினைத் தொடங்கினோம்.
இது ஐந்தாவது ஆண்டு விழா. பல்வேறு வேளாண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கெளரவித்திருப்பது பெருமையாக இருக்கிறது. இந்த விருதின் மூலம் அவர்களுடைய வாழ்வில் ஒரு சிறு வெளிச்சத்தை ஏற்படுத்தி விடமுடியும் என்று நம்புகிறோம்.
வரும் காலங்களிலும் இதுப்போல விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் உறுதுணையாக இருக்கும் நல் உள்ளங்களை அடையாளப்படுத்தி கெளரவப்படுத்துவதோடு, விவசாயத்துக்கான பங்களிப்பையும் உழவன் ஃபவுண்டேஷன் தொடர்ந்து செய்யும்"
இவ்வாறு அவர் கூறினார்
வேளாண் பிரச்சினைகள், வேளாண் தொழில்நுட்பங்கள், சிறுதானியங்கள், காலநிலை மாற்றங்கள், பூச்சிக்கொல்லி பயன்பாடுகள் என விவசாயத்தை பற்றியும் அதைச் சார்ந்த உணவு, தொழில்நுட்பங்கள் என ஒரு முழுமையான புரிதல் ஏற்படுத்தும் நிகழ்ச்சியாக இவ்விருதுகள் வழங்கும் விழா அமைந்தது.
இந்த சிறப்பம்சங்கள் இன்னும் பல கோடி பேரை சென்று சேரும் பொருட்டு, உழவன் ஃபவுன்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2024’ விழா, ஜனவரி 15, தமிழர் திருநாளான பொங்கல் தினத்தன்று, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் மதியம் 2.30 மணி முதல் 5.30 மணி வரை சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகவுள்ளது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்