HBD Sudeep : நான் ஈ மூலம் வில்லனாக நடித்து அசத்திய சுதீப் பிறந்த நாள் இன்று!
நான் ஈ படத்தில் வில்லனாக நடித்து தமிழ் மக்களின் மனதில் இடம் பிடித்த நடிகர் சுதீப் பிறந்த நாள் இன்று.
கன்னடத் திரைப்பட நடிகர் சுதீப். இவர் கர்நாடகாவின் ஷிமோகா மாவட்டத்தில் உள்ள ஷிமோகாவில் சஞ்சீவ் மஞ்சப்பா மற்றும் சரோஜா ஆகியோருக்கு 2 செப்டம்பர் 1971 இல் பிறந்தார் . குடும்பம் சிக்மகளூர் மாவட்டம் நரசிம்மராஜபுரத்தில் இருந்து ஷிமோகாவிற்கு குடிபெயர்ந்தது. பெங்களூரில் உள்ள தயானந்த சாகர் பொறியியல் கல்லூரியில் தொழில்துறை மற்றும் உற்பத்திப் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்.
இவர் பின்னணிப் பாடகராகவும், கதை எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும், தொகுப்பாளராகவும் இருந்தவர். கர்நாடக அரசின் திரை விருதை பெற்றுள்ளார். சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
கன்னட திரையுலகில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தும் நடிகர்களுள் ஒருவர். குறிப்பாக 2012ஆம் ஆண்டு வெளியான ‘ஈகா’ (நான் ஈ) படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானார். இவருக்கு பான் இந்தியா அளவில் மவுசு உள்ளது.
கன்னட சினிமாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவர். 2013 ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் முதல் 100 பிரபலங்களின் ஃபோர்ப்ஸ் பட்டியலில் பட்டியலிடப்பட்ட முதல் கன்னட நடிகர்களில் ஒருவர். அவர் நான்கு பிலிம்பேர் விருதுகள் தென் மற்றும் ஒரு கர்நாடக மாநில விருது உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
கன்னடத் திரைப்படங்களான ஸ்பர்ஷா (2000), ஹுச்சா (2001), நந்தி (2002), கிச்சா (2003), சுவாதி முத்து (2003), மை ஆட்டோகிராப் (2006), எண் 73, சாந்தி நிவாசா (2000 ) ஆகிய கன்னடத் திரைப்படங்களில் இவரின் நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. அவர் தனது ஹச்சா , நந்தி மற்றும் சுவாதி முத்து ஆகிய படங்களுக்காக தொடர்ந்து மூன்று வருடங்கள் கன்னடத்தில் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை வென்றார்.
2013 முதல், அவர் பிக் பாஸ் கன்னட தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோவை தொகுத்து வழங்கி வருகிறார் . 2001 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், ஹுச்சா. இப்படத்தின் மூலம் தான் கிச்சா சுதீபா என்ற புனைப்பெயரைப் பெற்றார். அந்த அளவுக்கு ஹிட் கொடுத்தது.
சுதீப் தமிழில் நான் ஈ, புலி, முடிஞ்சா இவனப்புடி உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் இதற்கு முன் நடித்த ‘விக்ராந்த் ரோணா’ தமிழிலும் வெளியானது.
நடிகர் கிச்சா சுதீப்பின் 46 வது படத்தை தனது வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். விஜய் கார்த்திகேயா இயக்கும் இந்த இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் படத்தின் படப்பிடிப்பு, இப்போது மாமல்லபுரத்தில் நடந்து வருகிறது. இதற்காக இதுவரை இந்திய சினிமாவில் அமைக்கப்படாத வகையில் பிரம்மாண்ட போலீஸ் ஸ்டேஷன் செட் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் பற்றி நடிகர் சுதீப் கூறும்போது, “கிட்டதட்ட 2 வருடத்துக்குப் பிறகு கேமரா முன் நிற்கிறேன். படப்பிடிப்பு நாள் நெருங்க நெருங்க பதற்றம் அதிகரித்துக் கொண்டே இருந்தது. நடிப்பு மறந்துவிட்டது. மூத்த நடிகர்கள் முன் தடுமாறி விடுவேனோ என்று பயந்தேன். ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. சிறிது இடைவெளி எடுத்துக்கொண்டு மீண்டும் இணைகிறேன்”என்றார். இன்று இவரின் பிறந்தநாள். அவருக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் சார்பாக வாழ்த்துக்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்