RK Suresh: ‘ஆமாம் ஆண்ட பரம்பரை தான்’ நடிகர் ஆர்.கே.சுரேஷ் ஆவேச பேச்சு!
‘காடுவெட்டு படத்தில் வன்னியருக்கு ஒரு பாட்டு, நம்மளுக்கு ஒரு பாட்டு படத்தில் வெச்சிருக்கேன். அந்த பாடல் வரியை கேட்டுப்பாருங்க’- ஆர்.கே.சுரேஷ்!
பிரபல வில்லன் நடிகரான ஆர்.கே.சுரேஷ் பாஜகவில் முக்கிய பொறுப்பில் உள்ளார். இதற்கிடையில் தான் சார்ந்த தேவர் சமுதாய ஆதரவாளராகவும் செயல்பட்டு வருகிறார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆர்.கே.சுரேஷ் பேசியதாவது:
‘‘எனக்கு ஒரு முத்திரை குத்தி வெச்சிருக்காங்க. இந்த ஆளு அந்த ஜாதி, அதை மனசில் பதிஞ்சவரு என்று. அது எல்லாருக்கும் தெரியும். எவன் என்ன சொன்னா என்ன என்று கண்ணை மூடிக்கொண்டு தான் நான் சினிமாவுக்குள் வந்துவிட்டேன். என்ன சொல்லுவாங்க? என்னை ஒதுக்கி வைக்கத்தான் முடியும்.
நீ வாய்ப்பு தரவில்லையா? நானே வாய்ப்பை உருவாக்கி கொள்கிறேன். அப்படி கிட்டத்தட்ட , இந்த ஆண்டில் மட்டும் 10 படங்களை விட்டுள்ளேன். சிங்கம் விழுந்தாலும் எழுந்து எழுந்து ஓடுமாம். இவங்க நெனச்சிட்டு இருப்பாங்க, ‘என்னடா சிங்கம் படுத்துட்டே இருக்கு’ என்று.
ஆனால், உண்மை அது இல்லை. சிங்கம் ஏறி நின்று கர்ஜித்தால் போதும்; அது ஓடி இரையை தேட வேண்டியதில்லை. நான் உங்களில் ஒருத்தனாக இருந்து தான் பேசுகிறேன். எங்கப்பா இங்கே பேசும் போது, நான் அங்கே அமர்ந்திருந்தேன். எங்கப்பா ரொம்ப உணர்ச்சியானவர். மக்களுக்காக எவ்வளவோ செய்தவர்.
நான் கற்றதெல்லாம் என் தாத்தா ராமுத்தேவர், எங்கப்பா களஞ்சியத் தேவரிடம் இருந்து தான். நான் கற்றது, என்னிடம் இருந்து என் பரம்பரைக்கு போகும். அது எந்த தொழிலில் இருந்தாலும் இந்த குணம் வரத்தான் செய்யும். சசிகலாவும், எடப்பாடியும், ஓபிஎஸ்.,வும் சரி எல்லாரும் பிரிந்து பிரிந்து நிற்கிறார்கள். ‘என்னிடம் ஒரு கூட்டம் இருக்கு’ என ஆளாளுக்கு சொல்கிறார்கள்.
எல்லா கட்சியிலும் நம்ம சமூக மக்கள் இருக்கிறார்கள். அப்படி எல்லாம் நீங்க பார்க்காதீங்க. காலம் முழுக்க இப்படியே இருக்காதீங்க. உங்களுக்கு யார் நல்லது செய்யுறாங்களோ, அவங்க பின்னாடி நில்லுங்க. ஸ்டாலினா இருக்கட்டும், எடப்பாடியா இருக்கட்டும், ஓபிஎஸ்., கூட இருக்கட்டும், யாரா இருந்தாலும் நம்ம சமுதாயத்திற்கு யார் ஆதரவு தர்றாங்களோ அவங்க பின்னாடி நில்லுங்க.
சும்மா, எதுக்கெடுத்தாலும் எல்லா கொடியையும் பிடிக்கிறீங்க? யாரு வேண்டுமானாலும் பசும்பொன் வரட்டும். எதுக்கு தேவையில்லாமல் சமூகவலைதளங்களில் கமெண்ட்ஸ் போடுறீங்க? எப்போதும் ஒரு கூட்டுக்குள் அடையாதீங்க.
வரக்கூடிய தேர்தலில் ரொம்ப தெளிவா இருங்க. நம்மிடம் நிறைய அமைப்புகள் இருக்கு, கட்சிகள் இருக்கு. நான் இருக்கும் இடத்தில் என் சமூகத்திற்கு சரியான இடம் இல்லை என்றால், நான் ஒரு அமைப்பு ஆரம்பித்துவிடுவேன். நான் அமைப்பு ஆரம்பித்தால், எவ்வளவு இளைஞர்கள் என் பின்னால் வருவார்கள் என்று எனக்கு தெரியும்.
காடுவெட்டி என்கிற படம் பண்ணுகிறேன். கதை சொல்லும் போதே ஒரு பாட்டு வைக்கச் சொன்னேன். ‘ஆண்ட பரம்பரைடா…’ என்கிற பாடலை அந்த இயக்குனரும் வைத்துள்ளார். வன்னியருக்கு ஒரு பாட்டு, நம்மளுக்கு ஒரு பாட்டு படத்தில் வெச்சிருக்கேன். அந்த பாடல் வரியை கேட்டுப்பாருங்க.
விடுதலை சிறுத்தை விடுறாங்களா? அவங்களுக்கு ஒரு டீம் வெச்சிருக்காங்க. நம்மிடம் இல்லாத பசங்களா? நம்மிடம் இல்லாத வழக்கறிஞர்களா? இறங்கினால் பிச்சு எடுத்துடுவாங்க. தெருவுக்கு 10 பேர் இருக்காங்க. கடவுள் எனக்கு கோடி கோடியாய் கொடுத்தால், வீட்டுக்கு ஒரு வக்கீலை நம்ம சமூகத்தில் உருவாக்குவேன்,’’
என்று அந்த நிகழ்ச்சியில் ஆர்.கே.சுரேஷ் பேசியுள்ளார்.
டாபிக்ஸ்