26 Years Of Jeans: 7 அதிசயங்களையும் ஒரே பாடலில் காட்டிய படம்.. ஆஸ்கார் கதவை தட்டிய 'ஜீன்ஸ்' வெளியான நாள் இன்று!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  26 Years Of Jeans: 7 அதிசயங்களையும் ஒரே பாடலில் காட்டிய படம்.. ஆஸ்கார் கதவை தட்டிய 'ஜீன்ஸ்' வெளியான நாள் இன்று!

26 Years Of Jeans: 7 அதிசயங்களையும் ஒரே பாடலில் காட்டிய படம்.. ஆஸ்கார் கதவை தட்டிய 'ஜீன்ஸ்' வெளியான நாள் இன்று!

Karthikeyan S HT Tamil
Apr 24, 2024 06:00 AM IST

26 Years Of Jeans: பிரசாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான 'ஜீன்ஸ்' திரைப்படம் வெளியாகி இன்றோடு (ஏப்ரல் 24) 26 ஆண்டுகள் ஆகின்றது.

ஜீன்ஸ்
ஜீன்ஸ்

காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். நாசர், ராதிகா சரத்குமார், செந்தில், ராஜூ சுந்தரம், லட்சுமி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்தப் படத்தை அசோக் அமிர்தராஜ் தயாரித்திருந்தார். சென்னையில் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு பின்னர் 45 நாட்கள் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் உள்பட உலகம் முழுவதும் நடைபெற்றது.

நாசருக்கு, விஸ்வநாதன், ராமமூர்த்தி என இரட்டை குழந்தைகள். விஸ்வநாதனை ஐஸ்வர்யா ராய் காதலிப்பார். ஆனால், இரட்டையருக்குத்தான் தனது மகன்களை திருமணம் செய்து வைப்பேன் என அடம் பிடிப்பார் நாசர். இதனால் ஐஸ்வர்யா ராயும் இரட்டையராக நடிக்கிறார். அதிலும் இவர்களுக்குள் நடக்கும் காதல் காட்சிகளான இன்றைய தலைமுறை ரசிகர்களையும் கூட வெகுவாகவே கவர்ந்தது.

படம் முழுவதும் பிரமாண்ட காட்சிகள் இடம் பெற்றிருந்ததால் படத்தில் வரும் அனைத்து பாடல்களும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் சூப்பர் ஹிட் அடித்தது. அதிலும், 'பூவூக்குள் ஒளிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்..பாடலில் உலகின் ஏழு அதிசயங்களான சீனப் பெருஞ்சுவர், ஈபில் டவர், தாஜ் மஹால், எகிப்தின் பிரமிட் என அனைத்திலும் பிரமாண்டம் காட்டி இருப்பார் சங்கர். ஜீன்ஸ் பட பாடல்கள் இன்றும் பலரின் பிளேலிஸ்ட்களில் இடம்பெற்று வருகின்றன. 

1998ஆம் ஆண்டில் வெளிவந்த இந்திய படங்களில், 'ஜீன்ஸ்' படம்தான் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டிருந்தது. நவீன தொழில்நுட்பத்தை பாடல்களுக்கு மட்டுமின்றி கதையோட்டத்துக்கும் பயன்படுத்திய முதல் தமிழ் படமும் இதுதான்.

'ஜீன்ஸ்' திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் அன்றைய காலகட்டத்தில் முதல் இடத்தை பிடித்திருந்தது. மேலும் அந்த ஆண்டுக்கான 71-வது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில், சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்ற பிரிவின் கீழ் இந்தியாவில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட படம் என்ற பெருமையும் பெற்றது.

இந்த படத்தின் இன்னும் ஒரு சுவாரஸ்யமும் உள்ளது. ஆம், ஆரம்பத்தில் நடிகர் அப்பாஸை வைத்து ஜீன்ஸ் படத்தை இயக்க ஷங்கர் முடிவு செய்தார். ஆனால், அப்பாஸ் பல படங்களில் நடிக்க கமிட் ஆனதால் கால்ஷீட் பிரச்னையால் படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இதன் பிறகு ஷங்கரின் அடுத்த சாய்ஸ் நடிகர் அஜித் தான். ஆனால் அஜித்துக்கும் கால்ஷீட் பிரச்னை. அந்த காலக்கட்டத்தில் பிஸியாக இருந்த அவராலும் ஜீன்ஸ் படத்தில் நடிக்க முடியவில்லை. அதன் பிறகு, ஷங்கர் பிரசாந்தை அணுகி கதையைச் சொன்னார். ஷங்கரும் ஜீன்ஸை முழு நீள நகைச்சுவை படமாக எடுக்க முடிவு செய்தார்.

இப்படி உருவான ஜீன்ஸ் திரைப்படம் தமிழ் சினிமாவில் முக்கிய படங்களின் வரிசையில் ஒன்றாக இன்றைக்கும் நிலைத்து இருக்கிறது. இத் திரைப்படம் வெளியாகி (ஏப்.24) இன்றுடன் 26 ஆண்டுகள் ஆகின்றது. நேற்று ரிலீசானது போல் உள்ளது. ஆனால் 26 ஆண்டுகள் உருண்டோடியது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. தமிழ் சினிமா இருக்கும் வரை ஏழு அதிசயங்களையும் ஒரே பாடலில் ரசிக்க வைத்த ஜீன்ஸ் திரைப்படத்தின் புகழ் நிலைத்திருக்கும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.