28 Years of Chinna Vathiyar: கூடுவிட்டு கூடு பாயும் அற்புத கலையை கலக்கல் காமெடியாக சொன்ன சின்ன வாத்தியார்
சயினிஸ் பிக்ஷன் பாணி கதையாக இருந்தாலும், சிரிப்பு டாக்டர் கிரேஸி மோகனும், நக்கல் மன்னன் கவுண்டமணியும் இணைந்து காமெடி தர்பார் நிகழ்த்தி ரசிகர்களின் மனம் கவர்ந்த படமாக இருந்து வருகிறது சின்ன வாத்தியார்.
கமல்ஹாசனின் ஆஸ்தான இயக்குநர்களில் ஒருவரான சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் 90ஸ்களில் சிறந்த ஆன்ஸ்க்ரீன் ஜோடியாக இருந்த பிரபு - குஷ்பூ இணைந்து நடித்த படம் சின்ன வாத்தியார். புரோபோசர், காலேஜ் ஸ்டூடண்ட் என இரட்டை வேடத்தில் பிரபு நடித்திருந்த இந்த படத்தில் மற்றொரு ஹீரோயினாக ரஞ்சிதா நடித்திருந்தார்.
புரோபசர் என முதலில் பெயர் வைக்கப்பட்ட இந்த படம், பின்னர் சின்ன வாத்தியார் என மாற்றப்பட்டது.
சித்தர்கள் பின்பற்றிய கூடுவிட்டு கூடு பாயும் அற்புத கலையை பின்னணியாக வைத்து சயின்ஸ் பிக்ஷன் பாணியில் உருவாகியிருந்த இந்தப் படம் 1995இல் வெளியான சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றாகவும் அமைந்தது.
படத்தின் கதைகளம் புதுமையாக இருந்தாலும் சிரிப்பு டாக்டர் என்ற அழைக்கப்பட்ட கிரேஸி மோகன், நக்கல் மன்னன் கவுண்டமணி, செந்தில் ஆகியோரின் காமெடி ரசிகர்களின் ஆல்டைம் பேவரிட்டாக ஆனதோடு, சிறந்த காமெடிக்கான கல்ட் ஸ்டேட்டஸையும் பெற்றுள்ளது.
இந்த படத்தில் இடம்பெறும் காமெடி காட்சிகள், கிரேஸி மோகனின் மாது +2 என்ற மேடை நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கும். இந்த காட்சிகள் அனைத்தும் வயிற்றை புண்ணாக்கியது என்றே கூறலாம். இந்த காட்சிகளை எப்போது பார்த்தாலும் குபீர் சிரிப்பு வருவதை கட்டுப்படுத்த முடியாது.
பரம காது, இல்ல பரம் சாது, சேதுராமன்கிட்ட ரகசியமா, கே சேது இல்ல கே காது போன்ற வசனங்கள் மிகவும் பிரபமாக இன்றும் பேசப்படுகிறது. கிரேஸி மோகனின் ரைமிங், கவுண்டமணியின் டைமிங் என காமெடி விருந்து படைத்திருப்பார்கள்
படத்தில் நடித்திருக்கும் இடிச்சபுளி செல்வராஜ், கோவை சரளா, சின்னி ஜெயந்த் உள்பட அனைவரும் தங்களுக்கு கிடைத்த சிறு கேப்பிலும் காமெடியில் கலக்கியிருப்பார்கள்.
குறுந்தாடியுடன் வரும் புராபோசர் பிரபுவின் கூடுவிட்டு கூடு பாயும் ஆராய்ச்சி காமெடியிலும், இளம் பிரபு, ரஞ்சிதா இடையிலான ரொமாண்ஸ், ஆக்ஷன் போன்றவை இந்த படத்தை வெறும் காமெடடி படம் என்ற வட்டத்துக்குள் வைக்காமல் சிறந்த ஜனரஞ்சக படமாகவே மாற்றியது.
இதுபோன்ற Experimental திரைப்படங்களை இயக்கும் இயக்குநர்களில் ஒருவராக இருந்து வந்தார் சிங்கீதம் சீனிவாச ராவ். வழக்கமாக இந்த முயற்சிகளை கமலுடன் இணைந்து மேற்கொண்டு வந்த அவர், பிரபுவுடன் இணைந்து இந்த படத்தை உருவாக்கியிருப்பதுடன் படத்தையும் ஹிட்டாக்கினார்.
சின்ன வாத்தியார் படத்தில் வாலி பாடல்கள் எழுத இளையராஜா இசையமைப்பில் பாடல்கள் அனைத்து சூப்பர் ஹிட்டாகின. குறிப்பாக கண்மணியே கண்மணியே சொல்லுறதே கேளு என்ற பாடலில் பிரபு பாடுவதும், அதற்கு கவுண்டராக ரஞ்சிதா எரிச்சலுடன் டயலாக் பேசுவதும் என பாடலை புதுமையாக காம்போஸ் செய்திருப்பார்கள். இதற்கான விஷுவலும் அருமையாக அமைத்திருப்பார்கள்.
கூடுவிட்டு கூடு பாய்தல் என்ற சயின்ஸ் பிக்ஷன் பாணி கதையம்சமாக இருந்தாலும் அதில் மனதில் நிற்கும் விதமாக தூக்கலான காமெடியுடன் உருவாக்கப்பட்டிருக்கும் சின்ன வாத்தியார் படம் வெளியாகி இன்றுடன் 28 ஆண்டுகள் ஆகிறது.
டாபிக்ஸ்