தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Actor Parthiban: பார்த்திபன் வாய்ப்பை தடுத்த இயக்குநர்; நிஜ வாழ்வில் திரைக்கதை செய்த பாக்யராஜ் - பார்த்திபன் ஷேரிங்ஸ்!

Actor Parthiban: பார்த்திபன் வாய்ப்பை தடுத்த இயக்குநர்; நிஜ வாழ்வில் திரைக்கதை செய்த பாக்யராஜ் - பார்த்திபன் ஷேரிங்ஸ்!

Kalyani Pandiyan S HT Tamil
May 27, 2023 06:19 AM IST

தமிழ் சினிமாவின் ‘திரைக்கதை மன்னன் என அழைக்கப்படும் பாக்யராஜ் நிஜ வாழ்வில் திரைக்கதை செய்த சம்பவம் ஒன்றை அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பார்த்திபன் பகிர்ந்து இருக்கிறார்.

actor parthiban
actor parthiban

ட்ரெண்டிங் செய்திகள்

அவரின் மனதிற்கு நிறைவாக என்னை பற்றிய ஒரு விஷயம் வர வேண்டும் என்பது என்னுடைய கனவாக இருந்தது. ‘தாவணி கனவுகள்’ படத்தில் ஒரு தபால்காரர் வேடம் இருக்கிறது என்பது எனக்கு தெரியவந்தது. பாக்யராஜ் சாருக்கு நான் நடிக்க வேண்டும் என்ற ஆசைப்பட்டது முன்பிருந்தே தெரியும். 

இன்னொன்று என்னுடைய வசன உச்சரிப்பு அவருக்கு பிடிக்கும். பொதுவாக எப்பொழுதுமே படத்தின் கதையை அந்தப் படத்தின் இயக்குனர் தான் சொல்வார். ஒரு முறை உதவி இயக்குனர்கள் இருக்கும் பொழுது, என்னை கதை சொல்ல சொன்னார். பாக்யராஜ் சார் எப்படி கதை சொல்வாரோ அப்படியே ஜெராக்ஸ் எடுத்தது போல சொன்னேன். அதன் பின்னர் என்னையே கதை சொல்ல வைத்தார். 

எல்லாவற்றையுமே பாக்யராஜ் அமைதியாக கவனித்துக் கொண்டிருந்தார். ‘தாவணிக்கனவுகள்’ படத்தில் இந்த மாதிரியான ஒரு கதாபாத்திரம் என்பது இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டவுடன் நான் விஷ்வாசாரிடமும் ஜி எம் குமார் சாரிடமும் சென்று எனது அப்பா தபால்காரராகத்தான் வாழ்க்கையை தொடங்கினார். அந்த கதாபாத்திரத்தின் பின்னணி எனக்கு ஓரளவுக்கு தெரியும். எனக்கு அந்த கதாபாத்திரம் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன்.

அவர்களும் ஆமாம் நீ நடித்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லிவிட்டு பாக்யராஜிடம்  இது பற்றி பேசலாம் என்றும் கூறினார்கள்.  ‘விதி’ படத்தில் நடிகர் பாக்கியராஜ் தபால்காரராக நடித்திருப்பார். அவர் போட்டுக் கொண்ட அதே உடையை தேடி கண்டுபிடித்து நான் வாங்கி வந்தேன். எனக்கு என்ன அபிப்பிராயம் என்றால் டைரக்டர் போட்டுக் கொண்ட உடையை நாம் போட்டுக் கொண்டால் தானும் அவரை மாதிரி வந்து விடுவேன் என்று எண்ணம்.

இதனிடையே படத்தின் துணை இயக்குனர் கோவிந்தராஜூக்கு அந்த கதாபாத்திரத்தை செய்ய வேண்டும் என்று ஆசை. ஆனால் எனக்கே தெரிந்தது; அவருக்கு அந்த கதாபாத்திரம் பொருத்தம் இல்லை என்பது. அன்றைய நாளும் வந்தது. தபால்காரர் சம்பந்தமான காட்சி என்று எடுக்கப் போகிறோம் என்று சொல்லி ஆயிற்று.

 

எங்கள் எல்லோருக்கும் ஒரே பதற்றம். யார் அந்த கதாபாத்திரத்தை செய்யப் போகிறார் என்று பாக்யராஜ் சார் சொல்லவே இல்லை. நான் வழக்கம் போல உதவி இயக்குனர் வேலை செய்து கொண்டிருக்கிறேன். அப்போது பாக்யராஜ் சார் கோவிந்தராஜை கூப்பிட்டு மூர்த்தி (இப்போது பார்த்திபன்) அந்த தபால்காரர் உடையை போட்டு வருமாறு சொல்ல சொன்னார். கோபமாக வந்த கோவிந்தராஜ் அந்த ஆடையை என் முன்னே தூக்கி எறிந்து இயக்குனர் கூப்பிடுகிறார் என்று காட்டமாக பேசினார். 

அந்த ஆடையை ஒதுக்கி வைத்து விட்டு நான் வைத்திருந்த ஆடையை எடுத்துக் கொண்டு வந்து  அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆயத்தமானேன். பாக்யராஜ் சார் திரைப்படத்தில் மட்டுமல்ல நிஜ வாழ்க்கையிலும் திரைக்கதை செய்வார் என்பது அப்போது தெரிந்தது. கோவிந்தராஜ் தான் இந்த கதாபாத்திரத்தை எனக்கு வரவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது முன்பே அவருக்கு தெரிந்து விட்டது. அதன் பின்னர்தான் அவர் அப்படி சொல்லி இருக்கிறார். 

அந்த படத்தில் சிவாஜி சார் நடித்தார். பாக்யராஜ் சார் தயாரிப்பாளர். நான் பேச வேண்டிய டயலாக் மிகவும் நீண்டது. டயலாக் பேசி முடித்தவுடன் சிவாஜி சார் தன் வாயில் வைத்திருந்த ரத்தத்தை வெளியே கொண்டு வர வேண்டும். இதுதான் காட்சி. சிவாஜி சார் என்னை அழைத்து நான் எனது வாயில் நீண்ட நேரம் இந்த ரத்தத்தை வைத்திருக்க முடியாது. நீ இடையில் எங்காவது டயலாக்கை நிறுத்தி விட்டால் நான் இதை வெளியேற்றும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவேன். உடை நாசமாக போய் விடும்.

அதனால் சரியாக பேசி விடு என்று சொல்லிவிட்டார். நான் பதற்றத்தில் இருந்தாலும் அந்தக்காட்சியை நிறைவாக செய்து முடித்தேன். காட்சியும் ஓகே ஆகிவிட்டது. அப்போது சிவாஜி சார்  என்னிடம் என்ன டிராமாவில் நடித்த அனுபவமா? என்று கேட்டார் நான் ஆமாம் சார் என்று சொன்னேன். சிவாஜி சார் முன்னே அப்படி நடித்ததால் பின்னர் எவ்வளவு பெரிய நடிகர் என் முன்னே இருந்தாலும் அவரை முந்தி நாம் எப்படி நடிக்கிறோம் என்பதிலேயே கவனம் இருந்தது” என்று பேசினார் 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்