தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Actor Munnar Ramesh Interview About Cinema Life

Munnar Ramesh: ‘வேறு தொழிலை பார்த்து போயிடனும்’ மூணார் ரமேஷ் நச்!

Stalin Navaneethakrishnan HT Tamil
Mar 22, 2023 06:00 AM IST

‘சரியான நேரத்தில் திருமணம் ஆகாமல், குழந்தை பெறாமல் சாதித்து என்ன பயன்? செத்து மீன்பிடித்து என்ன பயன்?’

நடிகர் மூணார் ரமேஷ்
நடிகர் மூணார் ரமேஷ்

ட்ரெண்டிங் செய்திகள்

‘‘அது ஒரு கனா காலம் படத்தில் பாலுமகேந்திரா சாரிடம் வெற்றி மாறன் சார் பணியாற்றியதிலிருந்து , இன்று வெற்றி மாறன் சாரின் விடுதலை படம் வரை, எல்லா படங்களிலும் அவரிடம் வேலை செய்திருக்கிறேன். விடுதலை கதைக்களமே கனமான கதைக்களம். அது நடைபெறும் நிலபரப்பு, அது சார்ந்த விசயங்கள் எல்லாம் ரொம்ப கனமானது. 

அங்கு போய் எல்லா நடிகர்களையும் வைத்து ஷூட் செய்வது என்பதே சவாலான விசயம் தான். ரொம்ப கஷ்டமான விசயம் அது. புதுப்பேட்டை படத்தில் எனது கதாபாத்திரம் இன்றும் பேசப்படுகிறது என்றால், அதற்கு காரணம் செல்வராகவன் சார் தான். 

நாம் ஒரு நடிகராக இருக்கலாம், நம்முடைய சுவை, விருப்பம் வேறாக இருக்கும். ஆனால், நம்மை பலவிதமாக கற்பனை செய்து எழுதுவது இயக்குனர்கள் தான். நம்மை நாம் வேறு மாதிரி யோசிக்க முடியாது. இயக்குனர்கள் தான் நம்மை வேறு மாதிரி யோசிக்கிறார்கள். 

அந்த வகையில் நாம் ஒரு நடிகராக இயக்குனரிடம் ஒப்படைத்துவிட்டால், அவர்கள் நம்மை வித்தியாசமான நடிகராக காட்டுகிறார்கள். அவர்கள் தான் எல்லாம். விடுதலை படத்தில் ரிஸ்க் ஷாட் எடுத்தோமா என்றால், ஷூட் போறதே ரிஸ்க் தான். 

வடசென்னை 2ம் பாகம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். வெற்றி மாறன் சாரும், அதில் அதிக ஆர்வமாக இருக்கிறார். ஆனால், அவருடைய செட்யூல் எப்படி இருக்கும் என்றும் தெரியவில்லை. அடுத்து வாடிவாசல் இருக்கிறது, அதன் பிறகு என்ன படம் என்று தெரியவில்லை. ஆனால், கட்டாயம் வடசென்னை 2 இருக்கிறது. ஏனென்றால் அவருக்கு அது ரொம்ப பிடித்த களம். அன்பின் எழுச்சி மிச்சம் இருக்கிறது. அதில் எனக்கும் வாய்ப்பு இருக்கும் என்று நினைக்கிறேன்.

ஒரு கிரியேட்டருக்கு உடலும், மனமும் வலிமையாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் படைப்பை முழுமையாக செய்ய முடியும். அது வெற்றி மாறனிடம் இருக்கிறது. நாம் எதையெல்லாம் செய்வோமோ, அதை எல்லாம் அவர் செய்ய மாட்டார். உணவில் கூட கட்டுப்பாடாக இருப்பார். 

காலம் மாறும் போது சினிமாவும் மாறுகிறது. நான் இளைஞராக இருந்த போது 70 MM தியேட்டரில் போய் படம் பார்ப்போம். இப்போ மால் உள்ளே, ப்ரிவியூ தியேட்டர் மாதிரி தியேட்டர் வைத்திருக்கிறார்கள். வீட்டிலே 100 இன்ச் டிவி வைத்து பார்க்கும் காலத்தில், சிறிய ஸ்கிரீனில் தியேட்டரில் போய் பணம் கொடுத்து ஏன் படம் பார்க்க வேண்டும்? 

பிரம்மாண்ட படங்களை உரிய திரையில் பார்த்தால் தான் மரியாதை. எங்கள் காலத்தில் இந்த மாதிரி இருந்ததில்லை. அப்போ 100 நாட்களுக்கு மேல் படங்கள் ஓடும், அந்த போஸ்டரை பார்த்து தான் எங்களுக்கு பழக்கம். இப்போ, 3 நாள் ஓடினால் போதும் ஓடிடி.,யில் பார்த்தா பாருங்க, பார்க்காட்டி போங்க என்கிறார்கள். 

இன்றும் சினிமாவில் தோற்றுக் கொண்டே இருப்பவர்களை பார்க்கிறேன். ஜெயித்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்கள் பலருக்கு நம்பிக்கை தருகிறார்கள். ஆனால், நிறைய பேர் இன்னும்  செட்டில் ஆகாமல் தோற்றுக் கொண்டே இருக்கிறார்கள். 

எல்லா துறைகளிலும் படித்து வருவது போல சினிமாவிற்கு தேவையான படிப்பையும் படிக்க வேண்டும். மதுரைக்கு போக கோவை பஸ்சில் ஏறக்கூடாது. சரியான நேரத்தில் திருமணம் ஆகாமல், குழந்தை பெறாமல் சாதித்து என்ன பயன்? செத்து மீன்பிடித்து என்ன பயன்? அது சினிமாவில் தப்பான விசயம். நமக்கு செட் ஆகவில்லை என்றால், வேறு தொழிலை பார்த்து போயிடனும்,’’

என்று அந்த பேட்டியில் மூணாறு ரமேஷ் கூறியுள்ளார். 

IPL_Entry_Point

டாபிக்ஸ்