Meesai Rajendran: ‘பாலாவை கார்னர் செய்கிறார்கள்’ மீசை ராஜேந்திரன் ‘நச்’ பேட்டி!
‘பாலா சார் படங்களில் தான் நடிக்க முடியும். கண் அசைவை கூட எந்த இடத்தில் மூட வேண்டும், எந்த இடத்தில் வசனம் பேசிவிட்டு வாயை மூட வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்தையும் கூர்ந்து கவனிப்பார்’
நடிகராக, அரசியல்வாதியாக வலம் வரும் மீசை ராஜேந்திரன் சமீபத்தில் இணையதளத்திற்கு அளித்த சுவாரஸ்யமான பேட்டி இதோ:
‘‘நான் 200க்கும் மேற்பட்ட படங்கள் பண்ணியிருக்கிறேன். என்னை கேட்டால், சிறந்த இயக்குனர் பாலா சார் தான். அதில் மாற்று கருத்தே கிடையாது. ஒரு இயக்குனர், ஒரு நடிகரிடம் எப்படி வேலை வாங்க வேண்டும் ,எப்படி அவரை டயாலாக் பேச வைக்க வேண்டும், எப்படி அவரது உடல்மொழி இருக்க வேண்டும் என்பதை பாலா சாரிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்.
பாலா சார் ஒரு ஜீனியஸ். அவரை தயாரிப்பாளர் தமிழ் மணி குறை சொல்வது சரியல்ல. அவர் நடிகராக அறியப்பட காரணம் பாலா சார் தான். இல்லை என்றால் அவர் தயாரிப்பாளர் தான். நான் கடவுள் படத்தில் அவர் டப்பிங் பேச வைக்கப்படவில்லை அதனால் தேசிய விருது போய் விட்டது என்றால், அவரது குரல் அதற்கு சரியாக இருந்திருக்காது. அதற்காக பாலாவை கார்னர் பண்ணக் கூடாது.
நான் நடிப்பை கற்றுக் கொண்டதே பாலா சாரிடம் தான். நிறைய படங்களில் போலீஸாக வருவோம் கத்துவோம். ஆனால் பாலா சார் படங்களில் தான் நடிக்க முடியும். கண் அசைவை கூட எந்த இடத்தில் மூட வேண்டும், எந்த இடத்தில் வசனம் பேசிவிட்டு வாயை மூட வேண்டும் என்பது உள்ளிட்ட அனைத்தையும் கூர்ந்து கவனிப்பார்.
தனக்கு வேண்டியதை வாங்குவதிலிருந்து அவர் பின்தங்க மாட்டார். நான் கடவுள் படத்தில் போலீஸ் ஸ்டேஷனில் கூத்தாடிகள் அனைவரையும் அழைத்து வந்திருப்பார்கள். நான் விசாரிக்கும் காட்சி. 20 டேக் மேலே வாங்கிவிட்டேன். சிங்கம்புலி சார் அதில் அசோசியேட். அவரிடம் போய், ‘சார் நிறைய டேக் வாங்கிட்டேன்.. எனக்கு வரல.. சார்ட்ட கொஞ்சம் சொல்லுங்க’ என்றேன்.
‘நான் சொல்ல முடியாது, நீயே போய் சொல்லு’ என்று சிங்கம்புலி சொல்லிட்டார். சரின்னு நானே போய் தயங்கி தயங்கி, ‘சார் நிறைய டேக் வாங்கிட்டேன், கஷ்டமா இருக்கு; தெரியல சார் எனக்கு’ என்றேன். டயலாக்கை சொல்லுங்க என்று சொன்னார். ‘வெளியே முருகன்னு ஒருத்தன் இருப்பான், அவன் எங்கே சொல்றானோ அங்கே போய் பிச்சை எடு’ என்று கூறினேன்.
‘என்னோட கண்டண்ட் ‘பிச்சை’ தான், நீங்க எங்கே என்கிற இடத்தில் அழுத்தம் கொடுக்குறீங்க, எனக்கு பிச்சை என்கிற இடத்தில் தான் அழுத்தம் கொடுக்கனும்’ என்று கூறினார். அதுக்கு அப்புறம் தான் நான் அந்த டயலாக் பேசி, ஓகே ஆனது. மற்ற இயக்குனர்களாக இருந்தால், டப்பிங்ல பார்த்துக்கலாம் என முடித்துவிடுவார்கள். ஆனால், பாலா சார் நினைத்ததை வாங்கியே ஆவார்,’’
என்று அந்த பேட்டியில் மீசை ராஜேந்திரன் கூறியுள்ளார்.