Mammootty: "வயநாடு மக்களுக்கு உதவுங்கள்"..15வது பிலிம்பேர் விருதினை பெற்ற நடிகர் மம்மூட்டி வேண்டுகோள்..!
Mammootty: ஹைதராபாத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற பிலிம்பேர் விருதுகள் 2024 -ல், ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதை மம்முட்டி வென்றார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஜேஆர்சி கன்வென்ஷன் சென்டரில் தென்னிந்திய திரைத்துறையினரை கௌரவிக்கும் வகையில் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி கலந்து கொண்டார். இந்த விழாவில் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளியான 'நண்பகல் நேரத்து மயக்கம்' படத்தில் நடித்ததற்காக மம்மூட்டிக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இது நடிகர் மம்மூட்டி பெறும் 15வது பிலிம்பேர் விருதாகும்.
இந்த விருதினைப் பெற்றுக்கொண்ட மம்மூட்டி மிகவும் வருத்தமாகவே காணப்பட்டார். தொடர்ந்து பேசிய அவர், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவுக்குப் பிறகு 'தனது மக்கள்' 'கஷ்டப்படுகிறார்கள்' என்பதால் மகிழ்ச்சியான தருணமாக இருந்திருக்க வேண்டிய தருணம் தனக்கு சோகமானது என்று பகிர்ந்து கொண்டார்.
விக்ரம் மற்றும் சித்தார்த்திடமிருந்து விருதைப் பெற்ற பிறகு, மம்முட்டி இந்த தருணம் தனக்கு எவ்வளவு சிறப்பு வாய்ந்தது என்று பகிர்ந்து கொண்டார். "இது என்னுடைய 15-வது பிலிம்பேர் விருது. தமிழ், மலையாளம் என இரட்டை வேடங்களில் நடித்தேன். நானே தயாரித்தேன். இந்த விருது எனக்கு கிடைக்க காரணமான நண்பகல் நேரத்து படத்தின் இயக்குநர், நடிகர்கள் மற்றும் டெக்னீசியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
'வயநாடு மக்களுக்கு துணை நில்லுங்கள்'
அண்மையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்காக தான் மகிழ்ச்சியை வெளிப்படுத்த முடியாது என்று அவர் மேலும் கூறினார். "இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணமாக இருக்க வேண்டும், ஆனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இல்லை. வயநாட்டில் உயிரிழந்து மக்கள் படும் துயரத்தை நினைத்து வருந்துகிறேன். இந்த நேரத்தில் அவர்களை நான் நினைவு கூர்கிறேன். நீங்கள் அவர்களுக்கு ஆதரவளித்து அவர்களின் வாழ்க்கையை மீண்டும் பெற உதவ வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று அவர் மேலும் கூறினார்.
நண்பகல் நேரத்து மயக்கம்
“நண்பகல் நேரத்து மயக்கம்” ஜனவரி 2023 இல் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள ஒரு புனித இடத்திற்குச் சென்ற பிறகு தமிழனைப் போல நடந்து கொள்ளும் ஒரு மலையாளியின் கதையைச் சொல்கிறது படம்.
பிலிம்பேர் விருது
மம்மூட்டியின் காதல்- தி கோர் திரைப்படம் 2024 பிலிம்பேர் விருதுகளில் சிறந்த படத்திற்கான (விமர்சகர்கள்) விருதை வென்றது. அதே நேரத்தில் அந்த படத்தில் நடித்த ஜோதிகா சிறந்த நடிகைக்கான (விமர்சகர்கள்) விருதை வென்றார். காதல் - தி கோர் படத்தில் இடம்பெற்ற 'என்னும் என் காவல்' பாடலுக்காக அன்வர் அலி சிறந்த பாடல் வரிகளுக்கான விருதை பெற்றுள்ளார். 2018, இருட்டா, ரேகா, புருஷ பிரேதம், துராமுகம், நேரு, ஆர்.டி.எக்ஸ் மற்றும் ஜவனும் முள்ளிப்பும் ஆகிய மலையாள படங்கள் பிற பிரிவுகளில் விருதுகளை வென்றன.
வயநாடு நிலச்சரிவு
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பெய்த பெருமழை காரணமாக கடந்த ஜூலை 30 ஆம் தேதி சூரல்மலை, முண்டக்கை பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையும் ராணுவமும் தொடர்ந்து இன்று 6-வது நாளாக ஈடுபட்டு வருகின்றன. 6-வது நாளாக மீட்புப் பணிகள் தொடரும் நிலையில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 206 ஆக இருக்கிறது. உயிரிழப்பு 320-ஐ தாண்டி இருக்கிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்