‘நடிச்ச காசை தர மாட்றாங்க’ சந்தானம் படத்தின் கசப்பான அனுபவம் பகிர்ந்த கிங்காங்!
King Kong Shankar: சினிமாவில் நம்பிக்கை துரோகம் எளிதாக நடக்கும். சமீபத்தில் ஒரு கம்பெனிக்கு போய் ஒரு நாள் நடித்துவிட்டு மறுநாள் போனால், நான் முதல் நாள் நடிக்கவே இல்லை என்கிறார்கள்.
80களில் இருந்து குழந்தைகளை சிரிக்க வைத்து வருபவர் கிங்காங் என்று அழைக்கப்படும் சங்கர். வடிவேலு அணிக்கு ரீஎண்ட்ரி கொடுத்த அவர், அதன் பின் அங்கும் வாய்ப்புகள் இல்லாமல் சொந்தமாக கலை நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார். இதற்கிடையில் இணையதளத்திற்கு அவர் அளித்த உருக்கமான பேட்டி இதோ:
‘‘நான் எவ்வளவோ படங்கள் பண்ணியிருந்தாலும், வடிவேலு சாருடன் பண்ணிய படங்களில் தான் உடனே ரீச் ஆனது. ஆனால் அவரிடமிருந்து வாய்ப்புகள் வரவில்லை. நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்திற்கு அவரிடம் வாய்ப்பு கேட்டேன், ‘சொல்றேன்..’ என்று சொன்னார்.
அதன் பின் 3 முறை பார்க்க முயற்சித்தேன், அவரை சந்திக்கவே முடியவில்லை. அழைப்பார் என்கிற நம்பிக்கையில் இருந்தேன், ஆனால் அழைக்கவில்லை. படம் வெளியான பின் படத்தையும் பார்த்தேன், நாம இல்லையே என்கிற வருத்தம் இருந்தது. பெரிய பெரிய ஸ்டார் படங்கள் வரும் போது, நாம அதில் இல்லையே என்கிற வருத்தம் இல்லாமல் எப்படி இருக்கும்.
இப்போ எல்லாம், புதுசு புதுசா ஆட்களை போட வேண்டும் என்று நினைக்கிறார்கள். சினிமா வாய்ப்பு இல்லை என்றாலும் ஏதோ ஒரு வழியில் வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறது. கலை நிகழ்ச்சிகள் இருக்கிறது. ‘பெஸ்ட் டான்ஸ்’ என்கிற பெயரில் என்னுடைய சொந்த பல்சுவை நிகழ்ச்சி போய் கொண்டிருக்கிறது. தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறேன். வாழ்க்கைக்கு பிரச்னை இல்லாமல் போகிறது.
பணம் இருக்கும் போது ஒரு மாதிரி, பணம் இல்லாத போது ஒரு மாதிரி நம் நடவடிக்கை மாறக் கூடாது. எப்போதும் ஒரே மாதிரி தான் நாம் இருக்க வேண்டும். வடிவேலு சாரின் செயல்பாடு குறித்து அவரோடு இருந்தவர்கள் கடுமையான விமர்சனத்தை வைத்திருக்கிறார்கள். அவர் அப்படி பண்ணியிருக்க கூடாது. நம்ம ஆளுங்களும், ஒரு ஆதங்கத்தில் அதை வெளியே பேசுகிறார்கள். அதை அவரும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்.
மன்சூர் அலிகான் சார் மகள் திருமண விழாவிற்கு நான் போயிருந்தேன். எல்லா நடிகர்களும் வந்திருந்தார்கள். திடீரென மண்டபம் பரபரப்பானது, பார்த்தால் விஜயகாந்த் சார் வந்திருந்தார். போய் சாருக்கு ஒரு வணக்கம் போடலாம் என அடித்து பிடித்து உள்ளே போய், தூரத்தில் நின்று வணக்கம் போட்டேன்.
‘பக்கத்துல வா…’ என்று அழைத்து போட்டோ எடுத்துக் கொண்டார். அமர வைத்து ரொம்ப நேரம் பேசினார். அப்போது சொன்னார், ‘11 மணிக்கு மேல வடிவேலு காமெடி தான் பார்ப்பேன்’ என்று, அவ்வளவு பெருமையாக பேசினார். விஜயகாந்த்-வடிவேலு ரெண்டு பேருமே உள்ளுக்குள் நல்ல மரியாதை வைத்திருக்கிறார்கள். வெளியில் எப்படியோ!
நான் பல நடிகர்களை போல நடிப்பேன். ‘விஜயகாந்த் சார் மாதிரி பண்றா’ என வடிவேலு அடிக்கடி விரும்பி கேட்பார், ரசிப்பார்.
சினிமாவில் நம்பிக்கை துரோகம் எளிதாக நடக்கும். சமீபத்தில் ஒரு கம்பெனிக்கு போய் ஒரு நாள் நடித்துவிட்டு மறுநாள் போனால், நான் முதல் நாள் நடிக்கவே இல்லை என்கிறார்கள். இத்தனைக்கும் அங்கு எடுத்த போட்டோ முதற்கொண்டு ஆதாரத்தை காட்டினேன். ஆனாலும், கடைசி வரை மறுத்து, முதல் நாள் ஷூட்டிங் சம்பளம் தர மறுத்துவிட்டனர். வேறுயாருமில்லை, அது நடிகர் சந்தானம் சார் படம் தான். இதை வெளியே சொன்னால், பணம் கொடுத்தாவர்களை விட்டுவிட்டு, கேட்ட என் மீது பிரச்னை வரும்,’’
என்று அந்த பேட்டியில் கிங்காங் கூறியுள்ளார்.