'விஜயகாந்த் தான் உண்மையான சூப்பர்ஸ்டார் '.. நடிகர் கருணாஸ் ஓப்பன் பேச்சு!
Vijaykanth Memorial Tribute: நடிகர் விஜயகாந்த் தான் உண்மையான சூப்பர் ஸ்டார் என கருணாஸ் விஜயகாந்த் நினைவேந்தல் நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு பேசியுள்ளார்.
நடிகரும், தேமுதிக நிறுவனத் தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி காலமானார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ஜனவரி 19 ஆம் தேதி நினைவேந்தல் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, மறைந்த நடிகர் விஜயகாந்த்தின் நினைவேந்தல் கூட்டம் சென்னை, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் இன்று (ஜன.19) நடைபெற்றது. இதில், கமல்ஹாசன், சரத்குமார், ராதாரவி, நாசர், விக்ரம், கார்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், ஜெயம் ரவி, சத்யராஜ், தேவயானி, ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட நட்சத்திரங்கள் மேடையில் வைக்கப்பட்டிருந்த விஜயகாந்தின் திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய நடிகர் கருணாஸ், " 1987 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சின்ன கிராமத்தில் இருந்து சென்னைக்கு நான் முதன்முதலில் வந்தேன். விஜயகாந்தின் உதவியாளர் சுப்பையா மூலம் எனக்கு அவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதுவரைக்கும் இதை எங்கேயும் நான் வெளிப்படுத்திக்கொண்டது கிடையாது.
திரைத்துறைக்கு வந்த பிறகு நெய்வேலி போராட்டம், நடிகர் சங்க கடனை அடைக்கும் நிகழ்ச்சிகளில் விஜயகாந்துடன் பங்கேற்றுள்ளேன். விஜயகாந்துடன் சுதேசி என்ற படத்தில் நடித்துள்ளேன். அந்த படத்தில் நடிக்கும் போது எனக்கு நிறைய அறிவுரைகளை வழங்கினார். நிறைய படங்களில் நடித்தால்தான் உனக்கென்று ஒருபடம் வொர்க்அவுட் ஆகும் என்று விஜயகாந்த் அறிவுரை வழங்கினார்.
என்னை போன்ற வளர்ந்து வரும் நடிகருக்கு உதவி பண்ணது விஜயகாந்தின் நல்ல குணத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டு. எண்ணம் நல்லதாக இருந்தால் யாராக இருந்தாலும் விஜயகாந்த் போன்று ஆகலாம். இந்தத் துறையில் 23 ஆண்டுகளில் 160-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளேன். பெரிய நடிகர்களுடனும் நடித்திருக்கிறேன். ஆனால், நான் பார்த்த நடிகர்களில் உண்மையான சூப்பர்ஸ்டார் விஜயகாந்த் தான்." என பேசினார்.
முன்னதாக பேசிய நடிகர் ஜெயம் ரவி, "சத்ரியனுக்கு சாவே இல்லை என அவருடைய வசனத்தைத் தான் இங்கு சொல்ல வேண்டியுள்ளது. பள்ளி பாடப்புத்தகத்தில் கேப்டன் பற்றி இடம்பெற வேண்டும். மனிதன் என்றால் எப்படி வாழ வேண்டும் என அந்த பாடம் இருக்க வேண்டும்." என கூறினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்