27 Years Of Pistha: மறக்க முடியுமா?கார்த்திக் - நக்மாவின் கலக்கல் நடிப்பில் உருவான 'பிஸ்தா' ரிலீஸான நாள் இன்று!
27 Years Of Pistha: வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் பிஸ்தா திரைப்படத்தின் முதல் பாதி நக்மாவின் ஆட்டம் ரசிக்க வைக்கும். இரண்டாம் பாதியில் கார்த்திக்கின் ஆட்டமும் ரசிகர்களை கவர்திருக்கும். காமெடி சரவெடிகளை கொளுத்திப் போட்ட 'பிஸ்தா' படத்தை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
90-களில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார் வரிசையில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருந்தார் நடிகர் கார்த்திக். கதாபாத்திரத்தை உள்வாங்கி, ரொம்பவே யதார்த்தமாக நடிப்பதில் கில்லாடி என்று பேரெடுத்தவர். நவரசங்களை அள்ளித் தெளிக்கும் நாயகனாக வலம் வந்த கார்த்திக்கின் நடிப்பில் அன்றைய காலகட்டத்தில் வெளியான பல திரைப்படங்களை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். அந்த வரிசையில் 'உள்ளத்தை அள்ளித்தா', 'மேட்டுக்குடி' போன்று காமெடி சரவெடிகளை கொளுத்திப் போட்ட 'பிஸ்தா' படத்தை பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.
நடிகர், நடிகைகள்
அப்பாவி மற்றும் அடாவடி என இரு முகம் காட்டும் கதாபாத்திரத்தில் கார்த்திக் அசத்தி இருப்பார். பிரமிட் நடராஜன் தயாரித்த இப்படத்திற்கு கென்னடி கதை, வசனம் எழுதியிருந்தார். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய இத்திரைப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நக்மா நடித்திருந்தார். மணிவண்ணன், மவுலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
கதை சுருக்கம்
சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் இருக்கும் கார்த்திக்கின் நல்ல குணத்தை தெரிந்துகொண்டு அவரை, ஊட்டியில் இருக்கும் தனது தொழிற்சாலைக்கு மவுலி மேனேஜராக்குகிறார். மவுலியின் மகளான நக்மா, தொழிற்சாலையில் யாரும் வேலை செய்யக் கூடாது என கட்டளையிட்டு இருக்கிறார். வீட்டில் இருக்கும் பொருட்களை உடைக்கிறார். நக்மாவுக்கும், கார்த்திக்கும் அடிக்கடி வாக்குவாதம் வருகிறது.
குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் கதை
திருமணம் செய்து கொண்டால் தான் தனக்கு சொத்து கிடைக்கும் என்ற உண்மை நக்மாவுக்கு தெரிய வருகிறது. இதையடுத்து, அப்பாவியாக இருக்கும் கார்த்திக்கை நக்மா திருமணம் செய்துகொள்கிறார். திருமணத்துக்கு பின் தான், கார்த்திக் அப்பாவி அல்ல, அடாவடி செய்பவர் என்பது தெரிய வருகிறது. கார்த்திக், கொஞ்சம் கொஞ்சமாக நக்மாவின் திமிறை அடக்கி, எப்படி அவரது குணங்களை மாற்றுகிறார் என்பது தான் மீதிக்கதை. வயிறு குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் கதையில் முதல் பாதி நக்மாவின் ஆட்டம் ரசிக்க வைக்கும். இரண்டாம் பாதியில் கார்த்திக்கின் ஆட்டமும் ரசிகர்களை கவர்திருக்கும்.
பட்டையை கிளப்பிய பாடல்கள்
எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் 'கண்களிலே ஒரு காதல் நிலா..வந்தது வந்தது வீதி உலா', எட்டி போன என்னை கட்டி போட்ட…ஒரு கெட்டிக்காரி இவளா…கட்டில் மீது இவள் கட்டி ஆடுவது…திட்டம் போட்ட செயலா…'என்ற பாடல் சிறப்பாக அமைந்திருக்கும். இதேபோல், 'கோழிக்கறி கொண்டு வரட்டா', 'சரணம் ஐயப்பா' பாடல்கள் சிறப்பாக அமைந்திருந்தன. குறிப்பாக பிஸ்தா..பிஸ்தா என்ற பின்னணி இசை பட்டையை கிளப்பியது. இந்த பின்னணி இசை அன்றைய டூரிங் டாக்கிஸ் தியேட்டரை அலறவிட்டுள்ளது.
27ம் ஆண்டில் பிஸ்தா
திகட்டாத நகைச்சுவையை ரசிகர்களுக்கு விருந்தாக அளித்த 'பிஸ்தா' 1997 ஆம் ஆண்டு இதே மே 9 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இப்படம் வெளிவந்து இன்றோடு 27 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் 100 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிய இப்படம் வெளி வந்து இன்றோடு 27 வருடங்களாகின்றன. ஆண்டுகள் பல கடந்தாலும் ரசிகர்களின் மனதில் நேற்று ரிலீசானது போல் உள்ளது. ஆனால், 27 ஆண்டுகள் உருண்டோடியது என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. காலங்கள் உருண்டோடினாலும் கார்த்திக்கின் நடிப்பில் இந்தப்படமும் ஒரு மிகப்பெரிய மைல்கல்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்